குளிர் காலத்தில் மாடுகளைத் தாக்கும் படர் தாமரை நோயும், தடுப்புமுறைகளும்

மாடுகள் தோல் நோயால் பாதிப்படையும் பொழுது, உடம்பில் அரிப்பு, எரிச்சல் மற்றும் அதிகப்படியான உபாதையை உண்டாக்கி மாடுகளின் உற்பத்தியை பெரிதளவில் பாதித்து மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மாடுகள் மற்ற நோய்களால் பாதிப்படைந்தால் குணப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முக்கியத்துவத்தை மாடுகள் வளர்ப்போர் தோல் நோய் ஏற்பட்டால் கொடுப்பதில்லை. தோல் நோயானது ஒரு தொற்று நோயானதால் ஒரு மாட்டிற்கு நோய் வந்தாலும் மற்ற மாடுகளுக்கும் மிக விரைவாகப் பரவக் கூடியது. ஆரம்ப நிலையிலேயே தோல் நோயைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளித்தால் தோல் நோயை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.

மாடுகள் பலவகையான தோல் நோய்களால் பாதிக்கப்பட்டாலும் முக்கியமாக படர் தாமரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நோயானது மாடுகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு தோல் நோயாகையால் மாடுகளை வைத்திருப்போர் படர் தாமரை நோய் வருவதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறைகளைத் தெரிந்து கொண்டு தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொண்டால் படர் தாமரை நோயின் பாதிப்பிலிருந்து மாடுகளைக் காப்பாற்றலாம்.

படர் தாமரை நோய்க்கான காரணம்:

இந்தவகைத் தோல் நோயானது மாடுகளில் “ட்ரைகோபைடான் வெருகோசா” என்னும் பூஞ்சைக் காளானால் ஏற்படுகிறது. இளம் கன்றுகளையும் வயது முதிர்ந்த மாடுகளையும் அதிகம் பாதிக்கும். சரியான பராமரிப்பில்லாத கறவை மாட்டுப் பண்ணைகளில் தான் இந்தநோய் அதிகம் காணப்படும்.

நோய் பரவும் முறை:

  1. படர் தாமரை தோல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மாட்டிலிருந்து பிற மாடுகளுக்கு நேரடித் தொடர்பின் மூலம் எளிதில் பரவும்.
  2. மேலும் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு உபயோகப்படுத்திய பாத்திரங்கள், உபகரணங்கள், சாப்பிட்டு மீந்துபோன தீவனங்கள் மூலம் பரவும்.
  3. இளம் கிடேரிகள், கன்றுகள் மற்றும்; உடல் நலிந்த இதரநோய்களால் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிகமான ஈரப்பதம் கொண்ட சுற்றுப்புறச்சூழலில் இருக்கும் பொழுது இந்த நோய் உண்டாகிறது.
  4. போதிய இடவசதியின்றி அதிகப்படியான மாடுகளை ஒரே கொட்டகையில் வைத்திருந்தாலும், போதிய சூரிய வெளிச்சம் கொட்டகையினுள் விழாமல் இருந்தாலும் இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்:

பாதிக்கப்பட்ட மாடுகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வட்டவட்டமாக முடி உதிர்ந்து வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறம் போல் செதில்கள் காணப்படும்.
இந்த தோல் நோய் அரிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
மிகவும் பாதிக்கப்பட்ட மாடுகளில் உடல் முழுவதும் வட்டவட்டமாக ஒன்று முதல் பத்து செ.மீ விட்ட அளவில் முடி உதிர்ந்து காணப்படும்;. ஆனாலும் தலை, காதுமடல், கண்ணைச் சுற்றியுள்ள பகுதி; மற்றும் கழுத்துப் பகுதியில் மிக அதிகமாகக் காணப்படும்.

சிகிச்சைமுறை:

  1. முதலில் பாதிக்கப்பட்ட மாட்டை தனியே பிரித்து வைத்து பராமரிப்பும் சிகிச்சையும் தரவேண்டும்.
  2. க்ளோர்ஹெக்சிடின் என்ற மருந்து ஒரு பங்கு தண்ணீர் 4 பங்கு என்ற அளவில் கலந்து பாதிக்கப்பட்ட தோலில் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் தொடர்ந்து தடவ வேண்டும்.
  3. “டிங்சர் அயோடின்” என்ற மருந்தையும் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் தடவலாம்.
  4. கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டமாடுகளுக்கு “விட்ஃபீல்டு” களிம்பை வெளிப்பூச்சாக ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதமும் “க்ரிசியோவின்” என்னும் மாத்திரையை தோல் நோய் குணமாகும் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
  5. தோலின் மேல் உள்ள பக்கை நன்கு துடைத்து விட்டு களிம்பு தடவ வேண்டும். பக்குடன் மருந்தை தடவினால் மருந்தானது தோலுக்கடியில் ஊடுருவாது.
  6. மாடுகளின் மீது சூரிய வெளிச்சம் நன்கு விழுமாறு செய்ய வேண்டும்.

தடுப்புமுறைகள்:

  1. சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருக்கவேண்டும்.
  2. கொட்டகையையும், சுற்றியுள்ள இடங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  3. மாடுகளுக்குப் போதுமான இடவசதி கொடுக்க வேண்டும்.
  4. நல்ல சூரிய வெளிச்சம் கொட்டகைக்குள் விழுமாறு கொட்டகை அமைக்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்