அங்கக வேளாண்மை தற்சமயம் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. விவசாயத்தில் அதிக விளைச்சல் பெற முக்கியமான காரணியாக மண் வளப் பராமரிப்பு விளங்குகிறது. மண்ணில் உள்ள சத்துக்களில் மணிச்சத்து பயிரின் வேர் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மண்ணில் காணப்படும் தழைச்சத்து பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் இல்லை. இதனை ஊட்டமேற்றிய தொழு உரம் மூலம் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலைக்கு மாற்றலாம்.
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறை
- நன்கு மட்கிய தொழு உரம் 750 கிலோவுடன் ஒரு எக்டருக்கு குறிப்பிட்ட பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்தை, ஒன்றாக நன்கு கலந்து, குவியலாக்கி, அதனை ஈரமான மண்கொண்டு, நன்கு மூடி வைக்க வேண்டும்.
- பதினைந்து நாட்களுக்குப் பிறகு, இக்கலவையை நன்கு திருப்பிவிட்டு, தண்ணீர் தெளித்து, மீண்டும் குவியலாக்கி ஈர மண் கொண்டு மூடிவிட வேண்டும். ஒரு மாத காலத்தில் ஊட்டமேற்றிய தொழு உரம் கிடைக்கிறது.
- தொழு உரம் சாதாரணமாக மானாவாரி நிலங்களுக்கு, எக்டருக்கு 6.25 டன் என்ற அளவில் சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால் இந்த அளவு தொழு உரம் தற்சமயம் கிடைப்பது அரிதாக இருப்பதால், அதற்கு பதிலாக ஊட்டமேற்றிய தொழு உரம் நல்லதொரு மாற்று உரமாக அமைகிறது. இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்தை, கடைசி உழவிற்கு முன், அந்த பயிருக்குத் தேவைப்படும் தழைச்சத்து உரத்துடன் கலந்து வயலில் சீராக தூவ வேண்டும்.
ஊட்டமேற்றிய தொழு உரத்தின் பயன்கள்
- ஊட்டமேற்றிய தொழு உரத்தில் மணிச்சத்து பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் உள்ளது.
- மானாவாரி நிலங்களில் ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்துவதால், பயிரின் வேர் வளர்ச்சி அதிகமாகி, பயிர் மகசூல் அதிகரிக்கிறது.
- மண்ணில் மணிச்சத்து நிலைநிறுத்தப்படுவது தடுக்கப்படுவதால், மணிச்சத்து பயன்பாட்டுத்திறன் அதிகமாகிறது.
மானாவாரி பயிர்களுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம்
சோளம்
பரிந்துரைக்கப்பட்ட 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை, 750 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க வேண்டும்.
நிலக்கடலை
ஒரு எக்டருக்கு சிபாரிசு செய்யப்படும் 62.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 750 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கலாம்.
எள்
ஒரு எக்டருக்கு பரிந்துரைக்கப்பட்ட 81.25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை, 750 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்கலாம்.
சூரியகாந்தி
ஒரு எக்டருக்கு சிபாரிசு செய்யப்படும் 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 750 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க வேண்டும்.
இதே முறையில் எல்லா பயிர்களுக்கும் தயாரித்து பயன்படுத்தலாம். ஊட்டமேற்றிய தொழு உரத்தில் உள்ள அங்கக அமிலங்கள் மணிச்சத்தை சுற்றிலும் ஒரு வளையம் போல் சூழ்ந்து கொள்வதால், மணிச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. ஊட்டமேற்றிய தொழுஉரம் மண்ணின் பௌதீக பண்புகளை மேம்படுத்துகிறது. மண்ணின் நீர் தேக்கு திறன் அதிகமாகிறது. மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் உள்ள மற்ற சத்துக்களும் பயிருக்கு நன்கு கிடைத்து பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது