கால்நடைகளின் கொட்டகைகள் பராமரிப்பு முறைகள்

கால்நடை வளர்ப்பில் அதிக வருமானம் பெறுவதற்கு நம் கால்நடைகள் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கால்நடைகளின் ஆரோக்கியம் என்பது நாம் கால்நடைகளை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருந்து தகுந்த தீவனம் மற்றும் நோய்ப்பராமரிப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமன்று. கால்நடைகளை நாம் வைத்திருக்கும் கொட்டகையின் பராமரிப்பு முறையும் கால்நடைகளின் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் சிறந்த ஆரோக்கியம் என்பது கொட்டகையின் பராமரிப்பு முறையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தகுந்த கொட்டகை பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் கால்நடைகள் ஆரோக்கியமாக இருப்பதோடு கால்நடைகளின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். நோய்ப்பராமரிப்புச் செலவும் குறையும்.

தரைப் பகுதியினை சுத்தம் செய்தல்

தினமும் கொட்டகையின் தரைப்பகுதியினை நன்கு கழுவி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சாணம் மற்றும் வேறு கழிவுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி கொட்டகையை விட்டு வெளியே எருக்குழி அல்லது கழிவு சேமிப்புக் கிடங்கில் போட்டு உரத்திற்கு பயன்படுத்தலாம். பொதுவாக பண்ணையாளர்கள் சாணம் மற்றும் கழிவுகளை பண்ணையின் ஓர் ஓரத்தில் போட்டு வைப்பதால் பண்ணையில் துர்நாற்றம் ஏற்படுத்துவதுடன் கொசுக்களும் ஈக்களும் பெருகி கால்நடைகளுக்கு மிகுந்த தொந்திரவு கொடுக்கும். எனவே சாணம் போன்ற கழிவுகளை பண்ணைக்கு வெளியே அப்புறப்படுத்துவது அவசியமாகும்.

கிருமி நாசினி மருந்து கொண்டு கொட்டகையின் தரையை சுத்தம் செய்தல்

சூரிய ஒளி நல்லதொரு கிருமி நாசினி ஆகும். கோட்டகையின் அமைப்பு, ஒரு நாளில் கொஞ்ச நேரமாவது சூரிய ஒளி நன்கு படும் படி இருக்க வேண்டும். முக்கியமாக வடிகால்கள் மற்றும் அசுத்தங்கள் சேரக்கூடிய மற்ற இடங்களிலும் சூரிய ஒளி நேரடியாக படுவது நல்லது. கொட்டகையில் கழிவுகளை அகற்றி தண்ணீர் ஊற்றி கழுவிய பின்பு தான் கிருமி நாசினி கொண்டு கொண்டு அனைத்து இடங்களையும் சுத்தம் செய்யப்பட வேண்டும். வாரம் இரு முறை தரைப்பகுதியினை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

சுற்றுச் சுவர் பகுதிகளை சுத்தம் செய்தல்

வாரம் ஒரு முறை கொட்டகையின் சுற்றுப்புறச் சுவரை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையின் சுவற்றில் உள்ள ஒட்டடைகளை வாரம் ஒரு முறை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். சுவற்றில் ஏதேனும் விரிசல் போன்றவை இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும். ஏனெனில் சுவற்றின் விரிசலில் உள்ள இடைவெளிகளில் உண்ணிகள் ஒளிந்து கொண்டு கால்நடைகளின் உடம்பில் ஏறி உண்ணிகள் மூலம் பரவும் நோய்களுக்குக் காரணமாக இருக்க நேரிடும்.

கொட்டகையின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தல்

கொட்டகையின் சுற்றுப்புறத்தை இரு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகள் மற்றும் கூளங்களை கொட்டகைளை ஒட்டி உள்ள சுற்றுப்புறத்தில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுண்ணாம்புத் தூள் 1 கிலோ ப்ளீச்சிங் தூள் 100 கிராம் கலந்த கலவையை கொட்டகைசை; சுற்றியுள்ள இடங்களில் வாரம் ஒரு முறை தூவி விட வேண்டும்.

சுண்ணாம்பு அடித்தல்

வருடம் ஒரு முறை கொட்டகையின் சுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும். கல் சுண்ணாம்பு வாங்கி ஊற வைத்து சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தால் தான் சுண்ணாம்பு கிருமி நாசினியாக செயல்பட்டு கொட்டகையில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.

நோய்த்தொற்று ஏற்படும் பொழுது கொட்டகை பராமரிப்பு முறைகள்

பண்ணையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படும் பொழுது நோய்க்கிருமிகளானது கொட்டகையில் தங்கி மற்ற கால்நடைகளுக்கும் பரவி பெருத்த பொருளாதாரம் ஏற்பட ஏதுவாகும். இவ்வாறு நோய்த்தொற்று ஏற்படும் கொழுது கொட்டகையில் தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளும் பொழுது கொட்டகையில் நோய்த்தொற்று கிருமிகளை அழித்து விட முடியும். அதற்கு முதலில் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றின் 1.5 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதி, தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் கவனத்தோடு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். முதலில் எல்லா இடங்களிலும்; அசுத்தம் கொஞ்சம் கூட இல்லாதவாறு சுரண்டப்பட வேண்டும். கொட்டகையின் தரையானது மண் தரையாக இருந்தால் 10 செ.மீ அளவாவது தோண்டப்பட்டு மேல் மண்ணை அப்புற்ப்படுத்த வேண்டும். சுரண்டிய அசுத்தங்களை கால்நடைகள் நடமாடாத இடமாகப் பார்த்து குவித்து வைக்கப்பட வேண்டும்.

சுரண்டிய அசுத்தங்களை சேமிக்கும் பொழுது உண்டாகும் வெப்பமே அவற்றில் உள்ள கிருமிகளை ஒழித்து விட வோதுமானது. அசுத்தங்கள் சுரண்டி எடுக்கப்பட்ட பின்பு சுவர், தரை, தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகளை 4 சதவிகிதம் சலவை சோடா கரைசல் ( 1000 லிட்டர் தண்ணீரில் 4 கிலோ சலவை சோடா) கொண்டு கழுவ வேண்டும். இதற்கு பிறகு வேறு எந்த கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டுமோ அதை நன்றாக இந்த இடங்களில் தெளித்து 24 மணி நோரம் விட்டு விட வேண்டும். அதற்கு வின்கு இந்த இடங்கள் சுத்தமான நீரினால் கழுவப்பட்டு சூரிய வெப்பத்திலும் காற்றிலும் உலரப்பட வேண்டும். தீவனத் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகளின் உட்புறம் வெள்ளையடிக்கப்பட வேண்டும். இவ்வாறு கொட்டகையை சுத்தம் செய்த பிறகு கொட்டகையானது கால்நடைகளை வளர்ப்பதற்கு ஏற்றதாகி விடும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்