கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்புத் தொழிலாகும். கால்நடைகளை வளர்க்கும் பொழுது தீவனச் செலவை குறைத்தும், நோயில்லாமல் நல்ல ஆரோக்கியத்துடனும், குட்டிகளில் இறைப்பைக் குறைத்தும், அதிக வளர்ச்சி பெற்றும், உற்பத்தியை அதிகப் படுத்தும் பொழுது தான் கால்நடை வளர்ப்புத் தொழிலின் மூலம் அதிக இலாபம் கிடைக்கிறது. கால்நடைத் தீவனத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து இவை மூன்றும் இருப்பது போலவே தாது உப்புக்களும் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. தாது உப்புக்கள் புரதம், கொழுப்பு மற்றும் மாவுப் பொருளின் ஆக்க சிதைவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. தாது உப்புக்கள் குறைவதினால் சில முக்கியமான நோய்கள் கால்நடைகளுக்கு உண்டாகின்றன. அதனால் கால்நடைகளை வளர்ப்போர் தாது உப்புக்களின் முக்கியத்தை அறிந்து தமது வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைச் செல்வங்களுக்கு தாது உப்புக்களை தவறாது கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
கால்நடைகளுக்குத் தேவைப்படும் முக்கியமான தாது உப்புக்கள் :
கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரின், கந்தகம் போன்றவை கால்நடைகளுக்கு அதிக அளவில் தேவைப்படும் தாது உப்புக்களாகும். அயோடின், இரும்புச்சத்து, தாமிரம், கோபால்ட், மாங்கனீசு, துத்தநாகம், செலினியம், புளோரின், குளோரின் மற்றும் சிலிகான் போன்றவை கால்நடைகளுக்குக் குறைந்த அளவில் தேவைப்படும் தாது உப்புக்களாகும்.
கால்சியம், பாஸ்பரஸ் தாது உப்புக்கள் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்காக உதவுகின்றன. வளரும் கன்றுகள், பால் தரும் பசுக்கள் இவற்றின் கால்சியம், பாஸ்பரஸ் இரண்டின் தேவையும் மிக அவசியம். கால்சியம் சத்துக் குறைவால் பால் வாதம் எனும் நோயும், பாஸ்பரஸ் சத்துக் குறைவால் மரம், காகிதம், மண் போன்றவற்றை உண்ணக்கூடிய “பைக்கா” என்னும் நோயும் கால்நடைகளில் உண்டாகின்றன. சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் இரத்த அழுத்தம் பராமரிப்பு மற்றும் நரம்புகள் நலல முறையில் இயங்கவும் உதவுகின்றன. இந்த தாது உப்பு குறைவதினால் பசியின்மை, குறைந்த வளர்ச்சி மற்றும் பால் உற்பத்திக் குறைவு போன்றவை ஏற்படும். மக்னீசியம் சத்து குறைவதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உண்டாகலாம்.
தாமிரம், கோபால்ட் மற்றும் இரும்பு சத்துக்கள் உடலின் பல முக்கிய இயக்கங்களுக்கும் அவசியமாகிறது. இவை சக்தி அல்லது எரிபொருளாகவும், உடலுறுப்பு வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. கோபால்ட், வைட்டமின் பி-12, உற்பத்திக்கு அவசியமாகிறது. தாமிரம் மற்றும் இரும்புச்சத்து குறைவதால், இரத்தச்சோகை மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் தோன்ற காரணமாகின்றது. மாங்கனீசு, வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. துத்தநாகம், தோல் மற்றும் உரோம வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்திற்கும் உதவுகிறது. செலினியம், எரிபொருளாக்கத்திற்கு உதவுவதோடு வைட்டமின் ஈ சத்துடன் சேர்த்து திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது. கால்நடை தீவனத்தில் தாது உப்புக்கள் மிகக் குறைந்த அளவே தேவைப்பட்டாலும், இவற்றின் குறைபாடுகள் பலவித நோய்களை உண்டு பண்ணுகின்றன. எனவே தாது உப்புக்கள் தேவையான, குறிப்பிட்ட அளவுகளில் தீவனங்களில்; இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
கால்நடைகளுக்குத் தாது உப்புக்கள் கிடைக்கச் செய்யும் வழி முறைகள் :
கிராமங்களில் தாராளமாக கிடைக்கக் கூடிய அகத்திக் கீரை, சூபாபல், கல்யாண முருங்கை போன்றவற்றில் கால்நடைகளின் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய பசுந்தீவன மரங்களையோ அல்லது ஸ்டைலோ, சென்ட்ரோ, சிராட்ரோ, காராமணி போன்ற தாவரங்களையோ வளர்த்து அதன் பசுந்தழைகளை தீவனமாக பயன்படுத்துவதால் கால்நடைகளில் தாது உப்புக்கள் குறைபாடுகளால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம்.
தாது உப்புத்தூளை அடர் தீவனத்துடன் கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். தாது உப்புத்தூளை கால்நடைகளுக்குத் தக்கவாறு 5 முதல் 30 கிராம் வரை தீவனத்துடன் கலந்து தினமும் தர வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை காலையிலோ அல்லது மாலையிலோ கால்நடைகளுக்குத் தரப்படும் தீவனத்துடன் கலந்து தர வேண்டும். அல்லது கால்நடைத் தீவனத்தை மொத்தமாக தயாரிக்கும் பொழுது ஒரு சதவிகித அளவில் தாது உப்புத்தூளைக் கலந்து கலப்புத் தீவனம் தயாரிக்கலாம். கால்நடைகளுக்கான தாது உப்புக் கட்டியும் கிடைக்கின்றது. கொட்டகையில் தாது உப்புக் கட்டியை கட்டித் தொங்க விடுவதன் மூலம் கன்றுகள், ஆட்டுக்குட்டிகள், வளரும் பருவத்திலுள்ள கால்நடைகள் மற்றும் வளர்ந்த கால்நடைகள் தாது உப்புக்கட்டியை நாக்கால் சுவைப்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான தாதுக்களை பெறச் செய்யலாம்.
தாது உப்புக்கள் அளிப்பதால் உண்டாகும் நன்மைகள்:
தாது உப்புக்களை தினமும் கால்நடைகளுக்குக் கிடைக்கச் செய்வதால் பல நன்மைகள் உண்டாகின்றன. முதலில் கால்நடைகளில் தாது உப்புக் குறைபாட்டால் உண்டாகும் பலவகையான நோய்களைத் தவிர்க்கலாம். கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. கால்நடைகளில் செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. கன்றுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளுக்குத் தாது உப்புக்களைக் கொடுப்பதால் அவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதுடன் உடல் எடையும் அதிகரிக்கிறது. மரம், காகிதம், மண் போன்றவற்றை உண்ணக்கூடிய “பைக்கா” என்னும் சத்துக் குறைபாடு நோய் வராமல் தடுக்க முடிகிறது. உடனிருக்கும் மற்ற குட்டிகளின் மறறும் கன்றுகளின் தோலைக் கடிப்பதும் முடியை உண்பது போன்ற தீய பழக்கத்தைத் தடுக்க முடிகதிறது. குட்டிகளிலும் கன்றுகளிலும் ஏற்படும் இறப்பைத் தடுக்க முடிகிறது. குறுகிய காலத்தில் கால்நடைகள் பருவமடைவதால் நமக்கு விரைவில் குட்டிகளை ஈன்று அதிக பலனளிக்கின்றன.
பருவமடைந்த கால்நடைகளின் கர்ப்பப்பை நல்ல வளர்ச்சி அடைகின்றது. அதனால் விரைவில் சினைப்பிடிக்கின்றன. சினைப்பிடிக்காத மாடுகளுக்குத் தொடர்ந்து தாது உப்புக்களைக் கொடுக்கும் பொழுது மாடுகள் எளிதில் சினைப்பிடிக்கின்றன. சினையாக உள்ள கால்நடைகளுக்கு தாது உப்புக்களைக் கொடுக்கும் பொழுது கர்ப்பப்பையில் உள்ள குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் நல்ல தரமான வளர்ச்சி பெற்ற குட்டிகள் பெறுவதற்கும் உதவியாக உள்ளன. ஈனும் காலத்தில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல் சுலபமாக குட்டிகளை ஈனுகின்றன. ஈன்ற பின் மாடுகளில் ஏற்படும் நஞ்சுக் கொடி தங்குதல், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கின்றன. ஈன்ற மாடுகள் மற்றும் ஆடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கிறது. கறவை மாடுகளில் தினமும் அரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் பால் வரை உற்பத்தி அதிகரிக்கும். கறவை மாடுகளில் சினைப்பிடிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்த்து விரைவில் சினை பிடிப்பதால் இரண்டு கன்றுகளுக்கிடையேயான இடைவெளி குறைந்து வருடம் ஒரு கன்று பெற மிகவும் உதவியாக இருக்கின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் மற்றும் வான்கோழிகளுக்கும் தீவனத்தில் ஒரு சதவகித அளவில் தாது உப்புத்தூளைக் கலந்து தரும் பொழுது நல்ல உடல் வளர்ச்சி பெறுவதுடன் அதிக முட்டைகளை இடுகின்றன. இட்ட முட்டைகள் அதிக எடையுடனும் நல்ல தரத்துடனும் இருப்பதோடு குஞ்சுகள் பொரிக்கும் விகிதமும் அதிகமாகின்றன. இவ்வாறு அனைத்து வகையான கால்நடைகளில் அனைத்து பருவத்திலும் தாது உப்புக்களைக் கொடுப்பதன் மூலம் கால்நடைப் பண்ணையில் கால்நடைகளை நோயில்லாமல் பராமரித்து உற்பத்தித் திறனை அதிகரித்து குட்டிகளில் இறப்பைத் தவிர்த்து கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக இலாபம் பெற முடியும் என்பதில் எந்தவிதமான ஐயமில்லை. கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தாது உப்புத்தூள் பாக்கெட்டுக்களை எளிதில் பெற்று தமது கால்நடைகளுக்கு பயன்படுத்தும் வகையில் மதுரை கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தாது உப்புத்தூள் பாக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.