கால்நடைகள்வளர்ப்பு, பராமரிப்பு

உழவு மற்றும் பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்

Types of domestic cattle raised for milk production

கிர் – Gir

கிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது. குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது. இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும்

கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும். இவ்வின மாட்டினங்களின் பால் உற்பத்தி 1200-1800 கிலோவாகும். முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 515-600 நாட்களாக இருக்கும்.

சிவப்பு சிந்தி – Red Sindhi

இவ்வினம் சிவப்பு கராச்சி மற்றும் சிந்தி என்றும் அறியப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் இம்மாட்டினங்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்.

இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி சராசரியாக 1100-2600 கிலோ வரை இருக்கும். சிந்தி மாட்டினங்கள் வெவ்வேறு இனங்களுடன் கலப்பினம் செய்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 425-540 நாட்களாக இருக்கும்.

சாஹிவால் – Sahiwal

சாஹிவால் மாட்டினம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தில் இருந்து தோன்றியது. இந்த மாட்டினம் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்றும் அறியப்படுகிறது. இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும். இம்மாட்டினங்களின் சராசரி பால் உற்பத்தி 2725-3175 கிலோவாகவும், பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்

 

உழவு மற்றும் இதர வேலைகளுக்குப் பயன்படும் உள் நாட்டின மாட்டினங்கள்

ஹலிக்கார் – hallikar

தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து இவ்வினம் தோன்றியது. இம்மாட்டினத்தில் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும். சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும். இம்மாட்டினங்கள் இவற்றின் வேலை செய்யும் திறனுக்கு, குறிப்பாக இவற்றின் வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை.

அம்ரிட்மஹால் – Amritmahal

இம்மாட்டினங்கள், கர்நாடகாவிலுள்ள ஹாசன், சிக்மகளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலிருந்து தோன்றியவை. அம்ரிட்மஹால் மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும், பெரும்பாலும் இவற்றின் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும். இவற்றின் கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும்.

கிலாரி – Khillari

இம்மாட்டினங்கள் மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை. சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவற்றின் நடை வேகமாக இருக்கும்.

காங்கேயம் – Kangayam  

இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்பத்தூர் மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவை. திரு.நல்லதம்பி சர்க்கார் மன்றாடியார் மற்றும் பாளையகோட்டையின் தெய்வத்திரு.பட்டோகர், போன்றோரின் முயற்சியால் இம்மாட்டினங்கள் தனித்துவம் பெற்றவை.

பிறக்கும்போது இம்மாட்டினங்களின் தோல் சிவப்பு நிறமாக இருந்து பின் ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறிவிடும். காளை மாடுகள் சாம்பல் நிறத்துடன் கூடிய முதுகுப்பகுதியையும், முன், பின் கால்களையும் கொண்டவை. வண்டியிலுக்கும் காளைகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும்.

பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். ஆனால் இவ்வினத்தினைச் சேர்ந்த சில மாடுகள் சிவப்பு, கருப்பு, பழுப்பு மற்றும் பல நிறங்கள் கலந்த கலவையுடன் கூடிய தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் கண்கள் அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும்.

பர்கூர் – Bargur

ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாட்டினம் காணப்படுகிறது. பர்கூர் மாட்டினங்களின் தோல் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும். சில சமயங்களில் வெள்ளை மற்றும் அடர்த்தியான பழுப்பு நிறங்களிலும் இம்மாட்டினங்கள் காணப்படும். நன்கு அமைந்த உடற்கட்டுடன், நடுத்தர அளவில் இம்மாட்டினங்கள் காணப்படும்

உம்பலாச்சேரி – Umblachery

இம்மாட்டினங்கள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

உம்பாலச்சேரி இனத்தினைச் சேர்ந்த கன்றுகள் பிறக்கும் போது பொதுவாக சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருப்பதுடன் அவற்றின் முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும். வண்டி மாடுகளுக்கு கொம்பு தீய்ப்பது பொதுவாக உம்பலாச்சேரி இன மாடுகளில் பின்பற்றப்படுகிறது.

புலிக்குளம் – Pulikulam

இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் மாவட்டத்திலும் காணப்படுகின்றன. புலிக்குளம்/ஆலம்பாடி காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன், கருப்பு நிறமாக காணப்படுகின்றன. பசு மாடுகள் சாம்பல் நிறத்துடனோ அல்லது வெள்ளை நிறத்துடனோ காணப்படும்.

மைசூர் பகுதி மாடுகளைப் போன்றே இம்மாடுகளும் பின்புறம் வளைந்த கொம்புகளைக் கொண்டிருக்கும். இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுகின்றன. ஆனால் வண்டிகளை வேகமாக இழுக்காது.

பால் உற்பத்தி மற்றும் வேலைக்குப் பயன்படும் உள் நாட்டின மாட்டினங்கள்

தார்பார்க்கர் – Tharparker

தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியவை. இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றும் அறியப்படுகின்றன. இம்மாட்டினங்களின் தோல் வெள்ளை மற்றும் வெளிறிய சாம்பல் நிறத்துடன் காணப்படும்.

இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும், உழுவதற்கும் பயன்படுகின்றன. பசு மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்றவை (1800-2600 கிலோ) முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாக இருக்கும்.

ஹரியானா – Hariana

ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது. இவற்றின் கொம்புகள் சிறியதாக இருக்கும். காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை.

இவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக 1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள். ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்.

காங்ரெஜ் – kankrej

இவ்வின மாடுகள் வாட்தாத் அல்லது வேஜ்ட் அல்லது வாட்தியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றன. குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு கட்ச் வளைகுடா பகுதியிலும் அதன் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்தும் இம்மாட்டினங்கள் தோன்றின.

இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும். காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன. இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி 1360 கிலோக்களாகும்

ஓங்கோல் – Ongole

இம்மாட்டினங்கள் நெல்லூர் என்றும் அறியப்படுகின்றன. இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி 1000 கிலோக்கள். முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்.

கிருஷ்ணா பள்ளத்தாக்கு – krishna valley

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதிகளிலிருந்து இவ்வினம் தோன்றியது. இம்மாடுகள் பெரிய உடலமைப்புடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் இருக்கும். இவ்வினத்தினைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும்.

பொதுவாக இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுவதோடு, இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இம்மாட்டினங்களின் காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி சுமாராக இருக்கும். இவற்றின் சராசரி பால் கொடுக்கும் அளவு 916 கிலோக்களாகும்.

டியோனி – Deoni

இந்த மாட்டினங்கள் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பல பெயர்களால் அறியப்படுகின்றன. இம்மாட்டினம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாரத்வாடா பகுதியிலிருந்தும், அருகிலுள்ள கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்தும் தோன்றியது. இவற்றின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும்

முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும். இம்மாட்டினங்களின் பால் உற்பத்தி 636-1230 கிலோவாகவும், சராசரியாக 940 கிலோவாக இருக்கும். கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.

பகிருங்கள்
Source
ஆதாரம்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button