கறவை மாடுகளில் சர்க்கரைச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் கீட்டோசிஸ் நோய்

தற்பொழுது நவீன இனப்பெருக்க முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் மூலமாகக் கறவை மாடுகளின் உற்பத்தித் திறன் பெருமளவு உயர்ந்திருக்கிறது. தரமான கறவை மாடுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் மாடுகளின் அதிகமான பால் உற்பத்திக்குக் காரணமாகும். அதிக பால் உற்பத்தித்திறன் கொண்ட கறவை மாடுகள் பலவகையான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்நோய்கள் கன்று ஈன்ற, தரம் வாய்ந்த அதிக பால் கறக்கும் மாடுகளையே அதிக அளவில் பாதிப்பதால் இவை உற்பத்தித் திறன் சார்ந்த நோய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது மாடுகளின் இரத்தத்தில் சர்க்கரைச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் கீட்டோசிஸ் எனப்படும் நோயாகும். மாடுகள் வைத்திருப்போர்; இந்த நோயைப் பற்றி தெரிந்து கொண்டு தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதன்; மூலம் இந்த நோயின் பாதிப்பிலிருந்து தமது மாடுகளைக் காப்பாற்றவும் நோய் வராமல் தடுக்கவும் முடியும்.

கீட்டோசிஸ் நோய் உண்டாகக் காரணங்கள்:
கன்று ஈன்ற மாடுகளுக்கு பால் கறவைக்கு ஏற்ற போதுமான கலப்புத் தீவனம் கொடுக்காமல் இருப்பது தான் கீட்டோசிஸ் நோய் உண்டாக முக்கியக் காரணமாகும். இந்த நோயானது பெரும்பாலும் அதிக அளவு பால் கறக்கும் மாடுகளில் கன்று ஈன்ற இரணடாம் மாதத்தில்; ஏற்படுகிறது. கலப்பின பசுக்களில் கன்று ஈன்ற முதல் இரண்டு மாதங்களில் பால் உற்பத்தி வேகமாக அதிகரிக்கிறது. பாலில் காணப்படும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரைச் சத்து மாடுகளின் உடம்பில் உள்ள குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைச் சத்திலிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது இரத்தத்திலிருந்து அதிக அளவு சர்க்கரைச் சத்து உறிஞ்சப்படுகிறது. பால் கறவை அதிகரிக்கும் சமயங்களில் போதிய அளவு கலப்புத் தீவனம் கிடைக்காத மாடுகளில் இரத்தத்தில் சர்க்கரைச் சத்தின் அளவு குறைகிறது.

எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடலில் உள்ள கொழுப்பானது வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரைச்சத்துக்குப் பதிலாக கொழுப்புச் சத்து எரிசக்திக்காக பயன்படுத்தப்படும் பொழுது உடலில் கீட்டோன் பொருட்கள் உற்பத்தியாகும். இவை சிறுநீர், பால் மற்றும் மூச்சுக்காற்றில வெளிப்படுகிறது. இந்நிலையே கீட்டோசிஸ் எனப்படுகிறது. செரிமானக் கோளாறுகள், உடற்பயிற்சிக் குறைவு, கல்லீரல் குறைபாடுகள், தைராய்ட் சுரப்புக் குறைவு போன்றவையும் இந்நோய்க்கான காரணங்களாகும்.

அறிகுறிகள் :
இந்நோய் பொதுவாக 1 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். கறவை மாடுகளில் நாளுக்கு நாள் பசி குறைதல், திடீரெனப் பால் உற்பத்தி குறைவு ஆகியவை காணப்படும். சில மாடுகள் வைக்கோல் மட்டும் உண்ணும். பாதிக்கப் பட்ட மாடுகள் உடல் மெலிந்து காணப்படும். உடம்பின் கொழுப்பு தேக்கம் கரைந்து விடுவதால் தோல், இழுவைத் தன்மை குன்றி கடினமாகி விடும். சிறுநீர் அடிக்கடி வெளியேறும். சாணம் உலர்ந்தும், கடினமாகவும் காணப்படும். மாடுகள் நடப்பதற்கு அவதிப்படும். உடல் வெப்பநிலை, இரத்த ஓட்டம் மற்றும் மூச்சுவிடுதல் ஆகியவை எப்போதும் போல் இருக்கும். இந்நோய் முற்றிய நிலையில் உள்ள மாடுகளின் சுவாசத்தில் பழவாடை வீசும். பாதிக்கப்பட்ட மாடுகளின் மார்புகூட்டுப் பகுதியைத்; தொட்டால் வலி காரணமாக குறுகி நிற்கும். மாடுகள் நடந்து செல்லும் பொழுது உடம்பை குறுக்கிக் கொண்டு நடக்கும். வலது அலலது இடது பின்னங்கால், முன்னங்கால்களுக்கு முன்பாக சென்று விடும். பாதிக்கப்பட்ட மாடுகள் நிற்கும் பொழுதும் உடம்பை வளைத்துக் கொண்டு குறுகி நிற்கும்.

சில மாடுகளில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் காணப்படும். மாடுகள் நடந்து வட்டமடித்துக் கொண்டேயிருக்கும். கண் பார்வை மங்கி விடும். குறிக்கோளின்றி அலைந்து கொண்டிருக்கும். தீவிரமாகத் தோலினை நாக்கால் தொடர்ந்து நக்கிக் கொண்டிருக்கும் அல்லது தொடர்ந்து வாலை சுவைத்துக் கொண்டு எச்சில் வடிதலுடன் காணப்படும். தொடு உணர்ச்சி அதிகரிப்பதால் மெதுவாகத் தொட்டாலோ அல்லது கிள்ளினாலோ சத்தம் போட்டுக் கத்தும். இந்த நரம்பு மண்டலப் பாதிப்பு 1 அல்லது 2 மணி நேரம் தொடர்ந்து காணப்படும். பிறகு 8-12 மணி நேர இடைவேளைக்குப் பின் இந்த நோய்க் குறிகள் மீண்டும் காணப்படும்.

கீட்டோசிஸ் நோயைக் கண்டறிதல்:
நோய் அறிகுறிகளின் மூலமும், மூச்சுக் காற்றில் காணப்படும் பழ வாசனை மூலம் இந்த நோய்ப் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும். மேலும் பாதிக்கப்பட்ட மாட்டின் சிறுநீரை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்தால் இந்த நோயை உறுதி செய்து கொள்ளலாம்.

சிகிச்சை முறை:
பாதிக்கப்படட கறவை மாடுகளை ஒரே இடத்தில் கட்டி வைக்காமல் உலவ விட வேண்டும். கால்நடை மருத்துவர் உதவியுடன் 50 சதவிகித குளுக்கோஸ் கரைசலை 2 முதல் 5 நாட்களுக்குத் தேவைக்கேற்ப இரத்தத்தில் செலுத்த வேண்டும். கிளிசரால் என்ற மருந்தை காலை 250 கிராம் மாலை 250 கிராம் என்ற அளவில் 2 நாட்களுக்கு தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். மேலும் கால்நடை மருத்துவர் உதவியுடன் மாவுச்சத்து வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் மருந்தான தைராக்சின் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்துவது சிறந்தது. குடி தண்ணீரில் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

தடுக்கும் முறைகள்:
கறவை மாடுகளுக்கு பால் கறவைக்குத் தக்கபடி போதிய அளவு கலப்புத் தீவனத்தைக்; கொடுக்க வெண்டும். அதாவது கறக்கும் ஒவ்வொரு 3 லிட்டர் பாலுக்கு 1 கிலோ கலப்புத் தீவனம் என்ற அளவில் கொடுக்க வேண்டும். அரைக்கப்பட்ட மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகளைப் போதிய அளவு கொடுப்பதன் மூலம் கீட்டோசிஸ் நோய் வருவதைத் தடுக்கலாம். கொட்டகையில் அடைக்கப்பட்ட மாடுகளை அவ்வப்பொழுது வெளியில் அனுப்பி காலார நடக்க வைக்க வேண்டும். தீவனததில் தாது உப்புக் கலவையை ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 30 கிராம் என்ற அளவில் தினமும் கொடுக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்