கறவை மாடு பராமரிப்பில் மிக முக்கிய நிலை வகிப்பது கன்று பராமரிப்பு. “இன்றைய கன்று நாளைய பசு” என்பதால் கன்றுகளைப் பாராமரிப்பதில் மிகக் கவனம் செலுத்துவது அதன் பிற்கால வளர்ப்பிலும், முன்னேற்றத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. சிறந்த கன்று பராமரிப்பு அது பிறப்பதற்கு முன்பே ஆரம்பம் ஆகிறது. அதனால் சினைப் பசுவிற்கு 7 மாத சினை முதல் அதன் உடல் நிலைக்கும் பால் உற்பத்திக்கும் கொடுக்கும் கலப்பு தீவனத்துடன் சுமார் 1 முதல் 1.5 கிலோ கலப்புத் தீவனம் அதிகம் கொடுக்க வேண்டும். ஆதனால் பிறக்கும் கன்று திடமாகவும், தக்க வளர்ச்சி உள்ளதாகவும் விளங்கும். கன்று ஈன்றவுடன் தாய்ப்பசு கன்றினை நக்கி சுத்தம் செய்து விடும். அப்படி இல்லையெனில் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட வேண்டும்.
குளிர் காலங்களில் குளிர் தாக்கா வண்ணம் பாதுகாப்பு அளித்தல் வேண்டும். பிறந்த கன்றின் தொப்புளை சுமார் 2 முதல் 3 செ.மீ நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினால் இறுகக் கட்டி விட வேண்டும். அதற்கு கீழ் 3 செ.மீ விட்டு சுத்தமான கத்தரி கொண்டு கத்தரித்து விட வேண்டும். கத்தரித்த இடத்தில் புண் ஆகாமல் இருக்கவும், கொசு, ஈ போன்றவை தொல்லை கொடுக்காமல் இருக்கவும் உடனே டிங்சர் அயோடின் தடவி விட வேண்டும். இல்லையெனில் இதன் மூலம் நோய்க் கிருமிகள் உட்சென்று கன்றுகளின் உடல் நிலையை பாதித்து விடும்.
கன்று பிறந்த உடன் சீம்பால் அரை மணி நேரத்தில் கன்றின் எடையில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் கொடுக்கப்பட வேண்டும. இதன் மூலம் கன்றிற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. பொதுவாகக் கன்றிற்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும். தனது தாயின் மூலம் சீம்பால் கிடைக்க வாய்ப்பில்லாவிடில் மற்ற ஏதாவது ஒரு பசுவின் சீம்பாலைக் கொடுப்பது நல்லது. இது நடைமுறையில் சுலபமானதல்ல. ஆகையால் பால் பண்ணை வைத்திருப்பவர்கள் அதிகப் படியாகக் கிடைக்கும் சீம்பாலை உறைய வைத்து தேவைப்படும் போது 40டிகிரி செ.கி.க்கு காய்ச்சி கன்றுக்குக் கொடுக்கலாம்.
சீம்பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது. சீம்பால் கன்றுக்குக் கிடைக்கப் பெறாவிடில் “சீம்பால் பதிலியைக்” கொடுக்கலாம். 300 மி.லி. தண்ணீரில் ஒரு கோழி முட்டையை கலந்து அரை தேக்கரண்டி விளக்கெண்ணெயை விட்டு அத்துடன் 600 மி.லி பசும்பால் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் 3-4 நாட்கள் கொடுக்கலாம். கன்றினை 2வது மாதம் வரை பால்குடிக்க அனுமதிக்கலாம். மூன்றாவது வார தொடக்கத்திலிருந்தே பசும் புற்களையும் கன்று தீவனக் கலவையையும் சிறிது சிறிதாக அதிகரித்து இரண்டு மாதம் முடியும் தருவாயில் பால்குடியை நிறுத்த வேண்டும். இதனால் கன்று நல்ல ஊட்டம் பெற்று குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியுடன் பருவத்தை அடைய வாய்ப்புண்டாகிறது.
கன்றுகளுக்கு கன்றுத் தீவனம் கொடுப்பதன் மூலம் கன்று பால் குடிப்பதைக் குறைப்பதுடன் கன்று வளர்ச்சிக்கும் உறுதுணையாகி கன்று பராமரிப்புச் செலவும் குறையும். அரைத்த தானியங்கள் 60 கிலோ, பிண்ணாக்கு 27 கிலோ, தவிடு 10 கிலோ, தாது உப்புகள் 2 கிலோ மற்றும் உப்பு 1 கிலோ கலந்த கலவை கன்றுத் தீவனமாகும். கன்றுத் தீவனத்தை 2 வாரத்தில் 100 கிராமிலிருந்து ஆரம்பித்து 26 வாரத்தில் 1.5 கிலோவிற்கு படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும். கன்றுகளுக்கு இத்துடன் நல்ல உலர்புல்லோ, பச்சைத் தீவனமோ குறைவின்றி கொடுக்க வேண்டும். இவ்வகை பராமரிப்பில் கன்று குறைந்த செலவில் உடல் வளர்ச்சியடைந்து தக்க பருவத்தில் சினைப்பருவம் அடையும் என்பது உறுதி.
கன்றினை முதல் மாதம் முதல் ஆறாம் மாதம் வரை மாதம் ஒரு முறையும், அதன் பின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்ணி பேன் தௌ;ளுப் பூச்சி போன்ற புற ஒட்டுண்ணிகளை நீக்க உடலின் மேல் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து தேய்த்தல் வேண்டும். இளங்கன்றுகளை பாராமரிக்கும் கொட்டகைளில் தாதுஉப்புக் கட்டிகளை தொங்க விடுவதன் மூலம் கன்றுகளுக்கான தாது உப்புகனை அளிக்க இயலும். மேலும் கன்றுகளில் மண்ணைத் தின்னும் பழக்கத்தைத் தவிர்க்க முடியும்.
கறவை மாடுகளுக்கான கலப்புத் தீவனம்
தானியங்கள் 35 கிலோ, பிண்ணாக்கு 32 கிலோ, தவிடு வகைகள் 30 கிலோ,
உப்பு 1 கிலோ மற்றும் தாது உப்புக் கலவை 2 கிலோ கலந்து கறவை மாடுகளுக்கான கலப்புத் தீவனம் தயாரிக்கலாம்.
கறவை மாட்டிற்குத் தீவனம் அளிக்கும் முறைகள்
அடிப்படைத் தீவனம் 1.5 கிலோ, பசுந்தீவனம் 10 கிலோ, உலர் தீவனம் 1.5 கிலோ. பால் கறவைக்காக தீவனம் அடிப்படைத் தீவனத்துடன் ஒவ்வொரு 3 லிட்டர் பாலுக்கும் 1 கிலோ அடர்தீவனம் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். 15-25 கிலோ பசுந்தீவனம் மற்றும் 3 கிலோ உலர் தீவனம் கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஒரு மாடு ஒரு நாளைக்கு சராசரியாக 45-60 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
மாடுகளுக்கு தினமும் 30 திராம் தாது உப்புகள் கொடுப்பது பாலின் அளவை அதிகப்படுத்துவதற்கும், சரியான தருணத்தில் சினைப் பருவ அறிகுறிகள் வருவதற்கும் இன்றியமையாததாகும். மேலும் தினமும் 2-3 கிராம் இட்லிக்குப் போடப்படும் சோடா உப்பும்; 15-20 கிராம் சமையலுக்கு உபயோகிக்கும் உப்பும் தீவனத்துடன் சேர்த்து அளித்து வந்தால், எஸ்.என்.எப். என்ற கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.
நோய்ப்பராமரிப்பு
சிறந்த ஆரோக்கியமான மாடுகளே நல்ல பால் உற்பத்திக்கு வழி வகுக்கும். ஆகவே சரியான நேரத்தில் தகுந்த தடுப்பூசிகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போட்டு நோய் வருமுன் காப்பது சாலச்சிறந்தது. கோட்டகைளில் கழிவு நீர் தேங்கா வண்ணம் இருக்க வேண்டும். வெயில் காலங்களில் மாட்டின் மேல் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் தெளி;ப்பதன் மூலம் எஸ்.என்.எப். குறையாமல் இருக்கும் . கொட்டகையின் தரை சுத்தமாகவும் முடிந்தால் சிமெண்டினால் போடப்பட்ட தரையாக இருக்க வேண்டும். மாட்டின் மடியை பால்கறப்பதற்கு முன்னும் பின்னும் பொட்;டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரால் கழுவ வேண்டும்.
இனப்பெருக்கம்
கலப்பினக் கிடேரிகள் 15 முதல் 18 மாத காலத்தில் பருவத்தை அடைகின்றன. அதன்பின்
21 நாட்களுக்கு ஒரு முறை சினைத் தருண அறிகுறிகளைக் காட்டுகின்றன.
சினைத் தருண அறிகுறிகள்
- மாடு அமைதியின்றி காணப்படும்.
- அடிக்கடி கத்தும்
- அருகிலுள்ள மாடுகள் மேல் தாவுவதோடு மற்ற மாடுகள் தன் மீது தாவவும் அனுமதிக்கும்.
- தீவனம், தண்ணீர் குறைந்த அளவே உட்கொள்ளும்.
- அடிக்கடி சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும்.
- வாலை ஒதுக்கிக் கொண்டு நிற்கும்.
- பசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்து வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும்.
- கண்ணாடி போன்ற சுத்தமான சளி போன்ற திரவம் பிறப்பு உறுப்பிலிருந்து வழிந்து கொண்டு இருக்கும்.
- கறவையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் குறையும்.
இது போன்ற அறிகுறிகள் காலையில் கண்டால் அன்று மாலையும், மாலையில் கண்டால் மறுநாள் காலையும் செயற்கை முறை கருவூட்டல் செய்தல் வேண்டும். பசுக்களின் சினைக்காலம் 277 முதல்; 296 நாட்கள். கன்று ஈன்ற பின் சுமார் 45 நாட்களில் முதல் சினைத் தருண அறிகுறிகள் காட்டும். இத் தருணத்தை விட்டு விட்டு அடுத்த தருணத்தில் மீண்டும் கருவூட்டல் செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வருடம் ஒரு கன்று திடைக்கப் பெற்று கறவை மாட்டுப் பண்ணை இலாபகரமாக இருக்கும். சினை ஊசி போட்டு 90 வது நாள் சினையாகிவிட்டதா எனக் கால்நடை மருத்துவரிடம் உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.
சினை மாடுகள் பராமரிப்பு
கன்று ஈனும் நாளுக்கு 60 நாட்களுக்கு முன்பே பால் கறப்பதை நிறுத்த ஆரம்பிக்க வேண்டும். இதற்காக பால்கறப்பதை உடனே நிறுத்தி விடக் கூடாது. மாறாக பால் கறப்பதை ஒரு வேளையாக்கி பின் ஒரு நாள் விட்டு ஒருநாள் பால் கறந்;த பின் நிறுத்த வேண்டும். அதே சமயம் தீவனத்தையும் படிப்படியாக குறைப்பதன் மூலம் பால் உற்பத்தியைக் குறைக்க இயலும். 20-25 கிலோ பசும் புல்லும் 2 கிலோ கலப்புத் பீவனமும் அளிப்பது கன்றின் வளர்ச்சிக்கும் மாடு இறந்த சக்தியை மீட்டு அடுத்த கறவையில் நல்ல பால் உற்பத்தி செய்யவும் மிகவும் உறுதுணையாக இருக்கும். கன்று ஈனும் தருணத்தில் சினை மாட்டினை மற்ற மாடுகளிலிருந்து தணித்துக் கட்ட வேண்டும். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும், கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கன்று ஈனும் நேரம் நெருங்கும் போது பனிக்குடம் உடைந்து நீர் வெளி வரும். அதன்பின் சுமார் நான்கு மணி நேரத்திற்குள் கன்று வெளி வரும். கன்று பிறப்பதற்கு சிரமம் இருப்பின் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். கன்று ஈன்ற 8 மணி நேரத்திற்குள் நஞ்சுகொடி விழ வில்லையெனில் கால்நடை மருத்துவரின் உதவியை நாடவும். பிறக்கும் கன்றுகளில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நாசி வழியாகவும், வாயின் வழியாகவும் தொப்புள் வழியாகவும் உடலின் உட்செல்வதால் நோய் வாய்ப்பட ஏதுவாகிறது.
இதனைத் தடுக்க கன்று ஈனும் போது டெட்டால், லைசால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு அல்லது வேப்பிலை மஞ்சள் இட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொண்டு தாய்ப்பசுவின் பின்பகுதியை நன்றாகக் கழுவி விட வேண்டும். கன்று ஈன்ற பின்பும் அவ்வாறு செய்வது நல்லது. கன்று பிறப்பதற்கு உதவும் போது சுத்தமான கைகளால் கன்றினை எடுக்க வேண்டும். பிறந்த கன்றினைத் தரையின் மீது வைக்காமல் உலர்ந்த புல் மீது வைக்க வேண்டும்.
பதிவேடுகள் பராமரிப்பு
சினை ஊசி போட்ட விவரம் கொண்ட இனப்பெருக்கப் பதிவேடு, பால் உற்பத்தி பதிவேடு, கணக்குப் பதிவேடு, விற்ற மற்றும் வாங்கிய புது மாடுகள் பற்றிய பதிவேடுகள் போன்றவற்றைப் பராமரிப்பது நல்ல பலனைத் தரும். ஆகவே மாட்டுப் பண்ணையாளர்கள் மேற்கூறிய அறிவியல் முறைப்படி பராமரிப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் கன்றுகளையும் , கறவை மாடுகளையும் நோய் வராமல் பாதுகாப்பதுடன் கன்றுகளில் வளர்ச்சி மற்றும் பால் பண்ணையில் உற்பத்தி பெருகுவதால் பால் பண்ணை மூலம் அதிக இலாபமும் பெறலாம்.