கறவை மாட்டுப் பண்ணையில் சுத்தமான பால் உற்பத்தியும், பால் கறக்கும் முறைகளும்

பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ஏற்ற் ஓர் உணவாகும். பாலை அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிகவும் முக்கியம். பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருட்கள் உள்ளன. சுகாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3.5 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 8.5 சதவிகிதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும், எருமைப்பாலில் 5.0 சதவிகிதம் கொழுப்பும் 9.0 சதவிகிம் கொழுப்பற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும். பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன.

இறைச்சி சாப்பிடாதவர்களுக்குப் பால் இன்றியமையாத உணவாகும். எனவே எல்லா வகையிலும் பயன்படும் உணவான பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்ய வேண்டும். அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காச நோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா , டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும்.

மேலும் பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி, பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலை வெதுவெதுப்பான நம் சுற்றுச்சூழ்நிலையில் வெளியே நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில் கிருமிகள் வெகு விரைவாக வளாந்து பால் கெட்டு விடுவதால் விற்பனைக்கு தகுதியற்றதாகி விடுவதால் பெருமளவில் பொருளாதார நட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கறவை மாடுகள் வைத்திருப்போர் சுத்தமான பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து பண்ணைகளில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும்.

பால் கறக்கும் முறைகள்:

முழு விரல்களை உபயோகித்தல்:
இம்முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம்முறையில் காம்பின் எல்லாப் பாகங்களிலும் ஒரே அளவான அழுத்;தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும் எருமைகளிலும் இம்முறையைக் கையாளுவது சிறந்தது.

இரு விரல்களை உபயோகித்தல்:
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்துச் சிறிய அழுத்தம் கொழுத்துக் கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம்முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான இழுத்தம் கிடைக்காது. மேலும்; காம்பின் மேல்பாகம் இதனால் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இம்முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிக்கும் முறைதான் சிறந்தது. எனினும் சிறு காம்புகள் உள்ள மாடுகளில் பாலை கறக்கும் பொழுது இரு விரல்களை உபயோகிக்கும் முறையைக் கடைப்பிடிக்கலாம்.

பால் கறத்தல்:
மாடுகளிலிருந்து பால் கறப்பது ஒரு தனிக்கலையாகும். முதிர்ந்த அனுபவமும், நல்ல திறமையும் பால் கறப்பதற்குத் தேவை. பால் கறக்கும் போது மிகக் கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் மடியிலுள்ள பாலை முழுமையாகப் பெறும்படியும் கறக்க வேண்டும். பால் கறக்கும் போது மாடுகளுக்கு எந்த விதத்திலும் சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரைச்சல், பயமுறுத்துதல், அடித்தல் போன்றவைகளால் பால் சுரக்கும் இயக்கங்கள் தடைபட்டு நின்று விடும். பால கறப்பவர் மாறினாலும் பால் அளவு திடீரென்று குறைந்து விடும். அமைதியான சூழ்நிலையில் பால் சுரக்க ஆரம்பித்தவுடன் எல்லாப் பாலையும் கநற்து விட வேண்டும். இல்லாவிட்டால் பால் மடியிலேயே தங்கி விடும்.

சுத்தமாக பால் கறக்கும் வழிகள்:
பால் கறக்கும் முன் பால்காரர் தன் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேணடும். பசுக்கள் குளிப்பாட்டிச் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறப்பதற்கு முன் மடியை நன்றாகக் கழுவி சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும். மடியைச் சுற்றியுள்ள இடங்களிலும், உள் தொடைகளிலும் உள்ள முடியை கத்தரித்து எடுத்து விட வேண்டும். காம்பிலிருந்து வரும் முதல் பீச்சில் திரி மற்றும் சீழ் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கீழே ஊற்றி விட வேண்டும். கறந்த பாலைச் சுத்தமான துணியால் வடிகட்ட வேண்டும்.

பாலில் சேரும் அசுத்தங்களும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளும்:
கறவை மாடுகளின் மடியிலேயே சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமான மாடுகளில் இவ்வகையான கிருமிகள் எவ்விதக் கெடுதலும் செய்வதில்லை. எனவே பால் கறக்கும் போது முதலில் வரும் பாலை நீக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காம்பிலுள்ள கிருமிகளை ஓரளவு நீக்கி விட முடியும். உரோமம், மண், சாணம், வைக்கோல் போன்றவைகளுடன் சில கிருமிகளும் பாலில் சேரும். எனவே, மாடுகளை நன்கு தேய்த்து அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால் அவைகளை கத்தரித்து நீக்கலாம். பால் கறப்பதற்கு முன் மடி, பக்கத்தொடை ஆகிய பாகங்களைப் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி சுத்தமான உலர்ந்த துணியால் துடைப்பது சரியான முறையாகும். பால் கறக்கும் இடம் நன்கு கழுவி சுத்தமாய் இருக்க வேண்டும். பால் கறப்பதற்கு முன்பே கொட்டகையை கூட்டி நன்கு சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். பால் கறக்கும் பொழுது கொட்டகையை சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் தூசி காற்றில் பறந்து பாலில் அசுத்தம் சேர நேரும்.

குறுகிய வாயுள்ள பால் பாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம் காற்றினால் சேரும் அசுத்தங்களை ஓரளவு குறைக்க முடியும். தொழுவத்தில் ஈக்கள், கொசுக்கள் வராமல் தடுக்க சாணம், சிறுநீர் போன்றவைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி மொத்த கழிவுகளைப் பண்ணைக்குத் தொலைதூரம் சேகரித்து வைக்கலாம். மேலும் பண்ணையை, உடனுக்குடன் கழிவுகளை அப்புறப்படுத்திய பின் கழுவி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

பால் கறப்பவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். ஏனெனில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பால் கறக்கும் பொழுது தும்முவதாலும், பேசுவதாலும், அவர் உடம்பிலுள்ள கிருமிகள் பாலில் சேர வாய்ப்புண்டு. மேலும் பாலில் அசுத்தம் சேராதிருக்க பால் கறப்பவர் கைகளிலுள்ள நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பால் கறப்பதற்கு முன் பால் கறப்பவர் கைகளை நன்கு கழுவி உலர்ந்த துணியால் துடைத்த பின் பால் கறக்க வேண்டும். பால் பாத்திரங்கள் மூலம் தான் அதிகமான அசுத்தங்கள் சேருகின்றன.

எனவே, பாலைக் கறப்பதற்கும், சேகரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படும்; பாத்திரங்கள் மடிப்பு, விளிம்பு, பள்ளங்கள் இல்லாமல் ஒரே சீரான அமைப்புள்ளதாக இருத்தல் வேண்டும். இதனால் சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். பாத்திரங்களைப் பயன்படுத்திய பிறகு முதலில் நீரினால் அல்லது குளிர் காலங்களில் வெதுவெதுப்பான நீரில் பாத்திரங்களை அலசி சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்களைக் கழுவும் பொழுது ஆரம்பத்திலேயே வெந்நீரை உபயோகிக்கக்கூடாது. உபயோகித்தால் பாலில் உள்ள கொழுப்பு, புரதம் பாத்திரத்தில் ஒட்டிக் கொள்வதால், சுத்தம் செய்வது கடினமாகும்.

சலவை சோடாவை தண்ணீரில் நன்கு கரைத்து பால் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின் நீராலோ அல்லது வெந்நீராலோ நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீர் வடிவதற்கு தலை கீழாகப் பாத்திரங்களைக் கவிழ்த்து வைக்க வேண்டும். சூரிய ஒளியில் வைத்து நன்கு உலர்த்திட வேண்டும். பாத்திரத்திலுள்ள ஈரத்தைப் போக்க, துணியைக் கொண்டு துடைப்பது நல்லதல்ல. சோப்பு உபயோகிக்கக்கூடாது. ஏனென்றால் இவை பாலில் ஒவ்வாத வாசனையை ஏற்படுத்தி விடும். பால் கறப்பதற்கும், சேகரிப்பதற்கும் அதற்கெனத் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை உபயோகிப்பது நல்லது.

பாலைப் பாதுகாத்தல்:
பாலைக் கறந்தவுடன் மாட்டுக் கொட்டகையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மாட்டுத் தொழுவத்தில் உள்ள நாற்றம் பாலில் சேர்ந்து விடும். பாலைக் கறந்த உடன் வடிகட்ட வேண்டும். பாலை 5 டிகிரி செல்சியஸ்க்கு குளிப்படுத்தவும். குளிர் சாதனம் இல்லையெனில் குளிர்ந்த நீரில் பாத்திரத்தை வைத்துக் குளிரச் செய்யவும். பாலைக் கறந்த 4 மணி நேரத்திற்குள் விற்பனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்