கால்நடைகளில் நோய்களை கண்டறிவதற்கான எளிய வழி முறைகள்

கால்நடை வளர்ப்போருக்கு பெருத்த பொருளாதார இழப்புகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை உடனே கண்டறிந்து, கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை அளிக்காதது தான். ஏனெனில் கால்நடைகளுக்கு நோயின் தன்மை தீவிரமான பின்பே கால்நடை உரிமையாளர்கள் சிகிச்சைக்கென கால்நடை மருத்துவரை அணுகுவர். வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் உபாதைகளை வளர்ப்போர் தான் முதலில் கண்காணித்து நோய் தீவிரமடைவதற்கு முன்னரே மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும்.

எந்தவொரு கால்நடையிலும் நோயின் தன்மை வெளிப்படுவதற்கு முன்பு அதனுடைய உடலிலும், நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றத்தை உணர வேண்டுமானால் கால்நடைகள் ஒவ்வொன்றையும் காலை மாலை இரு வேளையும் தீவனம் அளிக்கும் பொழுது 5 முதல் 10 நிமிடங்கள் தலை முதல் கால் வரையும், நடவடிக்கைகளயும் கவனிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், சாதாரணமான நடவடிக்கைகளிலிருந்து நோய் பாதிக்கும் பொழுது ஏற்படும் வித்தியாசமான நடவடிக்கைகளையும் எளிதில் கண்டறியலாம்.

தலை:
வித்தியாசமான பார்வை, வாய்க்கட்டு உலர்ந்து இருத்தல், கண் இமைகளில் வீக்கம், மூன்றாவது இமை வெளித் தள்ளுதல், நாசித் துவாரம் விரிந்திருத்தல், கண்களில் நீர் வடிதல், கண் விழி பிதுங்கியிருத்தல், மூக்கில் இருந்து நீர் அல்லது சளி வடிதல், வாயில் துர்நாற்றம், உமிழ்நீர் அதிகமாக வடிதல், தலையில் வீக்கம், ஒரு பக்கமாக தலையை சாய்த்து இருத்தல், தாடை வீக்கம் போன்ற வித்தியாசங்கள் தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

கழுத்து மற்றும் மார்பு:
வீக்கம், கட்டி போன்றவை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.

வயிறு:
பெருத்தல், உப்புசம், குடலிறக்கம், வீக்கம், ஒரு பக்கம் மட்டும் வீக்கம் போன்ற மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

தோல்:
காய்ந்து இருத்தல், முடியில் மாற்றம், தேவைக்கதிகமாக வியர்த்தல், சொறிதல், சீழ் வடிதல், காய்ந்திருத்தல், அதிக எண்ணெய் பசையுடன் முடி இல்லாதிருத்தல், கருத்திருத்தல், வீக்கம், இரத்தம் வடிதல், நிணநீர் முடிச்சு வீக்கம் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.

மடி:
மடி சாதராணமாக பஞ்சு போன்று மிருதுவாகவும். இளஞ்சிவப்பு நிறத்துடனும் இருக்கும். அவ்வாறில்லாமல் அதிக கூ+டாகவும், நன்கு சிவந்தும், பால் கறக்க அனுமதிக்காமலும் இருப்பது மடி நோயின் ஆரம்ப அறிகுறிகளாக கொள்ளலாம். பால்; நீர்த்தோ, திரிதிரியாகவோ, இரத்தம் இல்லது சீழ் கலந்தோ இருந்தால் மடி நோய் உள்ளதற்கான அறிகுறிகள். எனவே ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டவுடனே கால்நடை மருத்துவரை அணுகுவது மடி நோயினால் ஏற்படும் பெருத்த பொருளிழப்பிலிருந்து மாடுகளை காப்பாற்றலாம்.

இனப்பெருக்க உறுப்பு:
சீழ், இரத்தம் வடிதல், வீக்கம், சினைத் தருணம் மட்டுமல்லாமல் தினமும் கண்ணாடி போன்ற திரவம் வடிதல் இருந்தால் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

நடவடிக்கைளில் மாற்றங்கள்:
நோயின் பொழுது கால்நடைகளின் நடவடிக்கைளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பது கால்நடைகளை நோயின் ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

1) தீவனம் அளிக்கும் பொழுது:
தீவனம் அளிக்கும் பொழுது அதன் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். சாப்பிடாமல் உள்ள தீவனத்தின் அளவு, சாப்பிடுவதில் மாற்றம், அசை போடாமை, விழுங்குவதில் மாற்றம், மெதுவாக அசை போடுதல், ஒரு பக்கமாக அசை போடுதல், வாயில் தீவனத்தை வைத்துக் கொண்டே இருத்தல், தீவனம் விழுங்கும் பொழுது வலி, தீவனம் சாப்பிட்ட பிறகு வாந்தி, மூக்கு வழி வெளி வருதல், கழுத்தை நீட்டிக் கொண்டே இருத்தல், வாந்தி எடுக்க முயற்சி செய்தல் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.

2)மூச்சு விடும் பொழுது:
வித்தியாசமாக மூச்சிரைத்தல், மூச்சுத் திணறல், இருமல், தும்மல், குறட்டை சத்தம், மூச்சு விடும் பொழுது சத்தம் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.

3)சிறுநீர் கழிக்கும் பொழுது:
சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறிது சிறிதாக சிறுநீர் கழித்தல், சிறுநீர் போகாமல் இருத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைந்த அளவு போதல், சிறுநீர் கழிக்கும் நிலையிலேயே அதிக நேரம் நின்றிருத்ல், சொட்டு சொட்டாக போதல், சீழ் கலந்து சிறுநீர் போதல், இரத்தம் கலந்து போதல், காபி நிறம், மஞ்சள் நிறம் போன்று நிறம் மாறி இருத்தல் போன்ற மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

4)சாணி போடும் பொழுது:
சாணி போடும் பொழுது எத்தனை முறை, துர்நாற்றம், அளவு, தன்மையை கவனிக்க வேண்டும். முக்கி சிரமப்பட்டு போடுதல், தண்ணீர்; போன்று இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். சிறிய பந்து போல் உருண்டை உருண்டையாக, ஒரு கட்டிச் காணியாக, அதன் மேல் மெல்லிய சவ்வு போன்றும் காணப்பட்டால் அந்த மாட்டிற்கு மலச்சிக்கல் இருக்கலாம். சாணம் சிறிது இளக்கமாகப் பெரிய வட்ட வடிவமாகவும், நடுவில் குழியுடனும் பொதுவாக எருமை மாடுகளிலும் அதிக பால் கறக்கும் மாடுகளிலும் காணப்படும். இதுவே, ஆங்காங்கு சிறுசிறு குழிகளாக, சாணத்தின் வட்ட வடிவம் முழுவதும் காணப்பட்டால், மாடுகளில் செரிமானமின்மை ஏற்பட்டுள்ளதாக அறியலாம். கழிச்சலின் போது, சாணமானது நீர்த்தன்மையுடனும், ஆசன வாயைச் சுற்றியும், மடிக்கும் இடையேயுள்ள பகுதிகளிலும் சாணம் அதிக அளவு ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

5)பால் கறக்கும் பொழுது:
பால் கறக்க தயார் செய்யும் பொழுது பால் கறக்கும் பாத்திரம் ஏற்படுத்தும் சத்தம் மற்றும் பால் கறப்பவரின் நடமாட்டத்தில் சாதாரணமாக மாடு படுத்திருந்தால் எழுந்திருக்க முயற்சி செய்யும். அவ்வாறில்லாமல் சோர்ந்து எழுந்திருக்க முயற்சி செய்யாமலும், அமைதியாகவும் காணப்பட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

6)நடக்கும் பொழுது:
நடையில் வித்தியாசம், தள்ளாடும் நடை, கால் அல்லது கால்களை அதிகம் பயன்படுத்தாமல் தூக்கிக் கொண்டு இருத்தல், தலையை திருக்கி, ஒரு பக்கமாக சாய்த்து நடத்தல், நடக்கும் பொழுது சுற்றுதல் போன்றவை இருந்தால் நோய் உள்ளது என்று அறிந்து கொண்டு கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

7)இதர அறிகுறிகள்:
மனிதர்கள் வந்தாலோ அல்லது சத்தம் கேட்டாலோ உடனே விழிப்படைதல் சகஜம். மெதுவாக அல்லது சலனம் இன்றி இருத்தல், அடிக்கடி படுத்து எழுதல், வயிற்றைப் பார்த்தல், காலைத் தூக்கிக் கொண்டிருத்தல், முதுகு வளைத்திருத்தல், வயிற்றை உதைத்தல், சத்தத்தில் வித்தியாசம், முன்னங்கால்களை அகட்டி வைத்திருத்தல், வாலை தூக்கி வைத்திருத்தல், காது மற்றும் கால்கள் மரத்துப் போயிருத்தல், படுத்தே இருத்தல், காலை மடக்க முடியாதிருத்தல், ஒரே பக்கமாக படுத்திருத்தல், கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்திருத்தல், கால்களை விரித்தே படுத்திருத்தல், உடல் மெலிந்து கோண்டே போதல், படுத்து உருளுதல், கத்துதல், உடம்பை நக்குதல், மற்ற பொருட்களை சாப்பிடுதல், தலையை சுவரோடு அழுத்துதல் மற்றும் கூட்டமாக மேயும் பொழுது கூட்டத்திலிருந்து தனித்து மேயாமல் தனித்து இருத்தல் போன்றவையும் நோய்க்கான அறிகுறிகளாகும்.

கால்நடை வளர்ப்போர் மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், கால்நடைகளில் நோயின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கால்நடை மருத்துவரின் உதவியுடன் உரிய நேரத்தில் உரிய மருத்துவம் செய்வதன் மூலம் நோயின் கடுமையினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தவிர்க்க இயலும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்