பால் பண்ணைத் தொழில் இன்று விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானம் அளிக்கக் கூடிய சிறந்த சுயதொழிலாக அமைந்திருக்கிறது. விவசாயம் பொய்க்கும் காலங்களில் பெரும்பாலான விவசாயக் குடும்பங்களை பொருளாதார ரீதியில் காப்பாற்றுவதில் கறவை மாடுகள் மற்றும் பால்பண்ணைத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கலப்பின மாடுகளைக் கொண்டு பண்ணை அமைக்கும் போது பண்ணையிலுள்ள மாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மாடுகள் எப்போதும் கறவையில் இருக்குமாறு பராமரி;த்தால் தான் பால் பண்ணைத் தொழிலில் அதிக லாபம் அடைய வாய்ப்புண்டு.
தீவனச் செலவினங்களும் மற்ற பராமரிப்புச் செலவுகளும் உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழ்நிலையில் கறவை மாடுகளை வளர்ப்போர் தங்கள் கறவை மாடுகளிலிருந்து வருடம் ஒரு கன்று பெற்றால் மட்டுமே மாட்டுப்பண்ணையை இலாபகரமானதாக வழிநடத்திச் செல்ல முடியும். எனவே வருடம் ஒரு கன்று பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
கன்று ஈன்ற பசுக்கள் பராமரிப்பு:
பசுக்கள் கன்று ஈன்ற பின் 45 நாட்களுக்குள் முதல் சினைத் தருணத்தை வெளிப்படுத்தும். அதன் பின் 21 நாட்களுக்கு ஒரு முறை கறவை மாடுகள் பருவத்திற்கு வரும். மாடுகள் கன்று ஈன்ற பின் 60 முதல் 90 நாட்களுக்குள் கருத்தரிக்கச் செய்ய வேண்டும். பருவத்திற்குரிய அறிகுறிகள் தென்படவில்லையென்றால் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதற்குரிய காரணமறிந்து நிவர்த்திக்கான வழிமுறைகளை உடனே கையாள வேண்டும். கருவூட்டலுக்குப் பின் 3 மாதம் கழித்து கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சினைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சினை மாடுகள் பராமரிப்பு:
பசுக்களின் சினைக்காலம் சுமார் 285 நாட்கள். எருமைகளில் சுமார் 310 நாட்கள். சினைப் பருவத்தில் போதுமான அளவு கலப்புத் தீவனம், பசும்புல், தாது உப்புக் கலவை கொடுக்க வேண்டும. சினைப்பட்ட 7 ஆம் மாதம் முதல் கன்று வளர்ச்சிக்கென நாளொன்றுக்கு 2 கிலோ கலப்புத் தீவனம் கொடுக்கப்பட வேண்டும். சினைப்பட்ட 7 ஆம் மாதம் முதல் பால் சுரப்பதையும் படிப்படியாக் குறைத்து மடியை கடைசி 2 மாதம் சுத்தமாக வற்றச் செய்ய வேண்டும்.
கன்று ஈனுவதற்கு 3 நாட்கள் முன்னும், பின்னும் கலப்புத் தீவனத்தைக் குறைத்து மலம் கட்டாதவாறு இளகிய தீவனமாகக் கொடுக்க வேண்டும. கன்று ஈன்ற 6-8 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி தானாக வெளியில் விழுந்த விடும். கன்று ஈனுதல், நஞ்சுக்கொடி தள்ளுதல் போன்றவற்றில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
கன்று ஈன்ற மாடுகளில் நஞ்சுக் கொடியானது கன்று ஈன்ற 6 முதல் 8 மணி நேரத்திற்குள் விழவில்லையெனில் மருத்துவரின் உதவியை நாட வேண்டும. அவ்வாறு இல்லாமல் அனுபவமற்ற ஆட்களின் உதவியை நாடுவதன் மூலம் மாடுகளின் கருப்பையில் புண்கள் ஏற்பட்டு சீழ் வைப்பதுடன் அடுத்தாற்போல் கருப்பிடிக்கும் தன்மையும் குறைந்து இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட கால அளவும் அதிகமாகும்.
கன்று பராமரிப்பு:
பிறப்பு உடல் எடை பசுங்கன்றில் சுமார் 20 கிலோவும், எருமைக்கன்றில் சுமார் 22 கிலோவும் இருக்க வேண்டும். பிறந்த கன்றின் தொப்புள் கொடியை சுமார் 2 மதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினால் இறுக்கட்டி அதன் கீழ் 1 செ.மீ விட்டு சுத்தமான கத்தரி கொண்டு கத்தரித்து விட வேண்டும். கத்தரித்த இடத்தில் டிங்சர் அயோடின் மருந்தை நன்கு தடவ வேண்டும. கன்று பிறந்த 1 மணி நேரத்திற்குள் சீம்பால் அளிக்க வேண்டும.
10 ஆம் நாள் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். பின்பு முதல் 6 மாதம் வரை மாதம் ஒரு முறையும், 6 மாத வயதிற்கு மேல் ஒவ்வொரு 3 மாதத்திற்கொரு முறையும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முதல் 3 வாரம் கன்றின் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு அளவு பால் கொடுக்க வேண்டும். பின்பு படிப்படியாக பசுந்தீவனமும், 3 வது மாத வயதிலிருந்து கலப்புத் தீவனமும் அளிக்கலாம்.
பருவத்திற்கு வருதலும் கருவூட்டலும்:
பொதுவாக கலப்பினக் கிடேரிகள் 15 முதல் 18 மாத வயதில் பருவத்திற்கு வந்து விடும். நாட்டு இனங்கள் 24 மாத அளவில் பருவத்திற்கு வருகின்றன. பருவத்திற்கு வரும் கிடேரியின் எடை சுமார் 150 கிலோ இருக்க வேண்டும். மாடுகள் சராசரியாக 21 நாட்களுக்கொரு முறை பருவத்திற்கு வரும். சினைப்பருவ காலமானது 24 மணி நேரம் வரை மட்டுமே காணப்படும். சினைப்பருவத்திற்கு வந்த மாடுகள் அமைதியின்றிக் காணப்படும். அடிக்கடி சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும்.
ஆரம்ப நிலையில் பசுவானது மற்ற பசுக்கள் மீது தாவும். பிறகு மற்ற பசுக்கள மற்றும்; காளைகளை தன் மீது தாவ அனுமதிக்கும். அடிக்கடி நீண்ட உறுமல் ஒலி எழுப்பும். பெண் உறுப்பின் வெளிப்புறம் சிவந்தும், வீக்கமாகவும், ஈரப்பசையுடனும் காணப்படும். கண்ணாடிப் போன்ற தெளிவான திரவம் பெண் உறுப்பில் இருந்து வெளிப்படும். தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்து காணப்படும். பாலின் அளவு குறைந்து காணப்படும். வாலைத் தூக்;கியவாறு நிற்கும். காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தோன்றினால் அன்று மாலையிலும், மாலையில் சினைப்பருவ அறிகுறிகள் தோன்றினால் மறுநாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.
அதாவது சினைப்பருவ அறிகுறிக்ள தோன்றி 8 முதல் 12 மணி நேரத்திற்குள் செயற்கை முறை கருவூட்டல் செய்வதன் மூலம் பசுக்களில் சினைப்பிடிக்கும் தன்மையானது அதிகரிக்கின்றது. ஏனெனில் அப்போது தான் பெண் முட்டையும், ஆண் உயிரணுவும் கருவுறுதல் நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் சென்றடைந்து கருவுறுதல் வெற்றிகரமாக நடைபெறும். கனறு ஈன்ற பிறகு பசுக்கள் வெளிப்படுத்தும் முதல் சினைப் பருவத்திலோ அல்லது இரண்டாவது சினைப்பருவத்தில் செயற்கை முறை கருவூட்டல் செய்ய வேண்டும. பொதுவாக பசுவானது கன்று ஈன்ற 60 முதல் 90 நாட்களுக்குள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்போது தவறாமல் பசுக்களை சினைக்கு சேர்க்க வேண்டும்.
பொதுவாகவே கால்நடை வளர்ப்போரிடம் தவறான ஒரு கருத்து நிலவி வருகின்றது. அது என்னவெனில் பசுக்களை கன்று ஈன்ற சில மாதங்களிலேயே சினைக்கு சேர்ததால் பாலின் அளவு குறைந்து விடும் என நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்தாகும். மேற்கூறியவாறு கன்று ஈன்ற 60 முதல் 90 நாட்களுக்கு சினைக்கு சேர்க்கவில்லை எனில் மாடுகளில் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி அதிகமாகும்.
இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற தீவனச் செலவுகளும், பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகின்றன. எனவே இவற்றை தவிர்க்க பசுக்களைக் குறித்த நேரதில் சினைக்கு சேர்க்க வேண்டும். நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட பண்ணைகளில் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளியானது 12 மாதத்திற்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
பசுக்களை கண்ணாடி போன்ற நிறமற்ற வழவழப்பான திரவ ஒழுக்கு பெண் உறுப்பில் இருந்து வெளிப்பட்டால் மட்டுமே பசுக்களை சினைக்கு சேர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சளி அல்லது தயிர் போன்ற திரவ வெளிப்பாடு இருந்தால் பசுக்களை சினைக்கு சேர்க்காமல் இருப்பதுடன் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சைப் பெற்ற பின் பசுக்கள் வெளிப்படுத்தும் முதல் சினைப்பருவத்தில் பசுக்களை சினைக்கு சேர்க்காமல் ஒரு சினைப்பருவச் சுழற்சிக்கு ஓய்வு கொடுத்து விட்டு அதற்கு அடுத்து வரும் சினைப் பருவத்தில் சினைக்கு சேர்க்க வேண்டும்.
பசுக்களை பொலிகாளைகளுக்குச் சேர்ப்பதை விட செய்ற்கை முறைச் கருவூட்டல் செய்வதே சிறந்த முறையாகும். ஏனெனில் தரமற்ற, நோய் வாய்ப்பட்ட காளையாக இருப்பின் அவற்றில் இருந்து பசுக்களுக்கு நோய் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் செயற்கை முறை கவூட்டலில் இந்த நோய் பரவுதல் தடுக்கப்படுவதுடன் கருவுறுதலின் திறனும் அதிகரிக்கப்படுகின்றது.
கருவூட்டல் செய்த பின்பு சினைத் தருண அறிகுறிகள் மறுபடியும் தோன்றுகிறதா, என்பதை கவனமாக கண்காணித்து வர வேண்டும். அடுத்த 21 நாட்களில் பருவ அறிகுறிகள் தோன்றினால் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து மீண்டும் கருவூட்டல் செய்து கொள்ள வேண்டும். பருவத்திற்கான அறிகுறிகள் தோன்றவில்லையெனில் சுமார் 3 மாதம் கழித்து கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சினைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாடுகளுக்கு தீவனப்பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அதிக அளவு பசுந்தீவனங்களைச் சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் பசுக்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். தாது உப்புக்கலவையை ஒரு நாளுக்கு 30 கிராம் என்ற அளவில் தீவனத்தில் கலந்து அளிப்பதன் மூலம் பசுக்களுக்கு தேவையான தாது உப்புகள் கிடைத்து விடுவதால் தாது உப்புப் பற்றாக்குறையால் சினைப்பிடிப்பதில் ஏற்படும் பிரச்சனையை தவிர்த்து விடலாம்.
பசுக்களில் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது 3 சினை ஊசிக்கு மேல் போட்டும் சினைத் தங்கவில்லையென்றாலோ உடனே கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சையை பசுக்களுக்கு கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி 6 மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் கறவை மாடுகளுக்கும் தொற்று நோய்களுக்கெதிரான தடுப்புபூசிகளை உரிய நேரத்தில் போட வேண்டும்.
பதிவேடுகள் பராமரிப்பு:
கறவை மாட்டுப் பண்ணையில் பதிவேடுகள் பராமரிப்பு மிகவும் இன்றியமையாதது. மாடு கன்று ஈன்ற நாள், எத்தனாவது ஈற்று, கன்று ஈனும் போது ஏற்பட்ட சிரமங்கள், பால் அளவு, மீண்டும் சினைத் தருண அறிகுறிகள் தோன்றிய நாள், போன்ற அனைத்து விவரங்களையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது மாடுகள் சரியான நேரத்தில் சினைக்கு வருகிறதா? என்பதைக் கண்காணிக்க உதவும்.
மாடுகள் வருடம் ஒரு கன்று ஈனும் போது அதன் ஆயுட்கால்த்தில் 3 முதல் 4 கன்றுகள் அதிகமாக ஈன்று அதிக அளவு பாலும் கொடுக்கிறது. இதன் மூலம் பால் பண்ணையின் நிகர இலாபத்தை கணிசமாக அதிகரிக்கலாம். எனவே கால்நடை வளர்ப்போர் சிறந்த பராமரிப்பு முறைகளை கடைப்பிடித்தால் வருடம் ஒரு கன்று பெற்று பசுக்கள் வளர்ப்பின் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.