நமது வேளாண் பெருமக்கள் கறவை மாடுகளைப் பெரும்பாலும் பால் உற்பத்திக்காகவே வளர்க்கின்றனர். கறவை மாடு வளர்ப்புத் தொழிலானது இலாபகரமானதாக இருக்க வேண்டுமெனில் வருடம் ஒரு கன்று பெறவேண்டும். இவ்வாறு வருடம் ஒரு கன்று பெற வேண்டுமெனில் மாடுகள் கறவையிலிருக்கும் பொழுதே சினையாகவும் இருக்க வேண்டும். பால் மூலம் அதிகம் வருமானம் ஈட்டும் நோக்குடன் மாடுகள் வளர்க்கும் சிலர் கன்று ஈனுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை பால் கறந்து கொண்டே இருப்பர். இது தவறான முறையாகும்.
ஏனெனில் கன்று ஈனுவதற்கு சில நாட்கள் முன்பு வரை பால் கறந்து கொண்டிருந்தால் கருப்பையில் வளர்ந்து கொண்டிருக்கும் கன்றிற்கு சத்துப்பற்றுக்குறை ஏற்படுவதால் ஆரோக்கியமான கன்றினை பெறுவதற்கு முடியாமல் போய் விடும். மேலும் கறவை மாடுகளின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால் உடல் மெலிந்து ஆரோக்கியமில்லாமல் இருப்பதால் கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கன்று ஈன்றவுடன் கறக்கும் பாலின் அளவும் குறைந்து காணப்படும்.
அறுபது நாட்கள் பால் வற்றச் செய்வதற்கான நோக்கம் என்னவெனில் சினைக்காலம் முடிந்து அடுத்த கறவை சமயத்தில் மாடுகள் அதிக பாலை நீண்ட நாட்களுக்குக் கொடுத்து வற்றுக் காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை சமன் செய்து இலாபம் ஈட்டுவதேயாகும். பொதுவாக 45 நாட்களுக்கு குறைவாக பால் வற்றுக் காலம் உள்ள பசுக்களின் மடி சரியான அளவு சுருங்கி மீண்டும் வளர்;ச்சி பெறாததால் அடுத்த ஈற்றில் குறைவான அளவே பால் கிடைக்கும். அதனால் கறவை மாடுகள் சினையான பிறகு சினைக்காலம் ஏழாவது மாதம் முடிந்தவுடன் கறவை மாடுகளில் பால் வற்றச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பால் வற்றச் செய்வதன் பயன்கள்
வளரும் கருவிற்கு தகுந்த ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும். கருப்பையில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்க வேண்டியுள்ளதாலும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துக்களைத் தன்னுடைய உடம்பில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதாலும் ஏழாவது மாத சினைக்காலம் முடிந்த உடனே பால் வற்றச் செய்ய வேண்டும்.
கறவை மாடுகள் நல்ல உடல் நிலையை அடையும். மடி சரியான விகிதத்தில் சுருங்கி அடுத்த கறவையில் நல்ல செயல் திறன் பெறும். தொற்று நோய்கள், வளர் சிதை மாற்ற நோய்கள் மற்றும் உணவு மண்டல நோய்கள் ஏற்படாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பால் வற்றச் செய்யும் முறைகள்
1.தீவனத்தைக் குறைத்தல் மூலம் பால் வற்றச் செய்தல்
பொதுவாக கறவை மாடுகளுக்கு பால் கறக்கும் அளவிற்கு தகுந்தவாறு கலப்புத்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் கொடுக்கப்படும். பால் வற்றச் செய்வதற்கு ஏழாவது மாதம் சினைக்கால முடிவில் கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தை முதல் வாரத்தில் பாதியாக குறைக்க வேண்டும். இதனால் பால் சுரக்கும் அளவு விரைவில் குறைய ஆரம்பிக்கும். பிறகு அடுத்த வாரத்தில் இன்னும் கொஞ்சம் தீவனத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு தீவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதன் மூலம் பால் சுரப்பு குறைந்து கொண்டே வரும்.
பிறகு மூன்றாவது வாரத்திலிருந்து தீவனத்தைக் குறைப்பதுடன் காலை மாலை என இரண்டு முறை கறக்காமல் ஒரு நேரக் கறவையாகக் குறைத்து விட வேண்டும். பிறகு பால் கறவையின் அளவை குறைத்துக் கொண்டே சென்று பிறகு முற்றிலுமாக பால் கறவையை நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு தீவனக் குறைப்பை செய்வதன் மூலம் எட்டு மாத சினைக்காலத்தில் மாடுகளின் உடல் நிலை பராமரிப்பிற்கு மற்றும் கர்ப்பப்பையில் வளர்ந்து கொண்டிருக்கும் கன்றுக்கென மொத்தம் 2 கிலோ கலப்புத் தீவனம் கொடுப்பதுடன் தீவனக் குறைப்பை நிறுத்தி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் எட்டாவது மாத சினை காலத்தில் பால் சுரப்பு வற்றுவதுடன் சினை மாடு மற்றும் கன்றுகுட்டியின் ஆரோக்கியத்திற்கான போதுமான அளவு தீவனம் கிடைக்கப் பெறும். தீவனத்தைக் குறைப்பதன் மூலம் பால் கறவையை வற்றச் செய்தல் முறை தான் சிறந்த முறையாகும். இம் முறை மூலம் பால் கறவையை வற்றச் செய்வதால் மடி நோய் வருவது பெரும்பான்மையாக தடுக்கப்படும்.
2. பால் கறவையைக் குறைத்தல்
இம் முறையில் பாலை மடியிலிருந்து முழுதும் கறக்காமல் குறைந்த அளவே மடியிலிருந்து கறத்தல் மூலம் பால் கறவையை வற்றச் செய்தலாகும். முதல் வாரத்தில் பால் கறவையை முழுமையாகக் கறக்காமல் பாலை மடியிலேயே விட்டு விடுவர். பிறகு இரண்டாவது வாரத்தில் காலை மாலை என இரண்டு முறை கறக்காமல் ஒரு நேரக் கறவையாகக் குறைத்து விடுவர். பிறகு மூன்றாவது வாரத்திலிருந்து பால் கறவையின் அளவை குறைத்துக் கொண்டே சென்று பிறகு முற்றிலுமாக பால் கறவையை நிறுத்திவிடுவர். பால் வற்றியவுடன் மாட்டிற்கு அளிக்கும் தீவனத்தின் அளவை விவசாயிகள் குறைத்து விடுவர்.
இம்முறையில் மடியில் சுரந்த பாலை முழுமையாகக் கறக்காமல் விடுவதும், பாதியளவு பாலை கறப்பதும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் கறப்பதும், பால் வற்ற விடுதல் நாட்கள் எடுத்துக் கொள்வதோடு மடி நோய் ஏற்பட மிகுந்த வாய்ப்புள்ளது.
பால் வற்றிய சினை மாடுகளுக்கான பராமரிப்பு
பசுக்கள் கறவையிலிருந்து பால் வற்றும் நிலைக்கு செல்வதால், பசுக்களின் உடல் ஆரோக்கியத்தை இத்தருணத்தில் நிலை நிறுத்துவது அவசியம். அதனால் பால் வற்றச் செய்த சினை மாடு ஒன்றிற்கு தினமும் 2 கிலோ கலப்புத் தீவனம், 10 முதல் 15 கிலோ பசுந்தீவனம் மற்றம் 4 முதல் 5 கிலோ உலர்தீவனமும் கொடுக்க வேண்டும். இத்துடன் 30 கிராம் முதல் 50 கிராம் வரை தாது உப்புக் கலவை தினமும் கொடுப்பதன் மூலம் மாடு மற்றும் கன்றின் ஆரோக்கியம் பேணப்படும்.
பால் வற்றிய காலத்தில் மடி நோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் பால் முழுவதும் வற்றிய பின்பு மடி முழுவதும் சுருங்கும் வரை மடியில் ஏதேனும் மாற்றங்கள்; தெரிகிறதா என்று கவனித்து தேவைப்பட்டால் கால்நடை மருத்துவர் கொண்டு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.