கன்றுகளின் வளர்ச்சியும் பராமரிப்பும் அவை தாய் வயிற்றில் இருக்கும் பொழுதே ஆரம்பமாகின்றன சினை மாடுகள் நன்கு பராமரிக்கப் படாவிட்டால் பிறக்கும் கன்றுகள் எடை குறைந்தும் உடல் மெலிந்தும் வலுவற்றதாகவும் இருக்கும். அக்கன்றுகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்துவிடக்கூடும். எனவே சினைப் பசுக்களுக்கு 7 மாத சினைக் காலம் முதல், அதன் உடல் நிலைக்கும் பால் உற்பத்திக்கும் கொடுக்கும் கலப்புத் தீவனத்துடன் சுமார் 1 முதல் 1.5 கிலோ கலப்புத் தீவனம் அதிகம் கொடுக்க வேண்டும் சினைக்காலங்;களில் சுமார் 15 முதல் 20 கிலோ பசும்புற்கள் கொடுத்தல் வேண்டும்.
கன்று பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவைகள்:
கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கி சுத்தம் செய்துவிடும். அப்படி செய்யவில்லையென்றால் சுத்தமான துணியைக் கொண்டு அல்லது வைக்கோலை சுருட்டிக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். மூச்சுத் திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்துவிட்டு மார்பகத்தை சற்று அழுத்தி விட்டால் மூச்சு திரும்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.
குளிர் காலங்களிலும் மழைக் காலங்களிலும் பிறந்த கன்றுகளுக்கு பாதுகாப்பு வேண்டும். கன்றை வெயிலில் புல் தரையில் போட்டு வைக்கலாம். பிரத்தியேகக் கன்று அறையில் கன்றுகளைப் போட்டு அனல் அடுப்புகளை வைத்து உஸ்ணத்தை உயர்த்தி குளிரைப் போக்கி கன்றுகளுக்கு இதமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
தொப்புள் கொடி பராமரிப்பு:
கன்றுகளின் தொப்புள் கொடி பராமரிப்;பு கன்றுக் குட்டி வளர்ப்பில் மிகவும் முக்கியமானதாகும். தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினால் இறுகக் கட்டிவிட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ விட்டு சுத்தமான கத்தரிக்கோலைக் கொண்டு கத்தரித்து விட வேண்டும். கத்தரித்த இடத்தில் புண் ஆகாமல் இருக்கவும் கொசு, ஈ போன்றவை தொல்லை கொடுக்காமல் இருக்கவும் உடனே டிங்சர் அயோடின் மருந்தை தடவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் கன்றுகளின் தொப்புளில் சீழ்க்கட்டி உண்டாவதும்;, மூட்டுகளில் சீழ்ப்பிடிப்பதும் தடுக்கப்படுகிறது.
இளங்கன்றுகளில் சீம்பாலின் முக்கியத்துவம்:
கன்று பிறந்தவுடன் தாய்ப்பசுவிடமிருந்து கொடுக்கப்படும் முதல் உணவு சீம்பாலாகும். சீம்பாலில் மாவு மற்றும் கொபுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம். உயி;ர்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும்; நோய் எதிர்ப்புச்சக்தி போன்றவை உள்ளன. பிறந்த கன்றுக்கு உடனே சீம்பால் அளிப்பதன் மூலம் இளங்;கன்றுகளை நோயின் பாதிப்பிலிருந்து காப்பாற்றலாம். கன்று பிறக்கும் போது அவைகளிடம் குறைந்து காணப்படும் உயிர்ச்சத்துக்கள் சீம்பாலில் சாதாரணப் பாலைவிட அதிக அளவில் உள்ளன. மேலும் சீம்பால் கன்றுகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கும். எனவே கன்றுக்குட்டி பிறந்தவுடன் சீம்பால் கொடுப்பது மிகவும் அவசியமாகிறது.
சீம்பாலானது கன்றின் வயிற்றைத் தாண்டி சிறுகுடலுக்கு செல்லும் போது உட்கிரகிக்கப்படுகிறது. சிறுகுடலில் சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை உட்கிரகிக்கும் திறன் கன்று பிறந்து சில மணி நேரத்தில் அதிகமாகவும் அடுத்த சில மணி நேரங்;களில் படிப்படியாகக் குறைந்து, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகு முற்றிலுமாகக் குறைந்து விடுகின்றது. அதனால் சீம்பால் கன்று பிறந்த முதல் பன்னிரெண்டு மணி நேரத்திற்குள்ளாகப் போதுமான அளவு அதாவது கன்றின் உடல் எடையில் பத்தில் ஒரு பங்;கு கொடுக்கப்பட வேண்டும். கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும் 10 முதல் 12 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்டச் சீம்பாலும் கொடுக்க வேண்டும்.
சில நேரங்களில் உடல் பலவீனம், சோர்வு மற்றும் சரியாக வளர்ச்சியடையாத உணவுக் குழாய் ஆகிய காரணங்களினால் கன்றுக் குட்டி சீம்பால் குடிக்க முடியாத நிலை நேரிடும். அத்தருணத்தில் நாம் பால் புட்டி மூலமாக சீம்பாலைக் கொடுக்கலாம். சில நேரங்;களில் மடிநோய் அல்லது மரபுவழி நோய் காரணமாக கன்று பிறந்தவுடன் தாயின் மடியில் பால் சுரப்பதில்லை.
அந்நேரங்களில் மற்ற பசுக்களின் சீம்பாலைக் கொடுக்கலாம். சீம்பால் கன்றுக்குக் கிடைக்கப் பெறாவிடில் “சீம்பால் பதிலியைக்” கொடுக்கலாம். 300 மி.லி. தண்ணீரில் ஒரு கோழி முட்டையை கலந்து அரை தேக்கரண்டி விளக்கெண்ணெயை விட்டு அத்துடன் 600 மி.லி பசும்பால் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் 3-4 நாட்கள் கொடுக்கலாம். சீம்பால் பதிலியில் கலக்கப்படும் விளக்கெண்ணெயானது சீம்பாலில் உள்ள மலமிளக்கிக் குணத்திற்காக சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு கன்றுகளுக்குச் சீம்பாலைக் குறித்த அளவு குறித்த நேரத்தில் கொடு;பபது உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதோடு நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரித்து கன்றுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து எதிர்காலத்தில் அதிக உற்பத்தியைக் கொடுக்கத் துணைபுரிகிறது. கன்றுகளைத் தாயிடமிருந்து முழுமையாக பிரித்து பராமரிக்கும் பொழுது முதல் 3 முதல் 4 நாட்களுக்குப் பசுவின் சீம்பாலை 8 மணி நேர இடைவெளியில் கொடுக்க வேண்டும்.
இரண்டு அல்லது 3 நாட்களுக்குப் பால் புட்டியின் மூலம் பாலைக் கொடுக்கலாம். பிறகு வாளியிலிருந்து பாலைக் குடிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். கன்றுகளை இரண்டு கால்களுக்கு இடையில் பிடித்துக் கொண்டு விரல்களைப் பாலில் நனைத்து எடுத்துக் கன்றின் வாயில் வைக்க வேண்டும. பால் ருசி தெரிந்ததும் கன்றுகள் விரைவாக சுவைக்கத் தொடங்கும். உடனே மெதுவாக கன்றின் தலையைக் கைவிரல்களோடு வாளியிலுள்ள பாலைத் தொடும்படி குனியச் செய்ய வேண்டும்.
கொஞ்ச நேரத்தில் கன்று தானாகவே பாலைக் குடிக்கத் தொடங்கும். கன்றினை 2வது மாதம் வரை பால்குடிக்க அனுமதிக்கலாம். மூன்றாவது வார தொடக்கத்திலிருந்தே பசும் புற்களையும் கன்று தீவனக் கலவையையும் சிறிது சிறிதாக அதிகரித்து இரண்டு மாதம் முடியும் தருவாயில் பால்குடியை நிறுத்த வேண்டும். இதனால் கன்று நல்ல ஊட்டம் பெற்று குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியுடன் பருவத்தை அடைய வாய்ப்புண்டாகிறது.
கன்றுத் தீவனம்:
கன்றுகளுக்கு கன்றுத் தீவனம் கொடுப்பதன் மூலம் கன்று பால் குடிப்பதைக் குறைப்பதுடன் கன்று வளர்ச்சிக்கும் உறுதுணையாகி கன்று பராமரிப்புச் செலவும் குறையும். அரைத்த தானியங்கள் 60 கிலோ, பிண்ணாக்கு 27 கிலோ, தவிடு 10 கிலோ, தாது உப்புகள் 2 கிலோ மற்றும் உப்பு 1 கிலோ கலந்த கலவை கன்றுத் தீவனமாகும். கன்றுத் தீவனத்தை 2 வாரத்தில் 100 கிராமிலிருந்து ஆரம்பித்து 26 வாரத்தில் 1.5 கிலோவிற்கு படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும். கன்றுகளுக்கு இத்துடன் நல்ல உலர்புல்லோ, பச்சைத் தீவனமோ குறைவின்றி கொடுக்க வேண்டும். இவ்வகை பராமரிப்பில் கன்று குறைந்த செலவில் உடல் வளர்ச்சியடைந்து தக்க பருவத்தில் சினைப்பருவம் அடையும் என்பது உறுதி.
கன்றுகளுக்குக் கொட்டகை அமைப்பு:
கன்றுகளுக்காக அமைக்கப்படும் கொட்டகை நல்ல வெளிச்சத்துடனும் குளிர். வெயில் ஆகியவற்றிலிருந்து கன்றுகளைப் பாதுகாக்கும் வண்ணம் அமைய வேண்டும். கன்றுகளை ஒன்று சேர்த்தும் தாயிடமிருந்து முழுமையாகப் பிரித்தும் பராமரிக்கலாம். கன்றுகளைக் கூரை போட்ட வீட்டமைப்பிலும் அதனுடன் சுற்றி உலாவி வர முழுமையாக வேலி போடப்பட்ட திறந்த வெளி அமைப்பும் கொண்ட கொட்டில்களிலும் வளர்க்கலாம். கன்றுக்கு 1 மாதம் வரை 1 ச.மீ, 4 மாதம் வரை 1.5 ச.மீ , 9 மாதம் வரை 2 ச.மீ என்ற அளவில் இடவசதி தரவேண்டும்.
அடையாளக் குறியிடுதல்:
சிறந்த பராமரிப்புக்கு கன்றுகளுக்கு நிரந்தர அடையாளக் குறியிட வேண்டும். இதைக் காதின் அடிப்பகுதியில் பச்சைக் குத்தியும் எண்களையும் எழுத்துக்களைக் குறித்தும் உலோகக் காதணிகளை அணிவித்தும் செயல்படுத்தலாம். கழுத்தில் அடையாளக் குறித்தகடுகளை சங்கிலி மூலம் தொங்கவிடலாம்.
நோய்ப்பராமரிப்பு முறைகள்:
கன்றுகளுக்கு 4 மாத வயதிற்கு பின் கோமாரி நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய், சப்பை நோய் போன்ற நோய்களுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் படி தடுப்பூசிகள் போடுதல் அவசியம். இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையே ஒரு மாத இடைவெளி இருத்தல் வேண்டும். கன்றுகளுக்கு முறையாக குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். கன்று பிறந்த ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும்.
பின் மாதம் ஒரு முறை 6 மாதம் வரையிலும் பிறகு 3 மாதத்திற்கொரு முறையும், ஒரு வருட வயதிற்கு மேல் ஆறு மாதத்திற்கொரு முறையும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்ணி பேன் தௌ;ளுப் பூச்சி போன்ற புற ஒட்டுண்ணிகளை நீக்க உடலின் மேல் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து தேய்த்தல் வேண்டும். இளங்கன்றுகளை பாராமரிக்கும் கொட்டகைளில் தாதுஉப்புக் கட்டிகளை தொங்க விடுவதன் மூலம் கன்றுகளுக்கான தாது உப்புகனை அளிக்க இயலும். மேலும் கன்றுகளில் மண்ணைத் தின்னும் பழக்கத்தைத் தவிர்க்க முடியும்.