கினிக்கோழி வளர்ப்பில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம்

கினிக்கோழிகளின் தாயகம் ஆப்ரிக்கா தேசமென்றாலும் உலகம் முழுவதும் மக்கள் கினிக்கோழிகளை வீடுகளில் வளர்க்கின்றனர். சமீபகாலமாகத்தான் கினிக்கோழி வளர்ப்புத் தொழிலானது தமிழ்நாட்டில் விவசாயிகளிடையே பிரபலம் அடைந்து வருகிறது. கினிக்கோழிகள் இறைச்சிக்கென அதிகம் வளர்க்கப்படுகின்றன. கினிக்கோழிகள் நிலங்களில் சிதறிக் கிடக்கும் தானியங்கள் புழுக்கள், உண்ணிகள் மற்றும் பூச்சிகளை சாப்பிட்டு வளரக்கூடியவை.

அதனால் புறக்கடையில், தோட்டத்தில் கினிக்கோழிகளை மற்ற கால்நடைகளான ஆடுகள் மற்றும் மாடுகளுடன் வளர்க்கும் பொழுது மற்ற கால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமல் கினிக் கோழிகள் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் அன்னியர்கள் யாரும் உள்ளே நுழைந்தால் உடனடியாக பெருத்த குரல் கொடுக்கும். கினிக்கோழிகள் பராமரிப்பு மிகவும் எளிது. இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

எந்த விதமான சூழ்நிலையிலும் கினிக்;கோழிகள் வெற்றிகரமாக வளர்ந்து அதிக இலாபத்தைத் தருவதால் நம் நாட்டின் எந்தப் பகுதியிலும் கினிக்;கோழிகளை எளிதில் வளர்க்கலாம்.புரதத் தேவை அதிகமுள்ள வருங்காலங்களில் கினிக் கோழி இறைச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதனால் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மகளிர் விற்பனை வாய்ப்புள்ள கினிக்கோழிகளை புறக்கடை வளர்ப்பு முறையில் குறைந்த செலவில், எளிய பராமரிப்பு முறைகளைக் கையாண்டு வளர்ப்பதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்

கினிக்கோழிகளின் சிறப்புகள் :

1. எந்த தட்ப வெப்பநிலையையும் தாங்கக் கூடியது.
2. கினிக் கோழிகளை வளர்ப்பதற்கு அதிகம் செலவு செய்து கொட்டகை போடத்தேவையில்லை.
3. நல்ல மேய்ச்சல் திறன் கொண்டது.
4. தீவனக் கழிவுகளை உண்டு இறைச்சியை உண்டு பண்ணக் கூடியது.
5. முட்டை ஓடு கெட்டியானதாக இருப்பதால் நீண்ட நாட்கள் கெடாமலும், உடையாமலும்
பாதுகாக்க முடியும்.
6. கினிக்கோழியின் எலும்புகளின் எடை குறைவாக இருப்பதால் அதிக எடையுள்ள இறைச்சி (80
சதவிகிதம்) கிடைக்கிறது.
7. கினிக் கோழிகளின் இறைச்சி அதிக வைட்டமின் சத்துகளையும், அதிக புரதச் சத்தையும் (23
சதவிகிதம்),குறைந்த கொழுப்புச் சத்தையும் (4 சதவிகிதம்) கொண்டது. இந்த இறைச்சியினை
கோழி இறைச்சியுடன் ஒப்பிடும் பொழுது கோழி இறைச்சியில் புரதச் சத்து 21 சதவிகிதமும்
கொழுப்பு 7 சதவிகிதமும் உள்ளது.
8. கினிக் கோழியின் இறைச்சி சுவை மிக்கது.

கினிக் கோழிகளின் இரகங்கள்:
சிவப்பு தாடை கினிக்கோழி: இந்த இரக கினிக்கோழிகள் உலகம் முழுவதும் பரவலாக
காணப்படுகின்றன. பெயருக்கு ஏற்றாற் போல் இதனுடைய தாடை சிவப்பு நிறத்துடன்
இருக்கும். வளர்ந்த கினிக் கோழிகள் ஒவ்வொன்றும் சுமார் 2 கிலோ கிராம் எடை வரை
இருக்கும். கால்கள் கருப்பு நிறத்துடனும் உடலில் உள்ள இறகுகள் சாம்பல் நிறத்துடன் நீல
நிறம் கலந்தாற் போல் காணப்படும். இறகுகளின் நுனியில் வெள்ளை நிறப் பொட்டு
காணப்படும்.

நீல நிறத் தாடை கினிக்கோழி: இந்த இரக கினிக்கோழிகளின் தாடை நீல நிறமாக இருக்கும்.
இறகுகள், கால்களின் நிறமும் உடல் எடையும் சிவப்பு தாடை கினிக் கோழிகளைப் போலவே
இருக்கும்.

கினிக்கோழிகளின் பண்புகள்:
கினிக் கோழிகள் அச்சமுறும் சமயத்தில் மரங்களின் மீது ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கொள்ளும் பழக்கம் உடையவை. ஆகவே கொட்டகைகளில் வளர்க்கும் சமயத்தில் உயரமான இடங்களில் கொம்புகளை கட்டிவிட்டு அதன் மேல் கினிக் கோழிகள் அமர வசதிகள் செய்து கொடுக்கலாம். இது போன்ற வசதி செய்து கொடுப்பதால் சிறிய இடத்தில் அதிக கினிக் கோழிகளை வளர்க்க ஏதுவாகிறது.

வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும் பட்சத்தில் இவைகள் உயரமான மரங்களின் கிளைகளில் உட்கார்ந்து கொள்ளும். இவைகள் புழு, பூச்சிகள் மற்றும் சிதறிக் கிடக்கும் தானியங்களையும் உணவாக உட்கொள்கின்றன. காலில் உள்ள விரல்களால் இவைகள் கிளறுவதில்லை. ஆனால் வாயில் உள்ள அலகைக் கொண்டு எளிதில் எந்த ஒரு கடினமான பொருளையும், முதிர்ந்த இலைகளையும் கிழித்து விடும்.

அலகால் தீவனத்தை அதிகமாக கிளறும் பழக்கம் இருப்பதால் தீவனத் தட்டுகளில் தீவனத்தை அதிகமாகப் போட்டு வைத்தால் சிறிது நேரத்தில் தீவனம் முழுவதையும் சிதறி அடித்து விடும். ஆகவே தீவனத்தைக் குறைந்த அளவில் தீவனத் தட்டுக்களில் போட்டு உண்ண வைக்கலாம். தீவனத் தட்டுக்களில் தீவனம் தீரத் தீரப் போடுவதன் மூலம்; தீவனம் வீணாவதைத் தடுக்க முடியும்.

வளர்ப்பு முறை:
கினிக்கோழிகளை வீட்டின் புறக் கடையில் அல்லது தோப்புகளில் அல்லது தோட்டத்தில் விட்டு வளர்க்கலாம். புறக்கடையில் உள்ள புல், பூண்டு, புழு, பூச்சிகளைத் தின்று கினிக்கோழிகள் வளரும். கினிக்கோழிகளுக்கெனச் சிறப்பான கட்டிடம் ஏதும் தேவை இல்;லை. கினிக்கோழிகள் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும் சமயத்தில் உயரமான மரக்கிளைகளில் இரவு நேரங்களில் உட்கார்ந்து இருக்கும்.

அதிக எண்ணிக்கையில் வளர்;க்கும் பொழுது நிழலுக்கு ஒதுங்க, ஓய்வெடுக்க செலவு குறைவான ஒரு கீற்றுக் கொட்டகை தோட்டத்திலோ அல்லது புறக்கடையிலோ அமைக்கலாம். குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் எப்பொழுதும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

கினிக் கோழிகள் அதிக வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியவை. பகல் நேரத்தில் வெயிலில் கூட கூடைகளிலும், கம்பி வலை கூண்டுகளிலும் கினிக் கோழிகளை அடைத்து ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு எடுத்துச் சென்றாலும் ஓரளவுக்கு வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடியது. இக்கோழிகள் அதிக குளிரையும் தாங்க வல்லது.

இவைகள் மரங்களின் கிளைகளில் அமர்ந்து கொள்வதால் அதிகமான தரை ஈரத்தை எளிதில் சமாளித்துக் கொள்ளுகின்றன. மரங்கள் இல்லாமல் இருந்தால், அதிக மழை பெய்யும் பொழுது கினிக் கோழிகளை கொட்டகையில் அடைத்து மழையில் நனையாமல் பாதுகாப்புக் கொடுக்கும் பட்சத்தில் இறப்புகள் ஏற்படுவதில்லை.

கொட்டகையுடன் கூடிய திறந்த வெளியில் கினிக் கோழிகளை வளர்க்கலாம். திறந்த வெளியினை நாலாபுறமும்; கம்பிவலை அடித்து விட்டு மேல் புறமாக பறக்காமல் இருக்கவும் கம்பி வலை அடித்து விடலாம். 100 கினிக் கோழிகள் வளர்க்க கொட்டகையானது 15 அடி நீளம் 15 அடி அகலம் கொண்டதாகவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கம்பி வலை பொருந்திய திறந்தவெளி 20 அடி நீளம் 20 அடி அகலம் 6 அடி உயரம் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

தீவனப் பராமரிப்பு:
கினிக்கோழிகளுக்கெனத் தனியாகத் தீவனம் கடைகளில் கிடைப்பதில்லை. கினிக்கோழிகள் நம் நாட்டின் கிராமப்புறங்களில் வீட்டுத் தோட்டங்களில் நாள் முழுவதும் வெளியே சுற்றித் திரிந்து தனது தீவன தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. ஒரு வளர்ந்த கினிக்கோழி ஒரு நாளைக்கு 200 கிராம் பசும்புற்களையும், களைகளையும் தீவனமாக உண்ணும்.

கினிக்கோழிக்குஞ்சுகள் நல்ல வளர்ச்சி பெறவும், குஞ்சுகளில் இறப்பைத் தடுக்கவும் கினிக்கோழிக்குஞ்சுகளுக்கு அதிக புரதச் சத்துக் கொண்ட தீவனம் தேவைப்படும். கடைகளில் கிடைக்கும் இறைச்சிக் கோழித் தீவனத்தைக் கொண்டு நாமே அதிக புரதச் சத்து கொண்ட தீவனமாக மாற்ற முடியும். 10 கிலோ கோழி ஆரம்பத் தீவனத்துடன் 1 கிலோ எள்ளுப் பிண்ணாக்கும் ஒரு கிலோ உப்பு இல்லாத மீன் தூளையும் சேர்த்து கலந்து குஞ்சுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.

இளங்குஞ்சுகளாக இருக்கும் சமயத்திலேயே தீவனத் தட்டுகளில் தீவனத்தையும், தண்ணீர் தட்டுகளில் தண்ணீரையம் கொடுத்துப் பழக்கப்படுத்தி விட வேண்டும். வளர்ந்த கினிக்கோழிகளுக்குத் தீவனம் போதுமான அளவு தோட்டத்தில் புறக்கடையில் கிடைத்தால் தீவனம் போட வேண்டிய அவசியமில்லை. கினிக்கோழிகள் முட்டைகளை இடும் சமயத்திலும், மேய்ச்சல் குறைவாக உள்ள காலத்திலும் கோழித் தீவனம் 2 பங்கும் கோதுமைத் தவிடு 3 பங்கும், அரிசித் தவிடு 3 பங்கும் கலந்து தீவனமாகக் கொடுக்க வேண்டும்.

இனப்பெருக்கம்:
ஆண் கினிக்கோழி பெண் கினிக்கோழியை விட எடையில் குறைவாக காணப்படும். சாதாரணமாக பார்க்கும் பொழுது எடையைக் கொண்டு பால் இனத்தை பிரிக்க இயலாது. பெண் கினிக்கோழிகளின் தாடை சிறியதாகவும், ஆண் கினிக்கோழிகளின் தாடை பெரியதாகவும் இருக்கும். ஆனால் இதை வைத்தும் நாம் ஆண் பெண் கினிக்கோழிகளை வேறுபடுத்துவது மிகக் கடினம். கினிக்கோழிகள் எழுப்பும் சத்தத்தைக் கொண்டு நாம் வேறுபடுத்திப் பார்க்கலாம். பெண் கினிக்கோழிகள் குரல் எழுப்பும் பொழுது இரு முறை கத்தும் ஆனால் ஆண் கினிக்கோழிகள் ஒரு முறை பெரும் குரல் எழுப்பும்.

கினிக்கோழிகள் சாதாரணமாக 30 வார வயதில் பருவமடைந்து முட்டையிடத் தொடங்குகின்றன. தமிழ்நாட்டில் மழைக் காலங்களிலும் அதனைத் தொடந்து வரக்கூடிய பனிக் காலத்திலும் அதிகமான முட்டைகள் இடுகின்றன. தொடர்ந்து தரமான தானியங்களையும் புரதச் சத்து மிக்க தீவனத்தையும் அளித்தால் அதிக முட்டைகள் பெறலாம்.

கூண்டுகளில் அல்லது வீடுகளில் வளர்க்கப்படும் கினிக்கோழிகள் பருவமடைந்த பிறகு 40 வாரங்களுக்கு முட்டையிடும். ஒரு கினிக்கோழி ஓர் ஆண்டில் 100 முதல் 120 முட்டைகள் வரை இடுகின்றது. அவைகளில் 70 முதல் 75 சதவிகிதம் முட்டைகள் அடை முட்டைகளாக இருக்கும். இதிலிருந்து 70 முதல் 80 சதவிகிதம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் கிடைக்கும். கினிக்கோழியின் முட்டைகள் 38 முதல் 40 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

முட்டை ஓடு மிகவும் கெட்டியானதாவும் முட்டை ஓட்டில் உள்ள துவாரங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அதிக நாட்கள் முட்டைகளை சேமித்து வைக்க இயலும். கினிக்கோழிகள் தமது முட்டைகளை தாமே அடை காத்து குஞ்சுகளைப் பொரிக்கும் திறன் கொண்டது. சில பெண் கினிக்கோழிகள் அடைகாப்பதில் ஈடுபாடு காண்பிப்பதில்லை. அதனால் பெண் கினிக்கோழிகளுக்குப் பதிலாக அடைகாக்கும் பருவத்திலிருக்கும் நாட்டுக் கோழிகளை வைத்து கினிக்கோழி முட்டைகளை அடைகாக்கலாம்.

அல்லது இன்குபேட்டர் எனப்படும் மின்சாரக் குஞ்சு பொரிக்கும் கருவி கொண்டும் குஞ்சு பொரிக்கலாம். 100 கினிக்;கோழி முட்டைகளை அடைகாப்பதற்கென்றே சிறிய மின்சாரக் குஞ்சு பொரிக்கும் கருவிகள் கிடைக்கின்றன. அதில் நாம் 100 முட்டைகள் வரை எத்தனை முட்டைகளை வேண்டுமானாலும் அடைகாக்க பயன்படுத்தலாம். கினிக்கோழிகளின் அடைக்காலம் 26 முதல் 28 நாட்களாகும்.

குஞ்சுகள் பராமரிப்பு:
பொரித்த ஒரு கினிக்கோழிக் குஞ்சின் எடை 17 முதல் 20 கிராம் இருக்கும். பராமரிப்பு சரியில்லையெனில் கினிக்கோழிக் குஞ்சுகளில் இறப்பு அதிகம் காணப்படும். கினிக்கோழிக்குஞ்சுகள் ஈரத்தில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கினிக்கோழிக் குஞ்சுகள் தண்ணீர் பாத்திரங்களில் உள்ள தண்ணீரில் மூழ்கி அதிக அளவில் இறக்க நேரிடும்.

இதனைத் தவிர்க்க தண்ணீர் பாத்திரங்களில் கூழாங்கற்களைப் போட்டு வைக்க வேண்டும். கினிக்கோழிக் குஞ்சுகளில் இறப்பைத் தடுக்க அதிக புரதச் சத்துக் கொண்ட தீவனம் தேவைப்படும். கடைகளில் கிடைக்கும் இறைச்சிக் கோழித் தீவனத்தைக் கொண்டு நாமே அதிக புரதச் சத்து கொண்ட தீவனமாக மாற்ற முடியும். 10 கிலோ கோழி ஆரம்பத் தீவனத்துடன் 1 கிலோ எள்ளுப் பிண்ணாக்கும் ஒரு கிலோ உப்பு இல்லாத மீன் தூளையும் சேர்த்து கலந்து குஞ்சுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.

இரண்டு மாதம் வரை நாய், பூனைகளுக்குச் சிக்காமல் கொட்டகைக்குள்ளேயே தடுப்பு அமைத்து போதிய தீவனம் அளித்து வளர்த்தால் கினிக்கோழிக் குஞ்சுகளில் இறப்பை பெருமளவில் தடுக்கலாம். 2 மாத வயதிற்குப் பின் கினிககோழிகள் வெளியே மேய்ந்து திரிந்து தீவனம் எடுக்க அனுமதிக்கலாம். 2 மாத வயதில் கினிக் கோழியின் எடை 500 முதல் 550 கிராம் இருக்கும்.

நோய்களும் தடுப்பு முறைகளும்:
கினிக்கோழிகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் நோய்த் தாக்குதல் குறைவு. பொதுவாக கினிக்கோழிகளை வெள்ளைக் கழிச்சல் எனப்படும் இராணிக்கெட் நோய், ஈ – கோலி நோய், இரத்தக் கழிச்சல் நோய் மற்றும் குடற்புழு தாக்குதல்களும் உண்டாகலாம். குஞ்சுகள் பொரித்த 7வது நாளிலும், 2 வது மாதத்திலும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.

ஈ- கோலி நோயும், இரத்தக் கழிச்சல் நோயும் ஈரப்பதம் அதிகமுள்ள தரையில் அல்லது ஆழ்கூளத்தில் கினிக்கோழிகள் வளரும் போது உண்டாகிறது. தரை ஈரமில்லாமலும், சுத்தமான பராமரிப்பு மூலமும் கினிக்கோழிகளில் இந்நோய் வராமல் பராமரிக்கலாம். குடற்புழு தாக்குதலுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும்.பொதுவான சுகாதாரமான மேலாண்மை முறைகள் மூலம் கினிக்கோழிகளை நோயிலிருந்து தடுக்கலாம்.

விற்பனை வயது:
கினிக்கோழிகள் 12 வார வயதில்; 1.1 முதல் 1.3கிலோ கிராம் வரை உடல் எடை பெற்று விடும். இந்த வயதினை அடையும் சமயத்தில் இவைகளை இறைச்சிக்காக விற்று விடலாம். இந்த சமயத்தில் கினிக்கோழியை அறுத்து சுத்தம் செய்யும் பொழுது 80 சதவிகிதம் இறைச்சி கிடைக்கும்.

கினிக்கோழி வளர்ப்பின் எதிர்காலம்:
அதிகப் புரதச் சத்து, குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட கினிக்கோழி இறைச்சியானது வருங்காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும் உண்ணக்கூடிய உணவாக மாறும் வாய்ப்புள்ளது. அப்போது தேவைக்கேற்ப இன்னும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆகவே கினிக்கோழிகள் வளர்ப்புத்; தொழிலுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். இத் தருணத்தில் கினிக்;கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு ஒரு நல்ல இலாபகரமான மாற்றுத் தொழிலாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கினிக்கோழிப் பண்ணைப் பொருளாதாரம் (500 கினிக்கோழிகள் வளர்க்க)
அனுமானங்கள்:

1. ஒரு கினிக்கோழிக்குஞ்சின் விலை :       ரூ. 22 /-
2. ஒரு கிலோ தீவனத்தின் விலை :              ரூ. 25 /-
3. ஒரு கினிக்கோழி விற்பனை வரை :          3 கிலோ

உட்கொள்ளும் தீவனத்தின் அளவு

4. இதர செலவுகள் – ஒரு கோழிக்கு : ரூ.5 /-
5. இறப்பு விகிதம் : 2 சதவிகிதம்
6. விற்பனை விலை- ஒரு கிலோ : ரூ. 160 /-
7. விற்பனை எடை -ஒரு கோழிக்கு : 1.2 கிலோ

நிலையான முதலீடு

1. கொட்டகை அமைக்க :                                                 ரூ. 1,00,000
2. தண்ணீர் தீவனம் வைக்க உபகரணங்கள் :              ரூ. 5,000
—————–
மொத்தம்                                                                            ரூ. 1,05,00
—————–
தொடர் செலவுகள்

1. கினிக்கோழிக்குஞ்சுகள் (500  Xரூ. 22 /-) :                    ரூ. 11,000
2. தீவனச்செலவு (3 கிலோ X ரூ.25 X 500 கோழிகள்) :      ரூ. 37,500
3. இதரச் செலவுகள் ( ரூ.5 X 500) :                                      ரூ.  2,500
—————-
   மொத்தம்                                                                               ரூ. 51,000
—————-
வருமானம்:

500 கோழிகளில் 2 சதவிகிதம் இறப்பு போக :                ரூ. 94,080
மீதமுள்ள கோழிகளை விற்ற வகையில்
(490 X1.2 கிலோ X ரூ 160)
நிகர இலாபம்:

வருமானம் – தொடர் செலவுகள்: 94,000 – 51,000 :  ரூ. 43,000

நிகர இலாபமானது தீவனச்செலவு, மற்றும் கினிக்கோழிகளின் விற்பனை விலை ஆகியவற்றைப் பொறுத்து பண்ணைக்குப் பண்ணை மற்றும் இடத்திற்கு இடம் மாறுபடும். பண்ணையாளர்கள் கினிக்கோழிகளை நுகர்வோருக்கு நேரிடையாக சில்லரை விற்பனை செய்தால் கிடைக்கக்கூடிய இலாபம் அனைத்தும் பண்ணையாளர்களுக்கே கிடைக்கும் என்பதால் இடைத்தரகர்கள் இன்றி கினிக்கோழிகளை விற்பனை செய்தால் அதிக இலாபம் பெறலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்