கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு எதிர்பாராத விதமாக வாகனங்கள் மோதும் பொழுதும், ஈரமான கொட்டகைகளில் வழுக்கி விழும் பொழுதும் மற்ற கால்நடைகளுடன் சண்டையிடும் பொழுதும் சாக்கடை மற்றும் குழிகளில் விழும் பொழுதும் எலும்பு முறிவுகள் ஏற்படுவதுண்டு. எலும்பு முறிவு என்பது எந்த நேரமும் ஏற்பட நேரிடலாம் என்பதால் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரின் உதவியை உடனடியாக நாட முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுது தகுந்த முதலுதவி சிகிச்சைகளை கால்நடை வளர்ப்போர் மேற்கொள்ளும் பொழுது எலும்பு முறிவுகளை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் சரி செய்ய முடியும். இல்லையெனில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது அறியாமல் கால்நடைகள் கால்களை உதைத்துக் கொள்ளும்.
அடிக்கடி எழ முயற்சித்து கீழே விழும். இவ்வாறு செய்வதால் சாதாரணமாக சிறிய எலும்பு முறிவு கூட பெரிய எலும்பு முறிவாக மாறுவது, உடைந்த எலும்புகள் மேலும் உடைந்து எலும்புகள் சதை மற்றும் தோலை கிழித்து வெளியே துறுத்திக்கொள்வது போன்ற பல சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளன. இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் கால் எலும்புகளை குணப்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுதல், எலும்பு முறிவை குணப்படுத்த முடியாமல் போதல், காயங்கள் வழியாக நுண்கிருமிகள் உட்சென்று சீழ்பிடித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே கால்நடைகளுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை சிகிச்சைக்காக அணுகுவதற்கு முன் எலும்புமுறிவு ஏற்பட்ட உடனே தகுந்த முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டால் பிரச்சினைகள் வருவதை தடுப்பதோடு தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறிகள்:
விபத்துகளுக்குப் பிறகு கால்நடைகள் கால்களை நொண்டுதல், படுத்துக் கொண்டு எழுவதற்கு சிரமப்படுதல், எலும்பு முறிந்த கால்களில் வீக்கம் ஏற்படுதல், எலும்பு முறிந்த இடத்தில் அசைக்கும் பொழுது அசாதாரணமான அசைவுகள், எலும்பு உடைந்த காலை லேசாக ஆட்டிக்கொண்டே உடைந்த எலும்பை தொடும் பொழுது உடைந்த எலும்புகளில் “நொறநொற” என சத்தத்தை உணர்தல், சில சமயங்களில் உடைந்த எலும்புகள் தோலுக்கு வெளியே தெரிதல் போன்ற அறிகுறிகள் மூலம் எலும்பு முறிவைக் கண்டறியலாம்.
முதலுதவி சிகிச்சைகள்:
எலும்பு முறிவுக்கான முதலுதவி சிகிச்சையானது எலும்பு முறிவின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எலும்பு முறிவு எந்த வகையாக இருந்தாலும் எலும்பு முறிவுடன் பிரச்சினைகளை மேலும் பெரிதாக்காமல் இருக்க முதலில் எலும்பு முறிவு உண்டான காலை அதிக அசைவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் மூங்கில் அல்லது பி.வி.சி பைப்பை தேவையான அளவுக்கு வெட்டி பயன்படுத்தலாம்.
சாதாரண எலும்பு முறிவு:
சாதாரண எலும்பு முறிவு என்பது எலும்பு மட்டும் முறிந்து காணப்படும். தோலில் காயங்கள் ஏதுமின்றி சதை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் எந்தவித பாதிப்பும் வெளியே தெரியாமல் இருப்பதாகும். சாதாரண எலும்பு முறிவு என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பின் முதலில் ஒரு சுத்தமான பருத்தித் துணியை பேண்டேஜ் துணி அளவில் வெட்டிக்கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட பாகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதிக்கு மேலுள்ள மூட்டிலிருந்து கீழுள்ள மூட்டு வரை கட்டுப் போட வேண்டும். அதன் மேல் வெட்டி வைத்துள்ள மூங்கில் அல்லது பி.வி.சி பைப்பை வைத்துக் கட்ட வேண்டும்.
மூங்கில் குச்சிகளை உபயோகப்படுத்தினால் மூன்று குச்சிகளை வைத்துக் கட்ட வேண்டும். பி.வி.சி பைப் வைத்துக் கட்டினால் காலின் அளவிற்குத் தகுந்தவாறு பைப்பை பாதியாகவோ அல்லது மூன்றில் ஒரு பகுதியாகவோ வெட்டி ஒரு பாகத்தை வைத்துக் கட்ட வேண்டும். மூங்கில் குச்சிகளை பயன்படுத்தினாலும் அல்லது பி.வி.சி பைப்பை பயன்படுத்தினாலும் அதன் நீளமானது முறிவு ஏற்பட்ட எலும்புக்கு மேலுள்ள மூட்டு மற்றும் கீழுள்ள மூட்டு ஆகியவற்றை சேர்த்து கட்ட வேண்டும். அப்பொழுது தான் முறிந்த எலும்புகளை அசைவுகளிலிருந்து காக்க முடியும்.
மூங்கில் அல்லது பி.வி.சி. பைப்பை வைத்துக் கட்டும் பொழுது குறைந்த பட்சம் ஐந்து கட்டுகள் கட்ட வேண்டும். கட்டானது மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிக நெகிழ்ந்தோ இல்லாமல் மிதமான இறுக்கத்துடன் இருக்க வேண்டும். கட்டுப் போட்டபின், பி.வி.சி பைப் அல்லது மூங்கில் குச்சிக்கும் தோலுக்கும் இடையில் ஒரு விரல் நுழையும் வகையில் இருந்தால் அது மிதமான இறுக்கத்துடன் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு விரலுக்கு மேற்பட்டு இடைவெளி இருந்தால் கட்டு நெகிழ்ச்சியாக உள்ளது என்பதை உணர்ந்து சிறிது இறுகக்கட்ட வேண்டும்.
ஒரு விரல் கூட நுழையாமல் இருந்தால் கட்டானது மிகவும் இறுக்கமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு கட்டை கழற்றி மிதமான இறுக்கத்துடன் கட்ட வேண்டும். கட்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தால் கால்நடைகள் புரண்டு படுக்கும் பொழுதோ அல்லது எழ முயற்சிக்கும் பொழுதோ கட்டானது கழன்று விடும். கட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் கட்டிற்கு கீழுள்ள பகுதியில் அதிக வீக்கம் ஏற்படுவதுடன் அதிக வலியும் உண்டாகும். அதனால் கட்டானது எப்பொழுதும் மிதமான இறுக்கத்துடன் இருப்பதை நாம் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.
காயங்களுடன் எலும்பு முறிவு:
கால்நடைகளில் சில சமயங்களில் எலும்பு முறிவுடன், தோலில் காயங்கள், சதை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் பாதிப்புகள் போன்றவையும் காணப்படும். இவ்வகை எலும்பு முறிவுகளுக்கு தகுந்த முதலுதவி சிகிச்சைகள் செய்யாமல் விட்டால் எலும்பு முறிவுடன் மற்ற பாதிப்புகளும் இருப்பதால், நுண்ணுயிர்க்கிருமிகள் காயங்கள் வழியாக உட்சென்று எலும்பு மஜ்ஜை நோயை ஏற்படுத்தி எலும்பு முறிவை சரி செய்ய முடியாமலே போவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே இவ்வாறு காயங்களுடன் எலும்பு முறிவைக் கண்டவுடன் மண், தூசி மற்றும் இதர அயல்பொருட்கள் காயத்திற்குள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
இரத்தப்போக்கு அதிகம் இருப்பின் சுத்தமான கயிறு கொண்டு உடைந்த எலும்பிற்கு மேலே மிதமான இறுக்கத்துடன் கட்டுவதன் மூலம் இரத்தப் போக்கை தடுக்க முடியும். பிறகு பொட்டாசியம் பெர்மாங்கனேட் மருந்தை (அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்) ஒரு சிட்டிகை அளவு எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து காயம் ஏற்பட்ட இடத்திலும் உடைந்த எலும்புப் பகுதியிலும் நன்கு கழுவி விடுவதன் மூலம் மண் தூசி இருப்பதை அகற்றலாம். பிறகு சாதாரண எலும்பு முறிவிற்கு கட்டுப் போடுவது போன்று சுத்தமான துணி கொண்டு கட்டுப்போட்டு விட்டு அதற்கு மேல் மூங்கில் அல்லது பி.வி.சி. பைப் கொண்டு கட்டுப் போட வேண்டும். இரத்தப்போக்கு நின்ற பின் இரத்தப்போக்கை நிறுத்த போடப்பட்ட கட்டை நீக்கி விட வேண்டும்.
கால்நடைகளில் எலும்பு முறிவிற்கான முதலுதவி என்பது எலும்பு முறிவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எலும்பு முறிவின் காரணமாக ஏற்படக்கூடிய பக்க விளைவுகளைத் தடுப்பதற்காகவும் செய்யப்படுவது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் கால்நடை மருத்துவரை அணுகி சாதாரண எலும்பு முறிவில் வீக்கம் இருந்தால் வீக்கத்தைக் குறைப்பதற்கான மருந்துகளைக் கொடுத்து வீக்கம் குறைத்த பின் மாவுக்கட்டு போடுதல் போன்ற தகுந்த சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.
காயங்களுடன் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் காயங்கள் மற்றும் எலும்புகளில் சீழ்ப்பிடிக்காமல் இருக்கவும் காயங்கள் விரைவில் குணமடையவும் தகுந்த நுண்ணுயிரிக்கொல்லி மருந்துகள் மற்றும் உடைந்த எலும்புகள் விரைவில் குணமடைய தகுந்த கட்டுகள் போடவும் வேண்டும். அதனால் கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளுக்கு எலும்பு முறிவிற்கான முதலுதவி சிகிச்சைக்குப்பின் கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.