கால்நடைகளுக்கான சிறந்த பசுந்தீவனம் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-4

பசுந்தீவனம் என்பது கால்நடைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான தீவனமாகும். ஆனால் தற்பொழுது உள்ள கால கட்டத்தில் பசுந்தீவன பற்றாக்குறை தான் கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. பசுந்தீவனத்தை விலைக்கு வாங்கி கால்நடைகளுக்கு கொடுக்கும் பொழுதும் பசுந்தீவனத்தைக் குறைத்து கலப்புத்தீவனத்தை அதிகமாகக் கொடுக்கும் பொழுதும் உற்பத்திச் செலவில் 70 சதவிகிதமானது தீவனத்திற்காகச் செலவிடப்படுகிறது.

அதனால் தீவனச் செலவையும் குறைத்து அதிக உற்பத்தியும் பெற்று கால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கால்நடைகளுக்கு ஊட்டச் சத்து அதிகம் உள்ள பசுந்தீவனம் போதிய அளவு கொடுக்க வேண்டும். மேய்ச்சல் நிலம் குறைந்து வரம் இக்காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தமது நிலத்தில் பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறுவடை செய்து தமது கால்நடைகளுக்கு அளித்தால் மட்டுமே கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக இலாபம் பெற முடியும்.

பசுந்தீவனம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:
கால்நடைகளுக்கு தரமான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து அளித்திடுவதன் மூலம் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். பசுந்தீவனங்களில் உயிர்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் கலப்புத் தீவனத்தின் தேவைகளை பசுந்தீவனங்கள் குறைக்கின்றன. அதனால் தீவனச் செலவு குறைகிறது. பசுந்தீவனத்தில் புரதம், தாது உப்புக்கள், உயிர்ச்சத்தக்கள் குறிப்பாக உயிர்ச்சத்து “ஏ” மறறும் “இ” ஆகியவை உலர் தீவனத்தை விட அதிகமாக உள்ளது.

இவை கால்நடைகளின் வளர்ச்சிக்கும் அதிக பால் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. பசுந்தீவனங்களில் உயிர்ச்சத்துக்களில் முக்கியமான பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இவை வைட்டமின் “ஏ” தேவையை பூர்த்தி செய்வதோடு மாடுகளின் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்கு மிகவும் உதவி புரிகிறது. பசுந்தீவனங்களில் நார்ச்சத்துப் பொருட்கள் அதிகம் இருப்பதால் கால்நடைகளின் இரைப்பையில் உள்ள நுண்கிருமிகளால் ஜீரணிக்கப்பட்டு பால் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களாக மாற்றப்படுகின்றன.

பசுந்தீவனத்தில் உள்ள நார்ச்சத்துப் பொருட்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவல்லது. இதனால் கால்நடைகளின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாள் அதிகரிப்பதோடு, பால் உற்பத்தித் திறனையும், அதிகரிக்கச் செய்கிறது. உலர் தீவனங்களுடன் பசுந்தீவனங்களை சேர்த்துக் கொடுப்பதால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதோடு, உலர் தீவனத்தின் செரிமானத் தன்மையும் அதிகரிக்கிறது.

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ- 4):
பசுந்தீவனங்களில் மிக முக்கியமானது புல்வகைப் பசுந்தீவனங்களாகும். கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகியவற்றின் இனக்கலப்பு செய்து கோ-1, கோ-2 மற்றும் கோ-3 இரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக கால்நடைகளுக்கேற்ற பசுந்தீவனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடுத்த பாரம்பரியமான அதிக மகசூல் தரும் கோ- 4 கலப்பினப்புல் வகை 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது பரவலாக கால்நடைகளுக்கேற்ற பசுந்ததீவனமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

கோ- 4 பசுந்தீவனத்தின் சிறப்புகள்:
மிக மிருதுவான, இனிப்பான சாறு நிறைந்த தண்டுகளைக் கொண்டது. இது ஒரு உயர்தரப்புல்லாகவும், அதிக மகசூல் கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது. இது ஒரு பல்லாண்டுப் பயிராகும். அதிக தூர்கள் மற்றும் சாயாத் தன்மை பெற்றது. அதிக இலைத்தண்டு விகிதம் கொண்டது. பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் அற்றது. இறவைப்பயிராக எல்லாத் தட்ப வெப்ப நிலையிலும், அனைத்து மண்வகைகளிலும் பயிர் செய்யலாம். இந்தப் புல்லில் 9-10 சதவிகிதம் புரதச் சத்து, 0.8 சதவிகிதம் சுண்ணாம்புச் சத்து மற்றும் 0.24 சதவிகிதம் மணிச்சத்தும் அடங்கியுள்ளன. வருடத்திற்கு 7-8 மறுதாம்புப் பயிர் அறுவடை செய்யலாம்.

கோ- 4 பசுந்தீவனம் பயிரிடும் முறைகள் :
பயிர் செய்யும் நிலத்தை இரண்டு மூன்று முறை நன்றாக உழுது 50 செ.மீ இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும். இதற்கு அடியுரமாக 1 ஏக்கருக்கு தொழு உரம் 10 டன், தழைச்சத்து 20 கிலோ, மணிச்சத்து 20 கிலோ மற்றும் சாம்பல் சத்து 16 கிலோ இட வேண்டும். ஓர் ஏக்கருக்கு 16000 இரு கணுக்கரணைகள் தேவைப்படுகின்றன. பாத்திகளில் ஒரு கரணைக்கும் மற்றொரு கரணைக்கும் 50 செ.மீ இடைவெளி விட்டு 3-5 செ.மீ ஆழத்தில் கரும்பு நடுவது போல் நடவு செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த பின் 30 நாட்கள் கழித்துக் களை நீக்கம் செய்வது அவசியம்.

இதனால் புல்லின் வளர்ச்சி அதிகமாகும். நடவு செய்த பின் முதல் அறுவடை 75 -80 நாட்களிலும் பின்னர் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் மேலுரமாக 40 கிலோ தழைச்சத்து அல்லது சாண நீர் பாய்ச்சி அதன் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். வருடத்திற்கு 150 – 160 டன் விளைச்சல் ஓர் ஏக்கரிலிருந்து கிடைக்கும். இது கோ- 3 இரகத்தை விட 33 சதம் கூடுதல் மகசூல் ஆகும். இந்தப் புல் வகையுடன் வேலி மசால் அல்லது அகத்தியை ஊடுபயிராகவும் சேர்த்துப் பயிரிடலாம்.

கோ- 4 பசுந்தீவனம் அளிக்கும் முறை:
300 கிலோ எடை கொண்ட கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றிற்கு 15 முதல் 20 கிலோ பசுந்தீவனம் தேவைப்படுகிறது. இதில் நான்கில் மூன்று பங்கு கோ-4 புல்வகைத் தீவனமாகவும் ஒரு பங்கு பயறு வகைத் தீவனமாகவும் கலந்து சமச்சீர் தீவனமாகக் கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பால் உற்பத்திச் செலவும் குறைகிறது. கோ-4 பசுந்தீவனத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடுவதன் மூலம் மாடுகளில் செரிமானத் தன்மை அதிகரிப்பதுடன் பசுந்தீவனம் வீணாவதையும் தடுக்கலாம். ஆடுகளும் கோ-4 புல்லை விரும்பி உண்ணும். ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கிலோ வரை பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மற்ற பயறு வகை மற்றும் மர வகை பசுந்தீவனங்களுடன் கலந்து அளிப்பதன் மூலம் அதிக உடல் வளர்ச்சி மற்றும் அதிக குட்டிகளைப் பெறலாம்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்