இன்றைய ஆட்டுக் குட்டிகளே வளர்ந்து பின்னாளில் நமக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதிலும் நமது பண்ணைக்கு வலிமையான சந்ததிகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே இளம் குட்டிகளைக் கண்ணும் கருத்துமாகப் பண்ணையாளர்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். சினை ஆடுகள் குட்டி போடும் நாள் நெருங்கும் பொழுது, மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட சுத்தமான தனி அறையில் அடைத்து வைக்க வேண்டும். குட்டி ஈனும் பொழுது சினையாட்டிற்குச் சிரமம் ஏற்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாசப் பராமரிப்பு:
குட்டிகள் பிறந்தவுடன் வால் மற்றும் நாசி துவாரத்தில் காணப்படும் பிசுபிசுப்பான திரவத்தைச் சுத்தமான துணி கொண்டு துடைத்து விட்டு நன்கு சுவாசிக்க வழி வகை செய்ய வேண்டும். தாயானதுகுட்டியை நக்கி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் தாய் குட்டியை அடையாளம் காணவும், தாய், சேய் இணைப்பு ஏற்படவும் ஏதவாகிறது. சரியாக மூச்சுவிடாத குட்டிகளை அதன் பின்கால்களைப் பிடித்து உடலை சாய்த்து வைத்து தலை கீழே இருக்குமாறு வைத்து மூச்சு விடும் வரை இலேசாக உதற வேண்டும். மார்பை அழுத்தி விடுவதன் மூலமும் மூச்சு விட ஆரம்பிக்கும்.
தொப்புள் கொடியை வெட்டுதல் :
குட்டிகள் பிறந்தவுடன் தொப்புள் கொடியை 2 செ.மீ அளவு நீளம் விட்டு மெல்லிய நூலினால் கட்டிய பிறகு அதற்குக் கீழே கத்திரிக்கோலால் கத்தரித்தபின் ‘டிங்சர் அயோடின்’ மருந்து கொண்டு தடவ வேண்டும். இதனால் தொப்புளில் சீழ்க்கட்டிக்கொள்வது, இரண ஜன்னி நோய் வருவது போன்றவை தடுக்கப்படுகிறது.
குளிர்காலப் பராமரிப்பு:
மழைக்காலங்களிலும், குளிர் மற்றும் பனிக்காலங்களிலும் பிறக்கும்
குட்டிகள் அதிக அளவில் இறக்க வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க கொட்டகைகளில் தடுப்புகள் அமைத்து காய்ந்த புல், வைக்கோல், உலர்ந்த பொட்டுகளைப் பரப்பி வெதுவெதுப்பாக இருக்கச் செய்வது அவசியம். மேலும் மின் விளக்குகளை எரிய விடுவதன் மூலமும் வெப்பத்தை அதிகரிக்கலாம்.
சீம்பால் கொடுத்தல் :
குட்டிகள் பிறந்தவுடன் 30 நிமிடத்திற்குள் சீம்பாலை கொடுக்க வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்திகளும், அதிக சத்துக்களும் உள்ளன. எனவே இது இளம் குட்டிகளை நோயிலிருந்து காப்பாற்றும். குட்டிகளுக்கு பாலை முதல் வாரத்தில் 3 வேளையும் பிறகு இரண்டு வேளையும் கொடுக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் தாயிடம் அதிகமாக பால் இருக்காது. எனவே அதிகமாக பால் கொடுக்கும் தாய் ஆடுகளிடமிருந்து அதன் குட்டிகள் பால் குடிப்பதற்கு முன்பாகவே பாலைக் கறந்து மற்ற ஆட்டுக் குட்டிகளுக்குக் கொடுக்கலாம். இல்லையென்றால் பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி பாலேடு நீக்கி விட்டு ஆறவைத்து பால் புட்டி மூலம் குட்டிகளுக்கு கொடுக்கலாம். முதல் மாதத்தில் உடல் எடையில் ஆறில் ஒரு பங்கு, இரண்டாவது மாதத்தில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் குட்டிகளுக்கு பால் கொடுக்க வேண்டும்
குட்டிகள் பிறந்தவுடன் தாயிடம் பால்குடிக்கச் செல்லும் பொழுது சாணம், சிறுநீர் கலந்த மடியில் பால்குடிப்பதனால் நுண்ணுயிர்க் கிருமிகள் குட்டிகளின் வயிற்றுக்குள் சென்று குட்டிகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி குட்டிகள் இறக்க வாய்ப்புள்ளது. எனவே குட்டிகளை அதன் தாயிடம் பால்குடிக்க விடும் முன்பு தாய் ஆட்டின் பிறப்புறுப்பு மற்றும் மடியை ‘பொட்டாசியம் பெர்மாங்கனேட்’ மருந்தை தண்ணீரில் கலந்து நன்றாக கழுவி விட வேண்டும்.
தீவனமளித்தல் :
குட்டிகளுக்குப் பிறந்த 10ம் நாளிலிருந்து சிறிது அடர் தீவனம், பயிறு வகைப் புற்களைத் தீவனமாகக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். 4 முதல் 5 வார வயதில் நாளொன்றுக்கு 50 கிராம் வரை அடர்தீவனம் அளிக்கலாம். 3 முதல் 6 மாத வயதில் கூடுதலாக 1 கிலோ பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் அளிக்க வேண்டும். குட்டிகளுக்கு தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.
எடை பார்த்தல்:
வளரும் பருவத்தில் குட்டிகளின் எடையைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். இது தீவன அளவைக் கட்டுப் படுத்திக் கொடுக்கவும், நோய் வருமுன் கணடறியவும் உதவும். பண்ணையாளர்கள் மாதம் ஒரு முறை எடை பார்த்து வளர்;ச்சியைக் கவனித்து வருவது அவசியம். மார்புச் சுற்றளவிற்கும், உடல் எடைக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது. இந்த அடிப்படையில் மார்புச் சுற்றளவு அதிகம் உள்ள ஆடுகள், அதிக எடையுடன் இரக்கும். முக்கியமாக 1 கிலோ உடல் எடை கூட எவ்வளவு தீவனம் செலவாகிறது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது. முறையான பராமரிப்பு செய்தும் மூன்று மாதங்கள் வரை குட்டிகளின் எடை அதிகரிக்கவில்லை என்றால் பண்ணையிலிருந்து அந்தக் குட்டிகளை நீக்கி விடுவது நல்லது.
கொம்பு நீக்கம்:
நீளமாக வளரும் கொம்புகளாhல் மந்தையில் உள்ள மற்ற ஆடுகளுக்குக் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்சார உபகரணம் அல்லது காஸ்டிக் சோடா கொண்டு கொம்பு நீக்கம் செய்யலாம். குட்டிகளுக்கு 3 முதல் 6 நாட்களில் கொம்பு நீக்கம் செய்யலாம். இதனால் மந்தையிலுள்ள ஆடுகள் ஒரே சீரான தோற்றம் பெற்றிருக்கும்.
ஆண்மை நீக்கம் செய்தல் :
இனவிருத்திக்கு அல்லாமல் இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் கிடாக்களை 2 மாத வயதில் ஆண்மை நீக்கம் செய்யலாம். ஆண்மை நீக்கம் செய்வதன் மூலம் இறைச்சி உற்பத்தி அதிகரிக்கும். மேலும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட கிடாக்களைக் கையாளுவது எளிது.
குளம்பு நீக்கம் செய்தல்:
கொட்டில் முறையிலும் பரண் மேலும் வெள்ளாடுகளை வளர்க்கும் பொழுது குளம்புகள் நீளமாக வளர்ந்து விடுவதால் ஆடுகள் நொண்டிக் கொண்டே இருக்கும். ஆகவே, அதிகமாக வளர்ந்த குளம்புகளை வெட்டி நீக்க வேண்டும்.
பால் மறக்கடித்தல் :
மூன்று மாத வயதாகும் பொழுது குட்டிகளை பால மறக்கச் செய்து தாயிடமிருந்து பிரிக்கலாம். குட்டிகளை 3 மாதத்திற்குப் பிறகும் நீண்ட நாட்கள் தாயிடம் பால் குடிக்க அனுமதித்தால்; தாய் ஆடு, மீண்டும் சினைப்பிடிப்பதிலும், குட்டிகள் ஈனுவதிலுமு; தாமதம் ஏற்படும்.
நோய்ப்பராமரிப்பு:
குடற்புழு நீக்கம் முதல் வாரத்திலும் பிறகு முதல் ஆறு மாதத்திற்கு மாதம் ஒரு முறையும் ஆறு மாதத்திற்கு பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறையும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். நோய் தடுப்பூசிகளை தகுந்த சமயத்தில் கால்நடை மருத்துவர் உதவியுடன் ஆட்டுக் குட்டிகளுக்குப் போட வேண்டும். குட்டிகள் ஏதும் நோய் வாய்ப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட குட்டிகளை தனியாக பிரித்து வைத்து உடனடியாக கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவம் செய்ய வேண்டும்.