இன்று முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(31.08.2020) வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் இன்று(31.08.2020) முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் ஆக மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட குடிநீர்; தேவைக்கு வினாடிக்கு 100 கன அடியும் ஆக மொத்தம் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் 13.08.2020 அன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும், அதிக மகசூல் அடைய பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைக்குமாறு விவசாய பெருங்குடி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தண்ணீர் திறப்பால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் நிலங்களும் பாசனப் பயன்பெறும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.நீதிபதி(உசிலம்பட்டி), கே.மாணிக்கம்(சோழவந்தான்), எஸ்.டி.கே.ஜக்கையன்(கம்பம்), பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் எம்.சுகுமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்