தமிழகத்தில் அதிக பால் தரும் ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் பிரிசியன் கலப்பினப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இத்தகைய அதிக பால் கொடுக்கும் கலப்பினப் பசுக்களில் நாட்டினப் பசுக்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால் தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டு கறவை மாடுகள் வளர்ப்போருக்குப் பெருத்த பொருட் சேதம் ஏற்படுகிறது. கறவை மாடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தக்கூடிய மிக மிக்கியமான ஒரு தொற்று நோய் மடி நோயாகும். எனவே மடி நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் நோய் வராமல் தடுக்கும் முறைகளை ஒவ்வொரு பண்ணையாளரும் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மடி நோய்க்கான காரணங்கள்
மடி நோய் ஏற்பட நிறைய காரணங்கள் இருப்பினும் வெவ்வேறு வகையான நுண்ணுயிர்க் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நோய்க்கிருமிகள் மாட்டின் மடியிலுள்ள பால் சுரப்பினைத் தாக்கி பெருத்த பொருட் சேதத்தை ஏற்படுத்துகின்றன. தரையின் சுத்தம், மடியின் சுத்தம், பால் கறப்பவரின் கையின் சுத்தம், பால் கறக்கும் இயந்திரத்தின் சுத்தம் போன்றவைகளைப் பொறுத்து இந்நோய் வருகிறது. இரத்தம் மூலமாகவோ அல்லது காம்பின் துவாரம் மூலமாகவோ இந்நோய் மடியை அடைந்து மடி நோயை ஏற்படுத்துகிறது. மேலும் மடியில் ஏற்படும் காயம், புண் போன்றவைகள் இந்நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன.
நோயின் அறிகுறிகள்
நோய் பாதிக்கப்பட்ட மடியின் பாகம் பெரிதாக வீங்கி சிவந்து காணப்படும். பொதுவாக ஒன்று அல்லது இரண்டு காம்புப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வீக்கமுற்ற மடி சூடாகவும், தொட்டால் மாட்டிற்கு மிகவும் வலியுடன் இருக்கும். மாடு மடியைத் தொட விடாது உதைக்கும். பாதிக்கப்பட்ட காம்பில் மற்ற காம்புகளை விட பாலின் அளவு குறைந்து காணப்படும்.
பால் திரிதிரியாகவும், மஞ்சள் நிறமாகவும், இரத்தம் கலந்தும், சீழ் கலந்தும் வரும். நோயின் தன்மை அதிகமாகி விட்ட நிலையில் மடியின் பாதிக்கப்பட்ட பாகம் கெட்டியாக மாறி பால் சுரக்கும் தன்மையை முழுதுமாக இழந்து விடும்.
சிசிச்சை முறைகள்
மடி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவம் செய்யாவிட்டால் மடியின் பால் சுரப்பி நிரந்தரமாகக் கெட்டு பால் சுரக்கும் தன்மையை இழந்து விடுவதால் பாதிக்கப்பட்ட மடியை குணப்படுத்துவது இயலாத காரியமாகி விடும். எனவே நோய் அறிகுறிகள் தென்பட்டதும்; உடனே பாதிக்கப்பட்ட மாட்டை பிரித்து கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்தினை பயன்படுத்தி நோயை விரைவில் குணப்படுத்தலாம்.
தடுப்பு முறைகள்
தொழுவத்தை சாணம், சிறுநீர் தேக்கம் இல்லாதவாறு எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தொழுவத்தின் தரையை கிருமி நாசினி மருந்து கொண்டு நன்கு கழுவ வேண்டும். அயொடொபார், சொடியம் ஹைப்போ குளோரைட், குளொர்ஹெக்சிடின், போன்ற மருந்துகளை கிருமி நாசினி மருந்துகளாக பயன் படுத்தலாம்.
பால் கறப்பவர்கள் பால் கறப்பதற்கு முன் தங்களது கைகளை சோப்பு போட்டு நன்கு சுத்தம் செய்து விட்டு கிருமி நாசினி மருந்தில் கையை கழுவிய பிறகே பால் கறக்க வேண்டும். பால் கறப்பதறகு முன்பும், பால் கறந்த பிறகும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் இடப்பட்ட தண்ணீரில் மடியைக் கழுவ வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் இட வேண்டும்.
பால் கறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தும் பொழுது, பால் கறந்தவுடன் குளிர் நீரில் நன்கு கழுவிய பிறகு கிருமி நாசினி மருந்து கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். காம்பு, மடிப் பகுதியில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காயம் ஏற்பட்டால் சிறிய காயமாக இருக்கும் பொழுதே மருந்து போட்டு குணப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் காயங்களின் வழியாக கிருமிகள் உட்சென்று மடி நோயை ஏற்படுத்தி விடும்.
கறவை நேரத்தை ஒழுங்காகக் கடைப் பிடிக்க வேண்டும். மடியில் பால் தேங்கக் கூடாது. பாலை முற்றுலும் கறந்து விட வேண்டும். சினை மாட்டின் மடியை தினமும் கண்காணிக்க வேண்டும். கறவைக் காலம் முடிந்தவுடன் காம்பிற்குள் கால்நடை மருத்துவர் உதவியுடன் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தினை செலுத்த வேண்டும். நோயுற்ற பசுவை இறுதியில் கறக்க வேண்டும். மேலும் நோயுற்ற காம்பை இறுதியில் கறக்க வேண்டும். கறந்;த பாலை கிருமி நாசினி மருந்துடன் கலந்து அப்புறப் படுத்த வேண்டும். அடிக்கடி மடி நோய் வரும் மாடுகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
கறவை மாடுகளில் மடியில்லையேல் வருமானம் இல்லை. எனவே கறவை மாடு வளர்ப்பின் மூலம் அதிக இலாபம் பெற மடி நோயை வராமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். நோய் வந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்றுவதைக் காட்டிலும் மடி நோய் வராமல் இருக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மாடுகளைப் பராமரித்து வருவது சாலச் சிறந்ததாகும்.