கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோயும், தடுப்பு முறைகளும்

கோமாரி நோயை கால் காணை, வாய் காணை, குளம்பு வாத நோய் என்றும் அழைப்பர். இந்நோயானது மாடு, ஆடு, பன்றி போன்ற குளம்புகள் உள்ள கால்நடைகள் அனைத்தையும் பாதிக்கக்கூடிய நச்சுயிரி நோயாகும். கோமாரி நோயின் நச்சுயிரியானது அதிக நாள் உயிருடன் வாழும் குணம் உடையது. இந்நோய்க்கிருமியில் 7 வகைகள் உள்ளன. ஓவ்வொறு நச்சுயிரி வகையும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. கோமாரி நோயினால் அதிக உயிர் இழப்பு இல்லையென்றாலும் மிக அதிக பொருளாதார இழப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய தொற்று நோயாகும். மாடுகள் நோயால் பாதிக்கப்பட்டும், ஆடுகள் நோய்த்தாங்கிகளாகவும், பன்றிகள் நோய்க்கிருமிகளை மிக அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மையும் கொண்டுள்ளன.

நோய் பரவும் முறைகள்:
கோமாரி நோயானது பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், சாணம் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவும். இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் கலந்த தீவனம், பண்ணைப் பொருட்கள,; தண்ணீர் போன்றவற்றின் மூலமும் பறவை, விலங்குகள் மற்றும் மனிதர்கள் நடமாட்டத்தாலும் மிக விரைவாகவும் எளிதிலும் பரவக் கூடிய ஒரு தொற்று நோய்hகும். பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு ஓட்டிச்செல்லும் போதும் இந்நோய் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. காற்று வீசும் திசையில் காற்றுத் துகள்கள் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் வரை இந்நோய் பரவக்கூடியது.

நோய் அறிகுறிகள்:
நோய்ப்பாதிப்பு மற்றும் அறிகுறிக்கான இடைவெளி இரண்டு முதல் நான்கு நாட்களே ஆகும். கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் முதலி;ல் அதிகக் காய்;ச்சலுடன் மேய்ச்சல் எடுக்காமலும் சோர்வுற்றும் காணப்படும். வாயிலுள்ள சளிச்சவ்வு வீங்கி காணப்படும். வாயைத் திறந்து பார்த்தால் நாக்கின் மேல்புறம். மேலண்ணம், உதடுகளின் உட்புறம், ஈறுகள், மேல் தாடை, கன்னங்களின் உட்புறங்கள் முதலியவற்றில் மெல்லிய நீர் கோர்த்த கொப்புளங்கள் காணப்படும் ஓரிரு நாட்களில் கொப்புளங்கள் உடைந்து சிவப்பு நிறத்தில் வலியுள்ள புண்களாக மாறுகின்றன.

இதனால் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளால் தீவனம் உட்கொள்ள முடியாது. வாயிலிருந்து உமிழ்நீர் கெட்டியாக நுரையுடன் வழிந்து கொண்டிருக்கும். நோய் கண்ட கால்நடைகள் தொடர்ந்து வாயைச் சப்பிய வண்ணம் காணப்படும். கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு குளம்புகளுக்கிடையேயும் குளம்பிற்கு மேலுள்ள தோலிலும் கொப்புளங்கள் தோன்றி பின்பு புண்களாக மாறுகின்றன. வலி காரணமாக மாடுகள் அடியெடுத்து வைக்க அஞ்சும். குளம்புகள் நாளடைவில் கழன்று வழி நேரிடலாம்.

பால்கறக்கும் மாடு மற்றும் ஆடுகளின் மடியிலும் காம்புகளிலும் கொப்புளங்கள் தோன்றுவதால் பால் குறைவதுடன் மடிவீக்க நோயும் ஏற்படுகிறது. கோமாரி நோய் கண்ட மாடுகளின் பாலினைக் குடிக்கும் கன்றுகள் தீவிர இதயத் தசை அழற்சியினால் இறந்து விடுகின்றன. சரியாக பராமரிக்கப்படாத கால்நடைகளின் கால்களின் குளம்புகளில் தோன்றும் புண்களில் ஈக்கள் முட்டையிட்டு பின் புழு வைத்த புண்களாகின்றன. கருவுற்ற கால்நடைகளில் கருச்சிதைவு ஏற்படுகின்றன.

கோமாரி நோயிலிருந்து மீண்ட கால்நடைகளுக்கு மூச்சிரைப்பு, இரத்தச்சோகை, ரோமம் சிலிர்த்து அதிகம் வளர்தல், மடி வீக்க நோய், சினை பிடிக்காமல் போதல் போன்றவை ஏற்பட்டு மிகுந்த பொருளாதார சேதத்தினை ஏற்படுத்தும். காளை மாடுகளில் இனவிருத்தித் திறன் குறைந்து விடும். உழவு மாடுகளில் இழுக்கும் திறன் குறைந்து மூச்சிறைப்பு ஏற்படும்.

பராமரிப்பு முறைகள்:
கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனியே பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இதர ஆரோக்கியமான கால்நடைகளோடு தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண்களை ஒரு சதவிகித பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு கலந்து கழுவ வேண்டும். வாயில் உள்ள புண்களுக்கு கிளிசரின் அல்லது போரிக் ஆசிட் பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து ஒரு நாளைக்கு 3-4 தடவை தடவ வேண்டும். கால் புண்ணுக்கு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு கலந்த கரைசலால் கழுவி விட்டு “லோரெக்சான்” போன்ற ஆன்டிசெப்டிக் களிம்பு தடவலாம். அல்லது போரிக் பவுடரை வேப்ப எண்ணெய்pல் கலந்தும் தடவலாம்.

புழு வைத்த புண்களாக இருந்தால் கற்பூரத்தை பொடி செய்து புண்களில் வைத்தால் புழுக்கள் இறந்து விடும். அல்லது டர்பன்டைன் எண்ணெயை புழு வைத்த புண்களில் ஊற்றினால் அனைத்து புழுக்களும் இறந்து விழும். அதன் பின் புண்களுக்கு ஆன்டிசெப்டிக் மருந்திட்டு குணப்படுத்த வேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்காமல் இருக்க ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் தர வேண்டும். நோய்க்கிருமி தொழுவத்தில் அதிக நாள் உயிருடன் இருக்கும் திறன் கொண்டமையால் கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொட்டகையில் 40 கிராம் சலவை சோடாவை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து கழுவினால் நோய்க் கிருமிகள் அறவே அழிந்து விடும்.

மூலிகை வைத்தியம்:
காலில் உள்ள புண்களுக்கு : பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 10 கிராம், துளசி இலை 10, குப்;பை மேனி இலை 10, மருதாணி இலை10, வேப்பிலை 10 ஆகியவற்றை நன்கு அரைத்து 1 லிட்டர் நல்ல எண்ணெயில் கலந்து 10 நிமிடம் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணையை கால்களில் ஒரு நாளைக்கு இரு முறை வீதம் தொடர்ந்து தடவி வர புண் விரைவில் குணமாகும்.

வாயில் உள்ள புண்களுக்கு: சீரகம், 20 கிராம், வெந்தயம் 20 கிராம், மிளகு 20 கிராம், மஞ்சள் 20 கிராம், பூண்டு 4 பல் ஆகியவற்றை நன்கு ஊற வைத்து அரைத்து வெல்லம் 100 கிராம், துருவிய தேங்காய் 1 கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை 4 அல்லது 5 பாகங்களாகப் பிரித்து 4 அல்லது 5 வேளை உண்ணக் கொடுக்கவும். இவ்வாறு 5 நாட்கள் தர வேண்டும். வாயின் உள்ளே நெய் அல்லது வெண்ணெய் தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

நோய்த் தடுப்பு முறைகள்:
நோய் பரவியுள்ள சமயத்தில் மாடுகளைச் சந்தையில் வாங்கவோ விற்கவோ கொண்டு செல்லக் கூடாது. கோமாரி நோய் கண்ட கால்நடைகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஓட்டிச் செல்லக் கூடாது. வியாபாரத்துக்காக ஓட்டிச் செல்லும் கால்நடைகளுடன் மற்ற கால்நடைகளை சேர்த்து இருக்க அனுமதிக்கக்கூடாது. வேளி இடத்துக்கு கால்நடைகளை ஏற்றிச் சென்று பின் திரும்பும் வாகனங்களை அங்கேயே சுத்தமாக 4 சதவிகித சலவை சோடா கரைசலில் கழுவ வேண்டும். நோய் கண்ட கால்நடைகளை குளம் ஏரி போன்ற பொது இடங்களில் கழுவுவதோ குடிக்க தண்ணீர் காட்டுவதோ கூடாது. நோய் கண்ட கால்நடைகளை தனியே கட்டி வைத்தியம் பார்க்க வேண்டும்.

கன்றுகளுக்கு நோய் கண்ட பசுக்களிலிருந்து பாலூட்டக்கூடாது. அனைத்து கால்நடைகளைக்கும் ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்து தடுப்பூசி போட வேண்டும். கோமாரி நோய் பாதித்த பகுதியிலிருந்து கால்நடைகளை வாங்கக் கூடாது. புதிய கால்நடைகள் வாங்கும் போது அவற்றை மற்ற கால்நடைகளிலிருந்து 21 நாட்களுக்கு தனியே வைத்து பராமரிக்க வேண்டும். நோய் வராமல் தடுக்க கன்றுகளுக்கு 4 வது மாதத்திலும் ஆடுகளுக்கு 8 வார வயதில் முதல் கோமாரி நோய்த் தடுப்பூசியும் ஒரு மாதம் கழித்து இரண்டாம் முறை தடுப்பூசியும் போட்ட பின் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டு 2 முதல் 3 வாரத்திற்குப் பின் தான் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கின்றது. எனவே பதிதாக தடுப்பூசி போட்ட கால்நடைகளை முதல் மூன்று வாரத்துக்கு வெளியில் ஓட்டிச் செல்லக்கூடாது.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்