ஆட்டுக் கிடாக்களுக்கு ஏன் ஆண்மை நீக்கம் வேண்டும் ? எப்படி நீக்க வேண்டும் ?

ஆட்டுக் கிடாக்குட்டிகள் இறைச்சி உற்பத்திக்கென்று வளர்க்கப்படும் பொழுதும், பண்ணையில் தேவைக்கு அதிகமான மற்றும் இனவிருத்திக்குத் தேவையற்ற கிடாக் குட்டிகளை ஆண்மை நீக்கம் செய்து வளாப்பதன் மூலம் அதிக இலாபம் பெற முடியும். நன்கு வளர்ந்த ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கிடாக்களும், இனவிருத்திக்குத் தேவையற்றவை என அறியப்படும் பொழுது ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு பருவ வயது பெட்டைகளைக் கண்டுபிடிக்கவும், இறைச்சிக்கென வளர்க்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கிடாக்கள் தேவையான எண்ணிக்கையில் அதாவது 20 பெட்டைகளுக்கு ஒரு கிடா என்ற விகிதத்தில் மட்டுமே மந்தையில் பராமரிக்கப்பட வேண்டும்.

கூடுதலாக கிடாக்கள் பண்ணையில் இருந்தால் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வது மட்டுமின்றி பிற பெட்டை ஆடுகளையும் சினை ஆடுகளையும் துரத்திக் கொண்டிருப்பதால் கிடாக்கள் மற்ற ஆடுகளைத் தீவனம் எடுக்க விடுவதில்லை. மேலும் கிடா ஆடுகள் பிற ஆடுகளை முட்டி மோதி உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. கிடா ஆடுகள் சினை ஆடுகளை முட்டும் பொழுது சினை ஆடுகளில் கருக்கலைப்பு கூட ஏற்படுவதுண்டு. எனவே கூடுதலான கிடாக்களை ஆண்மை நீக்கம் செய்வது சிறப்பான நன்மையைத் தரும்.

கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட கிடாக்கள் அமைதியாகக் காணப்படும். இறைச்சி உற்பத்திக்கென்று வளர்க்கப்படும் கிடாக்களில் ஆண்மை நீக்கம் செய்யும் பொழுது உடல் எடை விரைவில் அதிகரிக்கும். அதனால் கிடாக்குட்டிகள் விரைவிலேயே விற்பனை எடையை அடைவதால் குறுகிய காலத்தில் கிடாக்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் விரைவில் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆண்மை நீக்கம் செய்யாத கிடாக்களி;ன இறைச்சியில் “கிடாக்களின் மணம்” என்ற ஒரு வகை மணம் வீசும். பலருக்கு இம்மணம் பிடிப்பதில்லை. ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட கிடாவின் இறைச்சியில் இம்மணம் காணப்படாததால் எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஆண்மை நீக்கம் செய்யும் செய்யும் முறைகள்:
ஆட்டுக் கிடாக்குட்டிகளில் பாரம்பரிய முறை, இரப்பர் வளையம் கொண்டு ஆண்மை நீக்கம் செய்யும் முறை மற்றும் ஆண்மை நீக்கம் செய்யும் கருவி கொண்டு ஆண்மை நீக்கம் செய்தல் போன்ற முறைகளில் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக ஆட்டுக் கிடாக்களில் எந்த வயதிலும் ஆண்மை நீக்கம் செய்யலாம் என்றாலும்; தாயிடமிருந்து பிரித்தெடுக்கும் பருவத்திலேயே அதாவது 3 மாதங்களில் கிடாக்குட்டிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது சாலச் சிறந்தது. ஆண்மை நீக்கம் செய்வதற்கு முன் கிடாக்குட்டிகளுக்கு இரணஜன்னி எனப்படும் டெட்டனஸ் நோய்த் தடுப்பூசி போடுவதன் மூலம் ஆண்மை நீக்கம் செய்த பின் கிடாக்குட்டிகளுக்கு வரக்கூடிய இரணஜன்னி நோயை தடுக்க முடியும்.

பாரம்பரிய முறை:
இம்முறையில் நெருப்பிலிடப்பட்ட சூட்டுக்கோல் கொண்டு விதைப்பையில் வைத்து சுட்டு பொசுக்கப்படுகிறது. இம்முறையில் ஆடுகளுக்கு மிகுந்த வலி ஏற்படுவதுடன் காயம் ஆறுவதற்கு கூடுதல் பராமரிப்பு தேவை. ஆகையால் பாரம்பரிய முறையில் ஆண்மை நீக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரப்பர் வளைய முறை:
தடிமனான சிறிய இரப்பர் வளையம் கொண்டு விதைப்பையைச் சுற்றி இறுகக் கட்டி விடுவது ஒரு ஆண்மை நீக்க முறையாகும். கிடாக்குட்டிகளின் விதைப்பை அளவில் பெரிதாகி வளர்ச்சி அடையும் பொழுது சிறிய இரப்பர் வளையம் கொடுக்கும் அழுத்தமானது விதைகளுக்குச் செல்லும் இரத்த நாளங்களைச் செயலிழக்கச் செய்வதால், விதைப்பை இரத்த ஓட்டமின்றி சுருங்கி கீழே விழுந்து விடுகின்றன.

ஆண்மை நீக்கம் செய்யும் கருவி கொண்டு ஆண்மை நீக்கம் செய்தல்:
சிறிய பார்டிஸோ ஆண்மை நீக்கம் செய்யும் கருவியை பயன்படுத்தி இருபக்கங்களிலும் உள்ள இரத்த நாளங்களையும் விந்து நாளங்களையும் நெருக்கி உடைத்து செயலிழக்கச் செய்வது சிறந்த முறையாகும். இம்முறையில் வெளிப்புறக் காயங்களோ இரத்தப் போக்கோ ஏற்படுவதில்லை. கருவி பயன்படுத்திய இடத்தில் டிங்சர் அயோடின் தடவி விட்டால் போதுமானது. சிறிது காலத்தில் விதைப்பை முழுமையாகச் சுருங்கி ஆண்மையற்ற தன்மை ஏற்பட்டு விடுகிறது.

சிறிய பர்டிஸோ ஆண்மை நீக்கம் செய்யும் கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் முறை:
மூன்று மாத வயதுடைய இனப்பெருக்கத்திற்குத் தேவையற்ற கிடாக்குட்டிகளை முதலில் மற்ற ஆடுகளிலிருந்து பிரிக்க வேண்டும். கிடாக்குட்டிகளின் பின்னங்கால்களை உயர்த்திப் பிடித்து விதைப்பை முழுமையாகத் தெரியும்படி ஒரு நபர் தூக்கி நிறுத்த வேண்டும். ஆண்மை நீக்கம் செய்பவர், பின்புறமாக கிடாக்;குட்டியை அணுகி விதைப்பையில் இரு பக்கங்களிலும் விதைகளின் மேலுள்ள கயிறு போன்ற கெட்டியான நாளங்களை பிடித்துப் பார்த்து அறிய வேண்டும்.

பின்னர் பர்டிஸோ கருவியை ஒரு பக்க நாளத்தின் மேலும் கீழும் செலுத்தி இறுகப் பிடித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இரத்த நாளம் உடையும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்னர் மறுபக்கமுள்ள இரத்த நாளத்தையும் இதே போல் அழுத்தி உடையும் படி செய்ய வேண்டும். இரு பக்கமும் ஒரே நேர்கோட்டில் வராமல் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் படி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கருவி மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்ட இடத்தில் தோல் பகுதியில் டிங்சர் அயோடின் மருந்து தடவி விட வேண்டும். பின்னர் பின்னங்கால்களை கீழே விடச் செய்து கிடாக்குட்டிகளை நடக்க அனுமதிக்கலாம். சிறிது நேரம் வலி இருந்த போதிலும் இரத்தப் போக்கு மற்றும் புண் ஏற்படாமல் ஆட்டுக் கிடாக்குட்டிகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லையாதலால் இம்முறை மிகவும் பாதுகாப்பான முறையாகும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்