உலகத்தில் இந்தியா நிலப்பரப்பில் ஏழாவது இடத்தையும், மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அதன் பொருளாதாரம், கனிம வளம், இயற்கை வளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியா எண்ணற்ற வளங்களைக் கொண்டிருந்தாலும் வளர்ந்து விட்ட நாடுகளின் வரிசையில் இடம் பெற இயலவில்லை. எனினும் இந்தியா தனது பொருளாதாரத் திட்டங்களினாலும், அரசியல் கொள்கைகளினாலும் பல்வேறு நலப்பணிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் தன்னை வளரும் நாடுகளின் வரிசையில் முன்னிலையில் நிறுத்தியுள்ளது. மேலும் இந்தியா வளர்ந்த நாடுகளின் வரிசையில் இடம்பெற திட்டமிடப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்சியையும் தனது ஐந்தாண்டு திட்டங்களில் முன்னிறுத்தி பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவின் வேளாண்மைத்துறை, தொழில்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறை, வியாபாரத்துறை, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறை ஆகியவை பன்மடங்கு வளர்ச்சியைப் பெற்று, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்து வருகின்றது. இந்த அலகில் இந்திய முன்னேற்றத்தின் திட்டங்களும், கொள்கைகளும் வளர்ச்சிப் பணிகளும் பல்வேறு துறைகளில் எவ்வாறு உள்ளது என்பதைக் காண்போம்.
வேளாண்மை வளர்ச்சி:
உணவை உற்பத்தி செயவதும், அவற்றுடன் கால்நடைகளை வளர்ப்பதும் வேளாண்மை ஆகும். இந்திய வேளாண்மை, நீர்பாசனத்தில், பருவக் காற்றையே நம்பி உள்ளது. எனவே இந்திய வேளாண்மை “பருவக்காற்றின் சூதாட்டம்” என அழைக்கப்படுகிறது. வேளாண்மை இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியபங்கு ஆற்றுகிறது. நம் இந்திய நாட்டின் மொத்த உற்பத்தியில் 29.4% வேளாண்மை மூலம் கிடைக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 64% பணியாளர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். பருவக் காற்றையும், அதன் மழை அளவையும் நம்பியுள்ள வேளாண்மையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளன. இந்திய விவசாய முன்னேற்றம் கிராம பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது. ஒரு நாட்டின் விவசாயம் சிறப்பாக நடைபெறவில்லை என்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
வேளாண்மை வளர்ச்சியின் முக்கியத்துவம்:
வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அச்சாணி போன்றது. இந்தியாவைப் பொறுத்த வரை அது இந்திய பொருளாதாரத்தின் முதுலுகெலும்பாக உள்ளது. வேளாண்மை உரிய முறையில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் நாட்டின் ஆணி வேரையே அழித்துவிடும். தொழில்கள் முன்னேற்றம் பெற வேளாண்மை பல வழிகளில் துணைபுரிகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேளாண்மை என்பது ஒர் அடிப்படைத் தொழிலாகும்.
வேளாண்மை முக்கியத்துவத்திற்கானக் காரணங்கள்:
வேளாண்மைப் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. மக்களின் அத்தியாவசியமான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. நாட்டின் பணவீக்கத்தைத் தவிர்க்க வேளாண்மை உதவுகிறது. வேளாண்மையின் மூலம் பல தொழில்கள் உருவாகின்றன. அந்நிய செலவாணியை அதிகரிக்க வேளாண்மை உதவுகிறது. வேளாண் மூலப்பொருளால் தொழில் துறை வளர்கிறது. வேளாண்மைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கிறது.
சுதந்திரத்திற்கு முன் இந்திய வேளாண்மை:
தொடக்க காலங்களில் உணவைத் தேடி அலைந்த மனிதன் சமூகமாக வாழக்கற்றுக் கொண்டான். மனிதன் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்ய ஆரம்பித்தான். தொடக்க காலங்களில் ஆற்று ஓரங்களில், நீர் வளம் அமைந்த பகுதிகளில் ஆரம்பமான விவசாயம், உலோகத்தின் பயன்பாட்டுக்கு பின் பல இடங்களிலும் பரவ ஆரம்பமானது. தனது தேவைக்குப் போக எஞ்சிய உணவுப் பொருட்களைக் கால்நடைகளுக்கு உணவாய் பயன்படுத்தினான். வேளாண்மை செய்ய கால்நடைகள் உதவின. கால்நடைகளால் பால், இறைச்சி, தோல், ரோமம், உரம் போன்ற பல்வேறு பயன்களைப் பெற்றான். காலங்கள் செல்ல செல்ல வேணாண்மையில் வளர்ச்சி ஏற்பட்டது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலங்களை உழுவதற்கும் அறுவடை செய்வதற்கும், போர் அடிப்பதற்கும், நீராவி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரபியலில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளால் கலப்பின, வீரிய ஒட்டு விதைகள் உருவாக்கப்பட்டன.
சுதந்திரத்திறகு பின் இந்திய வேளாண்மை:
இந்தியா விடுதலை அடைந்த பொழுது வேளாண்மை தேக்க நிலையில் இருந்தது. விவசாயப்புரட்சிக்கு அடித்தளம் அமைத்தவர் பிரதமர் நேரு ஆவார். நேருவின் ஆட்சிக் காலத்தில் விவசாயக்கல்வி, விவசாய ஆராய்ச்சி, விவசாய விரிவுப்பணி ஆகியவற்றிற்கு சிறப்பிடம் அளிக்கப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் (1952-57) முக்கிய குறிக்கோள்களில் ஒன்று உணவு பற்றாக்குறையைப் போக்குதல் ஆகும். எனவே வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கும், விவசாய ஆராய்ச்சி முயற்சிக்கும் முன்னுரிமை தரப்பட்டது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டங்கள் விவசாய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தன. வேளாண்மை உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சாகுபடி நிலப்பெருக்கம், அதிக முதலீடு, நீர்ப்பாசனத் திட்டங்கள், கால்நடை வளர்ப்பு, உரம் மற்றும் வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை சார்ந்த துணைத் தொழில்கள் விரிவாக்கம், கூட்டுறவு விளை பொருள் விற்பனை போன்ற வளர்ச்சிப் பணிகள் வளர்ச்சி அடைந்தன. விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன.
இந்தியா சுதந்திரம் அடையும் முன் இருந்த நில உரிமை முறைகளான:
- ஜமின்தாரி முறை
- மகல்வாரி முறை
- இரயத்துவாரி முறை ஆகியவை ஒழிக்கப்பட்டன.
சீர்திருத்தச் சட்டங்களின் படி நிலப்பாதுகாப்பு மற்றும் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டன. கூட்டுறவு விவசாயப் பண்ணையின் அவசியங்கள் உணரப்பட்டன. அரசு உதவியால் பல முன் மாதிரி கூட்டுறவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கூட்டுறவு பண்ணைகள், கூட்டுறவு சேவைச் சங்கங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டன.
1960-61ல் அறிமுகம் செய்யப்பட்ட தீவிர வேளாண்மை மாவட்டத்திட்டம் (Intensive Agriculture District Programme – DAP) இராசாயன உரங்கள், நவீன விவசாயக் கருவிகள், விவசாயக் கடன் வழங்குதல், உயர் விளைச்சலுக்கான கட்டமைப்பை (Infra Structure) உருவாக்கிக் கொடுத்தல் மற்றும் விளைச்சலைப் பெருக்கும் விவசாய முறை ஆசியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இந்நடவடிக்கைகள் இந்திய வேளாண்மை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றின. அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் வில்லியம் கண்டே (Dr. William Gande) இந்த விவசாய சாதனையைப் ‘பசுமை புரட்சி’ என்று வர்ணித்தார். நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் பசுமைப் புரட்சி திட்டம் 1967-68-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
பசுமைப்புரட்சி விளைவுகள்:
வேளாண்மை தேசிய அளவில் நவீனமயமாக்கப்பட்டது. விவசாயிகளிடையே அறிவியல் வேளாண்மை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது. நவீன தொழில்நுட்ப முறைகளை, செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், நவீன விவசாயக் கருவிகள், மண்பரிசோதனை, விவசாய விரிவுப்பணி ஆகியவற்றை ஆர்வமுடன் ஏற்று செயல்படுத்தினர். பருவமழை பொய்த்தாலும் நீர் பாசன வசதிப் பெருக்கம் அணைகள் மற்றும் கால்வாய்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகள் வருமானம் பெருகியது. கிராமப்புற வேலைவாய்ப்பு பெருகியது. மேலும் வளர்ச்சிப் பணித்திட்டங்கள் வளர்ந்தன. விளைச்சல் பெருகியதால் இறக்குமதி குறைந்தது. வாணிபம் வளர்ச்சி அடைந்தது. வளரும் உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியானது.
வேளாண்மை உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது. பசுமைப் புரட்சியின் விளைவாக, நாட்டில் கோதுமை உற்பத்தி இரு மடங்காகவும், நெல் உற்பத்தி 53 சதவீதமும் அதிகரித்தது. இந்தியாவில் விளையக்கூடிய பயிர்களைக் காரிப் அல்லது கோடைக்காலப் பயிர்கள், ராபி அல்லது குளிர்காலப்பயிர்கள் என இருவகையாக பிரிக்கலாம். காரிப்பருவம் ஜூன் மற்றம் ஜூலை மாதங்களில் விதைத்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யும் பயிர்கள் காரிப் பயிர்கள் ஆகும். நெல், சோளம், கேழ்வரகு, பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் சணல் பயிர்கள் இப்பருவத்தில் விளைவிக்கப்படுகின்றன.
ராபி பருவம்:
அக்டோபர் மற்றும் டிசம்பரில் விதைத்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறுவடை செய்யும் பயிர்கள் ராபிப்பயிர்கள் ஆகும். கோதுமை, பார்லி பட்டானி, கடுகு, பருப்பு வகைகள் இப்பருவத்தில் விளைவிக்கப்படுகின்றன.
வெண்மைப்புரட்சி:
பசுமைப்புரட்சிப் போன்றே ‘வெண்மைப்புரட்சியும் இந்தியாவின் சிறப்பு மிகு சாதனையாகும். கால்நடைகள், விவசாய வேலைகளுக்கும், நீர் இறைப்பதற்கும், வண்டி இழுப்பதற்கும், தொழு உரங்களுக்கும் பயன்படுகின்றன. உலக கால்நடைகளில் 1/5 இந்தியாவில் உள்ளது. வெண்மைப்புரட்சியில் பால் பெருக்கமும், பால் சார்ந்த பொருட்களின் பெருக்கமும் ஏற்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு முதலே இந்தியா பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் நாடாக இருந்தது. நீலப்புரட்சி உலக மக்களின் உணவில் மிக முக்கிய இடத்தை மீன் பெறுகிறது. இந்தியாவில் மீன் உற்பத்தியை பெருக்கவும், மீன் பிடித் தொழிலை வளர்க்கவும் அரசு எடுத்த முயற்சியின் விளைவு நீலப்புரட்சி ஆகும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் இவற்றில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. எந்திர மீன்பிடிப்படகுகள் மூலமாக ஆழ்கடல் மீன்பிடிப்பு நடைபெறுகிறது.
மும்பை, கொல்கத்தா, கொச்சி, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் ஆழ்கடல் மீன்பிடிநிலையங்கள் உள்ளன. மண்டபத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. நீர்ப்பாசன வளர்ச்சி விவசாய வெற்றிக்கு, வீரிய விதைகள், தரமான உரம், மண் வளம், போதிய நிதி வசதி, நவீன கருவிகள், எந்திரங்கள், நீர்வளம் முதலியவை அவசியமாகும். இவற்றுள் தலையானது நீர் வசதியாகும். நீர்ப்பாசனம் வேளாண்மைக்கு முதுகெலும்பு போன்றது. உணவுப் பயிராகிய நெல்லுக்கும். பணப்பயிராகிய கரும்புக்கும், பல் போக சாகுபடிக்கும் அதிக நீர் தேவைப்படுகிறது. நீர்பாசனத்தின் முக்கியத்துவம் இந்தியா நீர்வளமுள்ள நாடு. இங்கு வற்றாத வளநதிகள் பல பாய்கின்றன. எனினும் நீர்வளத்திற்கு அடிப்படை மழை. மழையை நம்பி உழவர்கள் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது.
பொய்க்காமல் பருவ மழை பொழிந்தால், நல்ல விளைச்சல் இருக்கும். வளம் கொழிக்கும். பருவமழை காலங்கடந்து வந்தாலோ, ஏமாற்றி விட்டாலோ விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நாட்டில் பஞ்சமும் பட்டினியியும் பரவ பருவ மழை காரணமாகிறது. நமது நாட்டில் பெய்கின்ற மழையில் பெரும்பங்கு தென்மேற்குப் பருவக்காற்றால் ஜூலை முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. அதே போன்று வடக்கிழக்குப் பருவக்காற்றால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் பெரும்பாலான மழையைப் பெறுகின்றன. நீர்ப்பாசனத் தேவை ஆண்டு முழுவதும் மழை பொழியாததாலும், எல்லா பகுதியிலும் ஒரே சீரான மழை கிடைக்காததாலும் கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்குத் தண்ணிர் மிகுதியாகத் தேவைப்படுவதாலும் முறையான நீர்ப்பாசனம் நமது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதத் தேவை ஆகும். நீர்ப்பாசன முறைகள் இந்தியாவில் நீர்ப்பாசன முறைகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
அவற்றுள் முக்கியமானவை மூன்று வகைப்படும்.
- கிணற்றுப் பாசனம்
- ஏரிப்பாசனம்
- கால்வாய்ப் பாசனம்
இவை மேல்மட்டக் கிணறுகள் குழாய் கிணறுகள் என இருவகைப்படும்.
மேல்மட்டக் கிணறுகள்:
நிலத்தடி நீர் கிடைப்பதைப் பொறுத்து இக்கிணறுகளை எங்கு வேண்டுமென்றாலும் எளிதில் தோண்டிப் பயன்படுத்தலாம். டெல்லி முதல் வாரணாசி வரை உள்ள பகுதிகள், பஞ்சாப், ஹரியானா, பீஹார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மேல்மட்டக் கிணறுகள் அதிகமாக உள்ளன. மின்சார மோட்டார்கள், டீசல் பம்புகள், ஜெட் பம்புகள் அல்லது ஏற்றம் மூலம் நீர் இறைக்கப்படுகின்றது. கால்வாய் வழி பெறும் தண்ணிர் அளவு இதன் மூலம் கிடைப்பதில்லை. பெரும்பாலான கிணற்று நீரில் உப்புத் தன்மை உள்ளது. மழை அளவு குறைந்தால் கிணறுகள் வறண்டு போகும்.
குழாய்க் கிணறுகள்:
நிலத்தில் ஆழ்துளை இட்டு இரும்பு அல்லது பிளாஸ்டிக் குழாய்களைப் பொருத்தி, டீசல் அல்லது மின்சார மோட்டார் மூலம் தண்ணிர் இறைப்பது குழாய்க் கிணறு ஆகும். உத்திரபிரதேசம், பீஹார், பஞ்சாப், ஹரியா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் குழாய்க் கிணற்றுப் பாசனம் அதிகமாக உள்ளது. நிலத்தடிநீர் அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் இது பயன் தரும்.
ஏரிப்பாசனம்:
தாழ்வான பகுதிகளில், பள்ளங்களின் கரையைப் பலப்படுத்தி மழை நீரைத் தேக்கி பாசனத்திற்குப் பயன்படுத்துவது ஏரிப்பாசனம் ஆகும். தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒரிஸா போன்ற மாநிலங்களில் ஏரிப்பாசனம் அதிகமாக உள்ளது. பல ஏரிகள் கோடை காலங்களில் வறண்டு போக வாய்ப்புள்ளது.
கால்வாய்ப்பாசனம்:
ஆற்று நீரை முறைப்படுத்தப்பட்ட வாய்க்கால்கள் வழியாக நிலங்களில் பாய்ச்சும் முறை கால்வாய்ப்பாசனம் ஆகும். வட இந்திய ஆற்றுச் சமவெளியில் இப்பாசன முறை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. உத்திரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிக அளவில் உள்ளது. டெல்டா பகுதியில் இப்பாசனம் சிறப்பாக நடைபெறுகிறது. ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுப் பெரும்பாலான நிலங்கள் சாகுபடிக்கு வந்துள்ளன.
முக்கிய அணைக்கட்டுகள்:
- பக்ரா நங்கல் அணைத்திட்டம்
- தாமோரர் நதிப்பள்ளத்தாக்குத் திட்டம்
- ஹீராகுட் அணைத்திட்டம்
- கோசித்திட்டம் ரீஹண்டு அணைத்திட்டம்
- மேட்டுர் அணைத்திட்டம்.
ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை