கால்நடைகளுக்கு அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை கொடுப்பதால் ஏற்படும் அமில நோய்

கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தாம் வளர்க்கும் ஆடுகள் மற்றும் மாடுகள் பல சமயங்களில் அரிசி மற்றும் சோறு ஆகியவற்றை சாப்பிட்டதால் வயிற்றுப்புசம் ஏற்பட்டு இறந்து விட்டது என்ற செய்தியினை அடிக்கடி கூறுவதுண்டு. இவ்வாறு கால்நடைகள் இறந்து போவதற்கு காரணம், சுலபமாகச் செரிக்கக்கூடிய அரிசி போன்ற மாவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதால் கால்நடைகளுக்கு ஏற்படும் அமில நோயாகும். அமில நோயானது அசை போடும் கால்நடைகளைத் தான் அதிகம் பாதிக்கின்றன. அமில நோய் ஏற்பட்ட கால்நடைகளுக்குத் தக்க சமயத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் கால்நடைகளை காப்பாற்றுவது கடினமாகி விடும். எனவே கால்நடைகளுக்கு அரிசி போன்ற மாவுப்பொருளை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகளை கால்நடை விவசாயிகள் தெரிந்து கொள்வதன் மூலம் அமில நோய் பாதிப்பிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க முடியும்.

நோய்க்கான காரணங்கள்:
கால்நடைகள் வழக்கமாக உண்டு வரும் வைக்கோலையும் கால்நடைத் தீவனங்களையும் தவிர்த்து திடீரெனச் சுலபமாகச் செரிக்கக்கூடிய அரிசி, அரிசிச் சோறு, பொங்கல், இட்லி, தோசை, கோதுமை, மாவு வகைகள் போன்ற மாவுச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் பலாப்பழத் தோல், வாழை, மா, திராட்சைப் பழங்கள், கரும்பு போன்ற சர்க்கரைச் சத்து மிகுந்த பொருட்களையும் அதிக அளவில் உண்பதால் ஏற்படும் விளைவு தான் அமில நோயாகும்.

கால்நடைத் தீவனம் குறைவாகவும் அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உண்பதாலும்;, தீவனத்தில் திடீர் மாற்றம் ஏற்படுத்துவதாலும் இந்நோய் தீவிரம் அடையலாம். வீடுகளில் நடக்கும் விசேசங்களின் பொழுதும் பண்டிகை காலங்களின் பொழுதும் மிச்சமான மற்றும் வீணாகும் அரிசி சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிக அளவு கால்நடைகளுக்குக் கொடுப்பதால் அமில நோய் அதிக அளவு உண்டாகிறது. ஏற்கனவே மாவுப் பொருட்கள் நிறைந்த உணவை நீண்ட காலமாக உண்டு பழக்கப்பட்ட கால்நடைகளில் அமில நோயின் பாதிப்பு அதிகம் இருக்காது.

நோய் பாதிப்பினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
அசை போடும் பிராணிகளில் உள்ள நான்கு வயிற்றுப் பைகளில் பெரிதான ரூமன் என்னும் அசையூண் வயிற்றில் நன்மை செய்யக்கூடிய நூறு வகையான பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள்; உள்ளன. அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளுவதால் இவ்வகை உயிரிகளில் மாற்றம் ஏற்பட்டு நச்சுயிரிகளின் எண்ணிக்கை பெருகுகின்றது.

இதனால் வயிற்றின் காரத்தன்மை குறைந்து அமிலத்தன்மை அதிகமாகிறது. இத்தகைய அமில நிலையில் லேக்டோபெசில்லஸ் வகை நுண்ணுயிரிகள் அதிக அளவில் லேக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இதன் காரணமாக வயிற்றில் மிக அதிகமான அமிலத் தன்மை ஏற்படுகிறது. இப்படி அதிகமாக உற்பத்தியாகும் லேக்டிக்அமிலம் இரத்தத்தை அடைந்து இரத்தத்தின் கார அமில நடுநிலைமையை மாற்றுவதால் மிக மோசமான உடல் நலப் பாதிப்புகள் உண்டாகின்றன.

அறிகுறிகள்:
வயிற்று உப்புசம், வயிற்றில் அதிக அளவு நீர்த்தேக்கம், நாக்கு வறண்டு தாகம் எடுத்தல், வயிற்று அசைவு இல்லாமை, சாணம் வெளியேற்றம் குறைதல், நரம்பு மண்டலம் பாதிப்படைந்து கண் தெரியாமை, தலையால் மோதிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அமில உற்பத்தியின் அளவைப் பொறுத்து இப்பாதிப்பானது மித வகை, தீவிரம் குறைந்த வகை, தீவிர வகை மற்றும் அதி தீவிர வகை என நான்கு வகையாகக் காணப்படுகிறது. நோய் அறிகுறிகண்ட அரை மணி நேரத்திற்குள் மருத்துவச் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். நேரம் தாமதமானால் அதிக அளவில் அமில உற்பத்தி ஏற்பட்டு இரத்த மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து விரைவில் கால்நடைகள் இறக்க நேரிடும்.

முதலுதவி:
அமில நோயை உண்டாக்கக்கூடிய பொருட்களை அதிக அளவில் உண்டது தெரிந்தவுடன் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சோடாமாவை 100 முதல் 250 கிராம் அளவு எடுத்துக் கொண்டு தண்ணீரில் கரைத்து புரை ஏறாமல் வாய் வழியாக கால்நடைகளுக்குக் கொடுத்து விட்டு உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். கால்நடை மருத்துவரை அணுகுதலில் தாமதம் ஏற்படும் பொழுது முதலுதவி சிகிச்சையை 6 மணி நேர இடைவெளியில் மீண்டும் தர வேண்டும்.

சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறை:
மித வகையைத் தவிர மற்ற மூன்று வகைகளுக்கும் கால்நடை மருத்துவரின் உதவி இன்றியமையாதது. அமில நோய்க்கு சிகிச்சையானது கால்நடைகளின் வயிற்றில் அதிக அமில உற்பத்தியைத் தடுக்கவும், அசையூண் வயிற்று அமிலத் தன்மை மற்றும் உடலெங்கும் உள்ள அமிலத் தன்மையைப் போக்கவும், உடல் நீர்க் குறைவை சரி செய்யவும், அசையூண் வயிறு மற்றும் குடல் அசைவுகளைத திரும்ப இயல்பான நிலைக்குக் கொண்டு வரவும் ஏற்றவாறு இருக்க வேண்டும்.

மித வகை:
கால்நடைகள் மீண்டும் அரிசி சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 12 முதல் 24 மணி நேரம் வரை தண்ணீர் குடிக்க விடக் கூடாது. வைக்கோல் மட்டுமே தீவனமாகத் தர வேண்டும். அவ்வப்பொழுது உடற்பயிற்சி கொடுப்பதன் மூலம் செரிமானம் அதிகரிக்கும்.

தீவிரம் குறைந்த வகை:
கால்நடை மருத்துவரின் உதவியுடன் சோடியம் பைகார்பனேட் அல்லது கால்சியம் பைகார்பனேட் மருந்தை ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்த வேண்டும். உடல் நீர்க்குறைவை சரி செய்ய குளுக்கோஸ் ஊசி மூலம் ஏற்ற வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் நோயற்ற நல்ல கால்நடைகளின் அசையூண் வயிற்றில் இருந்து எடுத்த திரவம் 2 லிட்;டர் அளவில் வாய்வழியாகக் கொடுக்கலாம். வைக்கோல் மட்டுமே தீவனமாகக் கொடுக்க வேண்டும். 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் கால்நடை தீவனம் சாப்பிட ஆரம்பிக்கும்.

தீவிர வகை:
கால்நடை மருத்துவர் உதவியுடன் சோடியம் பைகார்பனேட் ஊசியை 8 மணி நேர இடைவெளியில் இருமுறை செலுத்த வேண்டும். அசையூண் வயிற்று நீர் கொடுக்கப்பட வேண்டும். ஆண்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை ஊசி மூலம் செலுத்த வேண்டும். பி.காம்ப்ளெக்ஸ் வைட்டமின் மருந்து கொடுக்க வேண்டும். உடல் நீர்க்குறைவை சரி செய்ய குளுக்கோஸ் ஊசி மூலம் ஏற்ற வேண்டும்.

அதி தீவிர வகை:
உடனடி வயிற்று அறுவை சிகிச்சை மூலம் வயிறு சுத்தப்படுத்தப்படவேண்டும். வயிறு சுத்தப்படுத்தப்பட்ட பின் தவிடு போன்ற பொருட்கள் சிறிதளவும், நல்ல அசையூண் வயிற்றுத் திரவம் ஓரளவிறகும் உள்ளே செலுத்திய பின்னரே வயிறு தைக்கப்பட வேண்டும். மருத்துவர் ஆலோசனைப் படி உரிய அளவுகளில் உரிய இடைவெளியில் சோடியம் பைகார்பனேட் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட வேண்டும். உடல் நீர்க்குறைவை சரி செய்ய குளுக்கோஸ் ஊசி மூலம் ஏற்ற வேண்டும். ஆண்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை ஊசி மூலம் செலுத்த வேண்டும். தீவனம் உண்ணும் வரை மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்:
கால்நடைகளுக்கு அரிசி சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அதிக மாவுச் சத்துள்ள எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிலும், உணவு விடுதிகளிலும், விசேசக் காலங்களிலும் மிஞ்சிய உணவுப் பதார்த்தங்களை கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது. தினமும் 20 கிராம் அளவு சோடா மாவை கால்நடைகளுக்கான தீவனத்தில் கலந்து தர வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
பகிருங்கள்