ஒரு நல்ல கால்நடைப் பண்ணையின் உற்பத்தியும் சுகாதாரமும் அக்கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தது. இந்தியாவில் விவசாயம் பருவமழையை சார்ந்து இருப்பதால் பருவமழைக்காலங்களில் அதிக அளவு பசுந்தீவனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அப்பொழுது பசுந்தீவனத்தை அதன் ஈரப்பதமும் பசுந்தன்மையும் மாறாமல் காற்று இல்லாத சூழலில் பதப்படுத்தி பற்றாக்குறை காலங்களில் பசுந்தீவனமாக கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி குறையாமல் பராமரிக்க முடியும்.
கரும்பு வெட்டும் பொழுது ஏராளமாகக் கிடைக்கும் கரும்புத் தோகையையும் பதப்படுத்திய பசுந்தீவனமாக மாற்றுவதற்கு பயன்படுத்தலாம். கரும்பு ஒரு பருவப் பயிராகும். சுமார் 15 சென்ட் நிலத்திலிருந்து 1000 கிலோ கரும்புத்தோகை கிடைக்கும்.
இத் தோகையை பதப்படுத்திய தீவனமாக மாற்றுவதன் மூலம் வருடம் முழுவதும் மாடுகளுக்;கு சிறந்த தீவனமாக பயன்படுத்த முடியும். பதப்படுத்தும் போது கரும்புத் தோகையின் ஊட்டச்சத்தினை மேலும் அதிகரிக்க இயலும்.
செய்முறை
கரும்புத்தோகை 1000 கிலோ, கரும்புக்கழிவுப்பாகு அல்லது வெல்லம் 20 கிலோ, சமையல் உப்பு 10 கிலோ, யூரியா 10 கிலோ ஆகியவை கரும்புத்தோகையை ஊட்டமேற்றி பதப்படுத்திய தீவனமாகத் தயாரிக்கத் தேவையான பொருட்களாகும்.
கரும்புத் தோகையை அரிவாள் அலலது புல்வெட்டும் கருவியைக் கொண்டு 1-2 அங்குலம் அளவுள்ள சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். 1000 கிலோ கரும்புத்தோகைகை;கு 7 X 7 X 4 அடி அளவுள்ள குழியை வெட்ட வேண்டும். இக்குழியை நீர்தேங்காத மேட்டுப்பாங்கான இடத்தில் அமைத்திடல் வேண்டும். குழியின் உட்பகுதியை சாணம் அல்லது களிமண் கொண்டு மெழுகி சீர்செய்ய வேண்டும்.
யூரியா மற்றும் உப்பை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து கரும்பு கழிவுப்பாகுடன் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கரும்புத் தோகையை அரை அடி அளவு அடுக்கிய பிறகு தீவனத்தை நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெறியேற்றி விட வேண்டும். அதன் மீது உப்பு, யூரியா, வெல்லம் அல்லது கரும்புக் கழிவுப்பாகு கரைசலை தெளிக்க வேண்டும். பிறகு மீண்டும் வெட்டிய கரும்புத்தோகைய அடுக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து அடுக்கி ஒவ்வொரு அரை அடிக்கும் இக்கரைசலை தெளிக்க வேண்டும். குழியை நிரப்பிக் கொண்டு வரும்போழுது நன்றாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இறுதியாக குழியின் விளிம்புவரை நிரப்பிய பின் கூம்பு வடிவமாக அமைத்து நன்றாக அழுத்தி பாலித்தீன் விரிப்புக் கொண்டு காற்று மற்றும் மழைநீர் புகாமல் மூடிவிட வேண்டும். பாலித்தீன் விரிப்பு மீது தேவையான அளவு மண் கொட்டி நன்றாக பூசி விட வேண்டும்.
தீவனம் நிரப்பி மூடப்பட்ட குழியை குறைந்தது ஒரு மாத காலத்திற்கு மூடிய நிலையிலேயே விட்டு விட வேண்டும். இந்த காலத்தில் தீவனம் பதப்படுத்திய தீவனமாக மாற்றப்படுகிறது. காற்றும் மழை நீரும் புகாமல் பாதுகாக்கப்படும் நிலையில் இத்தீவனம் பல வருடங்களுக்கும் கெடாமல் அப்படியே இருக்கும்.
பதனக்குழியைத் திறக்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை
முதலில் மேல் பகுதியில் உள்ள மண்ணை நீக்க வேண்டும். பின்பு பாலித்தீன் உறையை சிறிதே அகற்றி தேவையான தீவனத்தை எடுத்த பிறகு மீண்டும் நன்கு மூடி விட வேண்டும். குழியைத் திறக்க ஆரம்பித்து விட்டால் தொடர்ச்சியாக எடுத்து முடித்து விடுவது நல்லது. நாளொன்றுக்கு ஒரு கறவை மாட்டிற்கு 15 கிலோ, ஒரு கிடாவிற்கு 8 கிலோ, வளர்ந்த கன்றுக்கு 5 கிலோ என்ற அளவில் கொடுக்கலாம்.
ஊட்டமேற்றி பதப்படுத்திய கரும்புத் தோகையின் நன்மைகள்
வறட்சி காலங்களில் தீவனமாக பயன்படுத்தலாம் என்பதால் வறட்சிக் காலங்களில் தீவனப்பற்றாக்குறைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து வறட்சிக் காலங்களிலும் கால்நடைகளின் உற்பத்திக் குறையாமல் பாதுகாக்க முடியும்.
கால்நடைகளில் உட்கொள்ளும் திறன் அதிகரிக்கப்படுகிறது. எரிசக்தி மற்றும் புரதச்சத்தின் அளவு அதிகரிக்கின்றது. பதப்படுத்தப்படாத கரும்புத் தோகையில் 1.05% செரிமான புரதமும் 15.66% மொத்த செரிமான சத்துக்களும் உள்ளன. பதப்படுத்தப்பட்ட கரும்புத் தோகையில் இவை முறையே 3.49% மற்றும் 22.78% ஆக அதிகரிக்கிறது. சுவையேற்றப்பட்டுள்ளதால் கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது