கால்நடைகளின் சிறந்த தீவனமான அசோலா வளர்க்கும் முறை

அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். இத்தாவரம் மிகமிகச் சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களையும் கொண்டது. தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். அசோலாவின் இலைகள் பெரும்பாலும் முக்கோண வடிவிலிருந்து பல கோண வடிவமாக தண்டின் இரு பக்கங்களிலும் இலைகள் ஒன்றன் மீது ஒன்றாக மாற்று வரிசைகளில் அடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும்.அசோலா “சால்வீனியா” குடும்பத்தைச் சார்ந்தது. அதனை ‘மூக்குத்திச் செடி’ அல்லது ‘கம்மல் செடி’ என்றும் அழைப்பர்.

அசோலாவின் சிறப்பியல்புகள்;
1 கிலோ அசோலா 1 கிலோ பிண்ணாக்கிற்குச் சமம். அசோலாவை உற்பத்தி செய்வதும் எளிது. எனவே அசோலாவை தீவனத்துடன் சேர்த்துக் கால்நடைகளுக்குக் கொடுக்கும் பொழுது அடர்தீவனங்கள் கொடுப்பததை குறைத்துக் கொள்ளலாம். அதனால் தீவனச் செலவு குறைவதுடன் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். கறவை மாடுகளுக்கு அசோலாவை தினமும் தீவனத்துடன் கொடுக்கும் பொழுது 15 முதல் 20 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கிறது. கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது. அசோலா உட்கொள்ளும் கோழிகள் அதிகமான எடையை அடைகின்றன. மேலும் முட்டையில் உள்ள மஞ்சள் கரு திடமாக காணப்படுகிறது.

அசோலாவை மாட்டுத் தீவனமாக பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். அதிக புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன. அசோலாவை கால்நடைகளுக்கு மற்ற கலப்புத் தீவனத்துடனோ அல்லது வைக்கோலுடனோ சேர்ந்து அளிப்பதால் கால்நடைகளின் எடையும், வளர்ச்சியும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். கறவை மாடுகளுக்கு தினமும் 2 கிலோ வரையும் ஆடுகளுக்கு 500 கிராமும் கோழிகளுக்கு 100 கிராமும் கொடுக்கலாம். முயல்களும் அசோலாவை விரும்பி உண்ணும். சோலா உற்பத்தி செய்யும் இடங்களில் கொசுத்தொல்லை இருக்காது.

அசோலாவில் இருக்கும் சத்துக்கள்:

வ. எண் சத்துக்கள் சதவிகிதம்
1 புரதச் சத்து 25-35
2 தாதுக்கள் 10-12
3 அமினோ அமிலங்கள் 7-10
4 தழைச்சத்து 1.96-2.30
5 மணிச்சத்து 0.16-0.59
6 சாம்பல் சத்து 0.31-0.90
7 சுண்ணாம்பு சத்து 0.45-1.70
8 கந்தக சத்து 0.22-0.73
9 மக்னீசியம் சத்து 0.22-0.66
10 இரும்பு சத்து 0.04-0.59

அசோலா வளர்க்கும் முறைகள்:
அசோலாவை தீவனமாக வழங்க உற்பத்தி செய்யும் பொழுது எந்தவிதமான பூச்சி அல்லது பூஞ்சான் கொல்லிகளை உபயோகப்படுத்தக் கூடாது.

தேவையான பொருட்கள்: (ஒரு குழிக்கு)
செங்கல் : 30-40 கற்கள்
சில்பானின் பாய் : 6 அடி நீளம் 3 அடி அகலம்
செம்மண் : 30 கிலோ
புதிய சாணம் : 3 கிலோ
சூப்பர் பாஸ்பேட் : 30 கிராம்
தண்ணீர் அளவு : 10 செ.மீ உயரம்
அசோலா விதை : 300 – 500 கிராம்
யூரியா சாக்கு : தேவையான எண்ணிக்கை

வளர்ப்பு முறை:
முதலில் அசோலா வளர்க்க சுத்தமான இடம் மற்றும் மர நிழலும், வெயிலும் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும். நேரடி சூரிய ஒளி 3 அணி நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. அதிக வெயில் படும் இடத்தை தவிர்க்க வேண்டும். எனவே மர நிழலில் அசோலா பயிரிடுவதற்கு இடத்தை தேர்வு செய்வதால் அதிக வெயில் படாமல் தேவையான நிழல் மற்றும் வெயில் கிடைக்கும்.

குழியின் அளவு 6 அடி நீளம் 3 அடி அகலம் இருக்குமாறு வெட்டிக் கொள்ள வேண்டும். புல் பூண்டுகள் வளருவதைத் தடுக்க யூரியா சாக்கினை குழியில் பரப்ப வேண்டும். பின் செங்கற்களை குறுக்கு வாட்டில் குழியைச் சுற்றி வைக்க வேண்டும். அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பி விட வேண்டும். சில்பாலின் பாயின் மீது 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.

3 கிலோ புதிய சாணத்தை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். பின்னர் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6 முதல் 9 குடம் ஊற்ற வேண்டும. ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும். கடைசியாக 300- 500 கிராம் சுத்தமான அசோலா விதைகளை குழியில் போட வேண்டும். அதன் மேல் இலேசாக தண்ணீர் தெளிக்கவும். விதைத்த மூன்று நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும். அசோலா 15 நாட்களில் நலல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும். 15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு:
அசோலாவில் அதிக சூரிய ஒளிக்கதிர்கள் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும். ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒருமுறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்றி விடடு புதிதாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.

மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடு பொருட்களையும் நீக்கி விட்டு புதியதாக இடு பொருட்களை சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.

அசோலாவின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்:
தண்ணீர்: அசோலாவானது குடிநீரில் மட்டுமே நன்கு வளரும். மேலும் தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் உடனே இறந்து விடும்.

ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் 85-90 சதவீதம் இருக்கும் பொழுது அசோலா நன்கு வளர்ச்சி அடைகிறது. ஈரப்பதம் 60 சதவீதத்திற்கு குறையும் பொழுது வறண்டு இறந்து விடுகின்றது.

சூரிய ஒளி: அதிக சூரிய ஒளி படும் பாழுது அசோலா பழுப்பு நிறமாகி விடுகிறது.

காற்று: அதிக வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்து விடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை: காரத்தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகிறது.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்