கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம். மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும். பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும்.
பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன. பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.
கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம். அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.
பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட்டுவிட வேண்டும்?
கன்று பிறந்து பதினைந்து நாட்களுக்குள் கொம்பை சுட்டுவிடுவது நல்லது. காரணம், முதல் இரண்டு, மூன்று வாரங்களில் கொம்பை சுட்டுவிடும் போது அதற்கு வேதனை தெரியாமல் இருக்கும். மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட காலங்களில் செய்யும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்கும். பொதுவாக நிறைய மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளுக்கு இடையே சண்டை வந்து, கொம்பை உடைத்துக் கொள்வதை தவிர்க்கவே கொம்பை சுடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள் ஒன்றிண்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் கொம்பை சுடுவது அவசியமில்லை.
ஆறு மாத கன்று குட்டிக்கு அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது? எப்படி நடுக்கத்தை நிறுத்துவது?
பாண்டிகைண்ட் என்ற மருந்து இருக்கிறது. ஒரு மருந்தை வாங்கி அதில் பாதியை ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்து விடுங்கள். மீதி இருப்பதை பதினைந்து நாளுக்கு பின்னர் கொடுக்கவும். தீவனம் நன்றாக கொடுங்கள்.
அதிக சீம்பால் குடிப்பதால் பிறந்த கன்றுகளில் ஏற்படும் கழிச்சலை எவ்வாறு தவிர்க்க முடியும்?
பிறந்த கன்றுகள், வேண்டும் அளவிற்கு சீம்பால் குடிக்க அனுமதித்தல் அவசியமாகும். மேலும், இளங்கன்றுகள் தரையில் உள்ள மண் போன்றவற்றை உண்ண அனுமதித்தல் கூடாது. இது போன்ற காரணங்களால் கன்றுகளுக்கு கழிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.