கறவை மாட்டில் இயந்திரம் மூலம் பால் கறக்கும் முறை

கறவை மாடு வளர்ப்புத் தொழிலானது கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. கறவை மாடுகள் வைத்திருப்போர் மாடுகளைப் பராமரிக்கவும், பால் கறக்கவும் பண்ணை ஆட்களை நம்பியுள்ளனர். ஆனால் தற்போது பண்ணையில் வேலை செய்வதற்கும் பால் கறக்கவும் ஆட்கள் கிடைப்பது குறைந்து வருவதால் மாட்டுப் பண்ணையாளர்கள் கறவை மாடுகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விட்டு வீட்டு உபயோகத்திற்காக ஒன்றிரண்டு மாடுகளை வைத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. சிலர் வேலையாட்கள் பற்றாக்குறையால கறவை மாடுகள் வளர்க்கும் தொழிலையே விட்டுவிடுகின்றனர். பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் கறவை மாட்டுப் பண்ணையில் பால் கறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தவதன் மூலம் குறைந்த வேலையாட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்து கறவை மாட்டுப் பண்ணையை இலாபகரமானதாகவும் வெற்றிகரமாகவும் நடத்த முடியும்.

பால் கறக்கும் இயந்திரம் இயங்கும் முறை

மாட்டின் மடியில் சேர்ந்திருக்கும் பாலை காம்பில் பொருத்தும் குழாய்கள் மூலம் உறிஞ்சுவதால் பால் கறக்கப்படுகிறது. காம்பிற்கு அழுத்த நிலை விட்டு விட்டு கொடுக்கப்படுகிறது. இடையிடையே பால் உறிஞ்சும் செயலும் நடைபெறுகிறது. அழுத்தும் நிலை, உறிஞ்சும் நிலை என்று மாறி மாறி ஏற்படுவதால் பால் கறக்கும் செயலானது இயற்கையில் கன்று பாலைக் குடிப்பது போன்ற உணர்ச்சியைத் தாய்ப்பசுவிற்கு அளிக்கிறது. பால் கறக்கும் இயந்திரம் இரத்தத்தையும் உறிஞ்சி எடுக்கும் என்பது தவறான கருத்தாகும். பால் வரும் குழாய் நிறமின்றி இருப்பதால் பால் வருவதைக் கவனித்து பால் வராத சமயத்தில் இயந்திரத்தை நிறுத்தி விடலாம்.

உபயோகப்படுத்தும் முறை

பால் கறப்பதற்கு முன் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். மடியைக் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கழுவி, பின்பு உலர்ந்த சுத்தமான துணியினால் துடைக்க வேண்டும். பால் கறவை இயந்திரத்தை உபயோகிக்கும் முன் சிறிதளவு பாலை கறுப்புத் துணி கொண்டு மூடிய சிறிய கிண்ணத்தில் கறந்து பார்த்தால் பாலின் தரத்தை நிர்ணயம் செய்யலாம். உறிஞ்சும் குழாயைப் பசுவின் காம்பில் வைத்து கறவை இயந்திரத்தை இயக்க வேண்டும். பால் கறந்த பின் காம்புகளை கிருமிநாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். உறிஞ்சும் குழாய்களைக் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் கறவை இயந்திரத்தில் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் தடுக்கலாம்.

பால் கறக்கும் இயந்திரத்தின் நன்மைகள்

பத்துக் கறவை மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பால் கறவை இயந்திரம் உபயோகிப்பது இலாபகரமாக இருக்கும். ஏனெனில் இக்கறவை இயந்திரம் மூன்று பேர் செய்யக் கூடிய வேலையைச் சுலபமாக செய்து முடித்து விடும். பால் கறக்கும் இயந்திரத்தை முறையாகப் பொருத்தி சரியாக பயன்படுத்தினால் குறைந்த நேரத்தில் சுகாதாரமான முறையில் விரைவாகவும், திறமையாகவும பால் கறக்கலாம். கையால் கறப்பதை விட 50 சதவிகிதம் குறைந்த நேரத்தில் முழுமையாகப் பாலைக் கறந்து விடுவதால் நேர விரயம் குறைக்கப்படுகிறது.

இதனால் கறவை மாடுகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தி குறைந்த பராமரிப்புச் செலவில் அதிக பால் உற்பத்தி செய்ய முடியும். அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கையாள்வது எளிது. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். பால் கறக்கும் இயந்திரத்தில் கறக்கும் போது கன்று ஊட்டுவதைப் போலவே இருப்பதோடு வலியும் ஏற்படுவதில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சீரான முறைப்படி பால் கறப்பதால் கறவை மாடுகளின் மடியில் காயங்களோ மடி நோயோ உண்டாவதில்லை. பால் மடியிலிருந்து பால் பாத்திரம் வரை பாலானது குழாய் மூலம் செல்வதால் பாலுடன் கிருமிகள் சேர்வதற்கு வாய்ப்பில்லை. அதனால் இது சுகாதாரமான முறையாகும். இயந்திரத்தின் மூலம் பாலைக் கறப்பதால் தாய்ப்பசு விரைவில் சினைப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் கன்றைப் பார்க்கும் பொழுது ஏற்படும் அதிகப்படியான தாய்மை உணர்ச்சியின் காரணமாகத் தாயின் உடலில் சுரக்கும் ஒரு சில நிணநீர்கள் இயந்திரக் கறவை முறையில் சுரப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே, சினைப்படும் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறைபாடுகளும் நிவர்த்திக்கும் முறைகளும்

மின்சாரம் தடைப்பட்டால் கறப்பது பாதிக்கப்படும். அப்படி மின்சாரம் தடைப்படும் பொழுது ஒரு சிறிய ஜெனரேட்டர் வைத்துக் கொண்டால் இக்குறையை அகற்ற முடியும். இயந்திரம் பழுதடைந்து விட்டால் பால் கறப்பது பாதிக்கப்படும். அதனால் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான உதிரிப்பாகங்களைக் கைவசம் வைத்துக் கொண்டால் உடனடியாகச் செப்பனிட்டு இயந்திரத்தை இயக்கலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்