இளங்கன்றுகளில் அதிக இறப்பை ஏற்படுத்தும் கழிச்சல் நோய்

கறவை மாடு வளர்ப்பில் மிக முக்கிய நிலை வகிப்பது கன்றுகள் பராமரிப்பாகும். குறிப்பாக கன்றுகள் பிறந்த முதல் ஒரு மாத காலத்தில் பராமரிப்பில் மிகக் கவனம் செலுத்துவது கன்றுகள் இறப்பைத் தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கன்றுகளை பல நோய்கள் தாக்கினாலும் இளங்கன்றுகளை அதிகம் பாதித்து உயிர்சேதத்தை அதிக அளவில் ஏற்படுத்தும் மிக முக்கியமான நோய் கன்றுக் கழிச்சல் நோயாகும். இது பொதுவாக 2 வாரத்திற்குட்பட்ட இளங்கன்றுளை அதிகமாகப் பாதிக்கிறது. கன்றுகள் இந்த நோயால் பாதிக்கப்படும் பொழுது திடீரென இறந்து பண்ணையாளர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்துவதால்; மாடுகள் வளர்ப்போர் கன்றுக் கழிச்சல் நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும் தடுக்கும் முறைகளையும் நன்கறிந்து தகுந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கன்றுக்கழிச்சல் நோய் வராமல் தடுக்க முடியும்.

கன்றுக்கழிச்சல் நோய் ஏற்படக் காரணங்கள்:
கன்றுக்கழிச்சல் நோய் பிறந்த கன்றுகளில் “கோலிபார்ம்” என்ற நுண்ணுயிர்க்கிருமியால் ஏற்படுகிறது. இந்த நுண்ணுயிர்க்கிருமிகள் குடற்பகுதியிலுள்ள மற்ற நுண்ணுயிர்க்கிருமிகள் மற்றும் நச்சுயிரிக் கிருமிகளுடன் சேர்ந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சரியாக சீம்பால் கொடுப்படவில்லையெனில் கன்றுக் கழிச்சல் அதிகமாக ஏற்படும். அசுத்தமான தண்ணீர், மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம், அதிக அளவு பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது. மற்ற கன்றுகளை நக்குதல், கன்றுகளில் குடற்புழு தாக்குதல், சரியான ஊட்டமின்மை, முறையற்ற தீவனமளித்தல், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களாலும் கன்றுக் கழிச்சல் நோய் ஏற்படுகிறது.

நோய் பரவும் முறை:
கன்றுக்கழிச்சல் நோய் அசுத்தமான தீவனம், படுக்கை, தண்ணீர், தொப்புள் கொடி அசுத்தம், கருப்பை நோய்கள் மற்றும் கருச்சிதைவான கன்றுகள் ஆகியவற்றின் மூலமாக பரவுகிறது.

அறிகுறிகள்:
கன்றுகள் பிறந்த இரண்டு வாரத்திற்குள் இந்நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். பெட்டை மற்றும் கிடேரி கன்றுகளையும் பாதிக்கும். கன்றுகளில் காய்ச்சல், சோர்வு, பசியின்மை காணப்படும். மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் வயிற்றுப் போக்கு தொடர்ந்து இருக்கும். கண்கள் குழி விழுந்து காணப்படுதல், மூக்கில் சளி வடிதல், திசுக்களில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளும் காணப்படும். உடல் மெலிந்தும் நுரையீரல் அழற்சியும் காணப்படும். தக்க சமயத்தில் கால் நடை மருத்துவர் கொண்டு தகுந்த சிகிச்சை அளிக்கா விடில் கன்றுகள் நோய் கண்ட ஒரு வாரத்தில் இறந்து விடும்.

சிகிச்சை முறை:
கன்றுக்கழிச்சல் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனே பாதிக்கப்பட்ட கன்றை தனியே பிரித்து வைக்க வேண்டும். காலந்தாழ்த்தாமல் உடனடியாக கால்நடை மருத்துவரின் ஆலோசனைப் படி நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்தால் இந்நோயால் பாதிக்கப்பட்ட கன்றுகளை இறப்பிலிருந்து காப்பாற்றி விடலாம்.

தடுப்பு முறைகள் :
பிறந்த கன்றின் தொப்புள் கொடியை சுமார் 2 மதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினால் இறுகக்கட்டி அதன் கீழ் 1 செ.மீ விட்டு சுத்தமான கத்தரி கொண்டு கத்தரித்து விட வேண்டும். கத்தரித்த இடத்தில் “டிங்சர் அயோடின்” மருந்தை நன்கு தடவுவதன் மூலம் தொப்புள் கொடியில் நோய்க்கிருமிகள் தாக்காமல் தடுக்க முடியும். கன்று பிறந்தவுடன் மடியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு தான் சீம்பால் அருந்த கன்றுகளை அனுமதிக்க வேண்டும். உடல் எடையில் 10 சதவிகிதம் பால் கொடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான பால் குடிக்க கன்றுகளை அனுமதிக்கக் கூடாது. அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சீம்பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். பசுவில் மடிவீக்க நோய் இல்லாமல் பாhத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான உணவைக் கன்றுகளுக்குத் தராமல் இருக்க வேண்டும்.

நல்ல காற்றோட்டமான இடங்களில் சுத்தமான முறையில் கன்றுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். கொட்டகையின் தரை சுத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் இரண்டு வாரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. இல்லையேல் கிருமி நாசினி கலந்த தண்ணீரைக் குடிக்க கொடுக்கலாம். இதற்கு தண்ணீர் தொட்டிகளில் ப்ளீச்சிங் பவுடரைக் கலந்து கொடுக்கலாம். 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் ப்ளீச்சிங் பவுடர் என்ற அளவில் கலந்து 12 மணி நேரம் கழித்து கன்றுகளுக்கு குடிக்கக் கொடுக்கும் பொழுது தண்ணீரில் உள்ள கன்றுக் கழிச்சலை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் அழிந்து விடும். நோயுற்ற கன்றுகள் இருந்த இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் மற்ற கன்றுகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்