கால்நடைகளில் சுத்தமான குடிநீரின் முக்கியத்துவங்கள்

“நீரின்றி அமையாது உலகு” என்பது பொய்யாமொழியார் திருவள்ளுவரின் அருள் வாக்கு. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வாறு அவசியமோ, அவ்வாறே தண்ணீரும் மிகவும் அவசியம். உணவின்றி கால்நடைகள் ஒரு மாத காலம் வரை உயிர் வாழ இயலும். ஆனால் தண்ணீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ முடியாது. கால்நடைகளின் உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் தண்ணீர் உள்ளது. கறவைமாடுகளின் உடல் எடையில் 70 சதவிகிதமும், பாலில் 87 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.

தண்ணீரின் அவசியம்:
தண்ணீரானது உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டையுமே சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பும் நல்ல முறையில் செயலாற்ற உதவுகிறது. தண்ணீரானது, உணவு உட்கொள்ளுதல், செரித்தல் போன்ற வேலைகளுக்கு மிகவும் அவசியமானது. உடம்பிலுள்ள தேவையற்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் தண்ணீர் மிகவும் உதவுகிறது. உடம்பின் வெப்பநிலையை சீராக வைத்திருக்வும் உடம்பின் செல்களில் உள் மற்றும் வெளியில் உள்ள திரவத்தின் அழுத்தம் மற்றும் முக்கியமான உப்புச் சத்துக்கள் ஆகியவற்றை சீரான நிலையில் பராமரிக்கவும் தண்ணீர் உதவுகிறது.

கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் முறைகள்:
கால்நடைகளுக்குத் தண்ணீரானது, குடிக்கும் நீர், தீவனத்தில் உள்ள நீர் மற்றும் உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகும் பொழுது உண்டாகும் நீர் என மூன்று வழிகளில் கிடைக்கிறது. பசுந்தீவனங்களில் 75 முதல் 90 சதவிகிதம் தண்ணீரும், வைக்கோல் போன்ற பொருட்களில் 10 முதல் 15 சதவிகிதம் நீரும் உள்ளது. 100 கிராம் புரதம் செரிமானம் அடையும் பொழுது 42 கிராம் நீரும், 100 கிராம் கொழுப்புச் சத்து செரிமானம் அடையும் பொழுது 100 கிராம் நீரும், 100 கிராம் மாவுப் பொருள் செரிமானம் அடையும் பொழுது 60 கிராம் நீரும் கால்நடைகளின் உடம்பிற்குக் கிடைக்கின்றது.

கால்நடைகளுக்குத் தேவைப்படும் தினசரி தண்ணீர் அளவு:
கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீரின் அளவானது சீதோசண நிலை மற்றும் தீவனத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுகிறது. கோடைக்காலத்தில் உட்கொள்ளும் நீரின் அளவு 20 முதல் 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும். அதேபோல் நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புரதச் சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ளும் போதும் நீரின் தேவை பசுவை விட கன்றுகளில் அதிகமாகவும், பால் கொடுக்கும் பசுக்களில் இவை இரண்டையும் விட அதிகமாகவும் இருக்கும். தீவனத்தில் உள்ள உப்பின் அளவு மற்றும் புரதம் நிறைந்த உணவு ஆகியவை நீரின் தேவையை அதிகரிக்கின்றன.

சராசரியாக ஒரு பசு அல்லது எருமைக்கு ஒரு நாளுக்கு 110 லிட்டர், ஓர் ஆட்டிற்கு 18 லிட்டர், ஒரு பன்றிக்கு 40 லிட்டர், ஒரு குதிரைக்கு 72 லிட்டர், ஒரு நாய்க்கு 15 லிட்டர், ஒரு பூனைக்கு 10 லிட்டர், 100 கோழிகளுக்கு 20-30 லிட்டர் என்ற அளவில் தண்ணீர் தேவைப்படும். தேவையை விட குறைவான அளவு தண்ணீர் உட்கொள்ளும் போது உணவு செரித்;தல், செரித்த உணவிலிருந்து சத்துக்கள் உறிஞ்சப்படுதல் மற்றும் கழிவுகளை அகற்றுதல் போன்றவை பாதிக்கப்படுகின்றன. தண்ணீர் உட்கொள்வது தொடர்ந்து நிறுத்தப்பட்டால் இரத்தம் மிகவும் கெட்டியாகிவிடும். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.

நீர் குறைவாக உட்கொண்டால் சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படும். நீர் உட்கொள்ளுதல் 20 முதல் 22 சதவிகிதம் குறையும் பொழுது கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது. ஆனால் அதிகம் உட்கொள்ளுவதால் எந்தவித எதிர்விளைவுகளோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. கால்நடைகளுக்கு தண்ணீர் எல்லா நேரங்களிலும் கிடைக்கும் படியாகச் செய்தல் அவசியம். உட்கொள்ளும் நீரானது மூச்சுக் காற்றிலும், தோலின் மூலம் வியர்வையாகவும் மற்றும் சிறுநீர், சாணம் ஆகியவற்றுடனும் வெளியேற்றப்படுகிறது.

கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இருப்பதன் அவசியம்:
கால்நடைகளுக்கு அளிக்கப்படும் நீரானது சுத்தமாகவும், கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம். அசுத்தமான நீரின் மூலம் பலநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அவை குடற்புழு நோய்கள், நுண்ணுயிரி மூலம் உண்டாகும் அடைப்பான்;, தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள், நைட்ரேட், அம்மோனியா போன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் போன்றவையாகும். கால்நடைகளுக்கு அளிக்கும் நீருடன், இரசாயன கழிவு, சாக்கடை அல்லது கழிவுநீர் கலக்காமல் பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். இதனால் நோய் உண்டாக்கும் கிருமிகள் குடிநீருடன் கலந்து கால்நடைகளில் பெரும் சேதத்தை விளைவிக்கும்.

தண்ணீரை சுத்தப்படுத்தும் முறைகள்:
கால்நடைகளுக்கு அளிக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி பின் உபயோகிக்க வேண்டும். குளோரின், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவற்றை கால்நடைகளுக்கு அளிக்கும் தண்ணீரில் கலந்து அளிப்பதால் நீரில் உள்ள நோய்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது. தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரை 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 8 கிராம் என்ற அளவில் கலந்து 12 மணி நேரத்திற்குப் பிறகு கால்நடைகளுக்கு குடிதண்ணீராக உபயோகிக்கலாம். இதற்கு பண்ணையில் 2 தண்ணீர் தொட்டிகளை அமைத்து ஒரு தண்ணீர் தொட்டியில் ப்ளீச்சிங் பவுடரை காலையிலும் மற்றொரு தண்ணீர் தொட்டியில் மாலையிலும் ப்ளீச்சிங் பவுடரைப் போடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காலையில் ப்ளீச்சிங் பவுடர் போட்ட தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை மாலையிலும், மாலையில் ப்ளீச்சிங் பவுடர் போட்ட தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை மறுநாள் காலையிலும் கால்நடைகளுக்கு குடிப்பதற்குத் தரலாம்.

தண்ணீர் தொட்டியில் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை தொட்டியில் உள்ள தண்ணீரைக் காலி செய்து விட்டு சுண்ணாம்பு பூசி காய்ந்த பின் தண்ணீர் நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் தண்ணீர் தொட்டியில் பாசி பிடிக்காது. கால்நடைகள் குடிக்கும் தண்ணீரில் கழிவுப் பொருட்கள் கலக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கால்நடைகள் குடிக்க சேமித்து வைத்திருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் குப்பைகள், மர இலைகள் போன்றவை விழாதவாறு மூடி வைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்