கன்று வளர்ப்பில் சீம்பாலின் முக்கியத்துவம்

கன்று ஈன்றவுடன் தாய்ப் பசுவின் மடியில் சுரக்கும் முதல் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலானது இரத்தத்திலுள்ள புரதத்திலிருந்து சில நிணநீர்களின் தூண்டுதலால் கன்று ஈனுவதற்குச் சில வாரங்கள் முன்னரே மடியில் உருவாக்கப்படுகிறது. சீம்பாலில் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி போன்றவை அதிக அளவில் உள்ளன.

சீம்பாலில் அதிக அளவில் உள்ள “இம்முனோகிளாபுளின்“ எனப்பபடும் நோய் எதிர்ப்புச் சக்திகள் கன்றுகளை நோய்க் கிருமிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்றன. அதனால் சீம்பாலை கன்றுகளுக்கு நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஒரு கொடையென்றே கூறலாம். சீம்பாலில் சாதாரண பாலை விடை ஏழு மடங்கு புரதச் சத்தும் இரண்டு மடங்கு மொத்த திடப் பொருளும் அதிகமாக உள்ளன. சீம்பால் மலமிளக்கியாக செயல்பட்டு பிறந்த கன்றின் குடலில் உள்ள மலத்தை வெளித்தள்ள உதவுகிறது. மேலும் கன்று பிறக்கும் போது அவைகளிடம் குறைந்து காணப்படும் “ஏ”, “டி” மற்றும் “ஈ” போன்ற உயிர்ச்சத்துக்கள் சாதாரணப் பாலை விட சீம்பாலில் அதிக அளவில் உள்ளன.

சீம்பாலானது கன்றின் வயிற்றைத் தாண்டி சிறுகுடலுக்கு செல்லும் பொழுது உட்கிரகிக்கப்படுகிறது. சிறுகுடலில் சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை உட்கிரகிக்கும் திறன், கன்று பிறந்த சில மணி நேரத்தில் அதிகமாகவும், அடுத்த சில மணி நேரங்களில் படிப்படியாகக் குறைந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகு முற்றிலுமாகக் குறைந்து விடுகின்றது. அதனால் கன்றுகள் பிறந்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் முதல் கட்ட சீம்பாலும் 10 மணி முதல் 12 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்டச் சீம்பாலும் போதுமான அளவு அதாவது கன்றின் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும்.

மாட்டில் சீம்பால் அதிக அளவு காணப்பட்டால் அதிகப்படியாக உள்ள சீமபாலை கறந்து விட வேண்டும். இல்லையெனில் கன்றுகள் அதிகமாகக் குடித்து கன்றுகளில் கழிச்சல் ஏற்படும். அதிகமான சீம்பாலை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைத்து பிற கன்றுகளுக்கு அல்லது அநாதைக் கன்றுகளுக்குக் கொடுக்கலாம். சில நேரங்களில் உடல் பலவீனம், சோர்வு போன்ற காரணங்களினால் கன்றுக் குட்டி சீம்பால் குடிக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது நாம் பால் புட்டி மூலமாக சீம்பாலைக் கொடுக்க வேண்டும்.

சீம்பால் கிடைக்காத பொழுது முக்கியமாக மாடு இறந்து விட்டாலோ அல்லது சில நேரங்களில் மடிநோய் அல்லது மரபு வழி நோய் காரணமாக கன்று பிறந்தவுடன் தாயின் மடியில் பால் சுரக்கவில்லையென்றாலோ அந்நேரங்களில் மற்ற பசுக்களின் சீம்பாலைக் கன்றுக்குக் கொடுக்கலாம். அப்படியும் மற்ற பசுக்களின் சீம்பால் கிடைக்கவில்லை என்றால் “செயற்கை சீம்பால்” தயாரித்துக் கன்றுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

அதற்கு முட்டை 1, தண்ணீர் 300 மி.லி, விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி, பால் 500 மி.லி கலந்து செயற்கை சீம்பால் தயாரித்து பிறந்த கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கன்றுகளுக்குச் சீம்பாலைக் குறித்த அளவு, குறித்த நேரத்தில் கொடுப்பது உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதோடு நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரித்து கன்றுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து எதிர்காலத்தில் அதிக உற்பத்தியைக் கொடுக்கத் துணை புரிகிறது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்