கத்தரிக்காயை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் தடுக்கும் வழிகள்

கத்தரிக்காய் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சவாலான விசயம் பூச்சித் தாக்குதலில் இருந்த தப்பிப்பதுதான். ஒவ்வொரு நிலையிலும் கத்தரிச் செடியை பூச்சிகள் தாக்கும். இதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகளை நம்பியே அதிக விவசாயிகள் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இயற்கை வழியிலும் கத்தரிக்காய் செடியை தாக்கும் பூச்சிகளிடமிருந்து காப்பாற்றலாம். இதுகுறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியுள்ளதை கத்தரி விவசாயிகள் பின்பற்றினால் இயற்கை முறையில் கத்தரி அறுவடை செய்யலாம்.

கத்தரிக் செடியில் காய் துளைப்பான் பூச்சிகள் தொல்லைகள் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைக்க வேண்டும். இதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும். இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்கொளியால் கவரப்பட்டு, விளக்கில் சிக்கி இறக்கும். விளக்குப் பொறி ஒன்றின் விலை ரூ.100. மேலும், இனக் கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைக்க வேண்டும். இதன் விலை ரூ.125 – ரூ.150.

முட்டை பருவத்தை அழிக்க, டிரைக்கோகிராமா கைலோனிஸ் எனும் ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி எனும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் ஒரு சிசி ஒட்டுண்ணி விலை ரூ.20. பூ பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். கத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர்ரக பூஞ்சாண மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

விசைத் தெளிப்பானாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரும், கைத்தெளிப்பானாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். இலைப்பேன் தாக்கினால், 4 நாள்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும். இதன் பயனாக, செடியில் பல புதிய துளிர்களும் வரும்.

மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், வெர்டிசிலியம் லீகானி எனும் உயிர்ரக பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். எபிலாக்னான் பொறி வண்டு, இலையில் துளை போடும். அப்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ சாம்பலை ஆற்று மணலுடன் கலந்து, இலை மீது அதிகாலையில் தூவ வேண்டும். கரி, நிலக்கரி, அரிசி உமி என எந்த சாம்பாலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாம்பலில் உள்ள சிலிக்கானை சாப்பிடுவதால், வண்டின் பல் உடைந்து, அவை இறந்து போகும். மேலே கூறியுள்ள படி கத்தரி சாகுபடி விவசாயிகள் இயற்கையை முறையை பின்பற்றினால், நல்ல மகசூல் எடுக்கலாம். இது எல்லாவிதமான கத்தரிக்காய் ரகங்களுக்கும் பொருந்தும் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் பூச்சிக் கொல்லி மருந்துகள் வாங்கி நஷ்டத்தை சந்திக்கலாம்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்