ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோயினை தடுக்கும் முறைகள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஆடு வளர்ப்பு ஒரு முக்கியத் தொழிலாகத் தொன்று தொட்டு நடந்து வருகிறது. ஆடுகளைத் தாக்கும் கொடிய நோய்களுள் முக்கியமானது ‘நீலநாக்கு நோய்’. இந்நோயானது மழைக் காலத்தில் குறிப்பாக செம்மறியாடுகளில் அதிக இறப்பை ஏற்படுத்தி ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்குப் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஆடு வளர்ப்போர் இக்கொடிய நோயின் தன்மை, நோய் வராமல் தடுக்கும் முறைகள் மற்றும் நோய்க்காலங்களில் கடைப் பிடிக்க வேண்டிய உத்திகளைத் தெரிந்து கொண்டு தடுப்பு முறைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

நோய்க்காரணி:
ஆர்.பி வைரஸ் எனப்படும் ஒரு வகை நச்சுயிரிக் கிருமிகள் இந்நோயை உண்டாக்குகின்றன. செம்மறியாடுகளுக்கே உரித்தான இந்நோய், வெள்ளாடுகளிலும் காணப்படுகிறது. ஆனால் தாக்கத்திற்கு உள்ளான செம்மறியாடுகளில் அதிக அளவில் இறப்பும் வெள்ளாடுகளில் மிகக் குறைந்த அளவு இறப்பும்; காணப்படுகிறது.

நோய் பரவுதல்:
நோயுற்ற ஆடுகளை கூலிக்காய்ட்ஸ் என்னும் ஒருவகை கொசுக்கள் கடிக்கும் போது இரத்தத்துடன் நோய்க்கிருமிகளும் சேர்த்து உறிஞ்சப்படுகிறது. பின்பு ஆரோக்கியமான ஆடுகளை இப்பூச்சிகள் கடிக்கும் போது அவற்றிற்கும் இந்நோய் பரவுகிறது. மழைக்காலங்களில் கூலிக்காய்ட்ஸ் மற்றும் சிலவகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இந்நோய் ஆடுகளை பெருமளவு தாக்குகிறது. இந்நோய் கிருமிகள், நேரடித் தொடர்பின் மூலமாகவோ, தண்ணீர், தீவனம் மூலமாகவோ ஒரு ஆட்டிலிருந்து மற்ற ஆட்டிற்கு பரவுவது இல்லை.

நோய் அறிகுறிகள்:
நோயின் ஆரம்பக் காலத்தில் ஓரிரு தினங்களுக்கு காய்ச்சல், தடித்துச் சிவந்த மூக்குத் துவாரங்கள் மற்றும் வாயிலிருந்து எச்சில் தொடர்ந்து ஒழுகுதல் போன்றவற்றை காணலாம். இதனைத் தொடர்ந்து மூக்குச் சளி, தும்மல், செருமல் போன்றவை உண்டாகி ஆடுகள் சுவாசிக்கச் சிரமப்படுகின்றன. இந்நிலையில் மூக்குச்சளி கெட்டியாகி மூக்கின் துவாரங்களை அடைத்துக் கொண்டிருப்பதையும் சில ஆடுகளில் காணலாம்.

சில ஆடுகளில் மூக்குச்சளி இரத்தம் கலந்தும் காணப்படும். வாயின் உட்புறத்தில் நாக்கு, உதட்டுப் பகுதிகளில் தடித்துச் சிவந்த பகுதிகளையும் காணலாம். காய்ச்சல் தென்பட்டு நான்கு அல்லது ஐந்து தினங்களில் உதடு, மூக்கு, காது, நாக்கு மற்றும் கீழ்த்தாடைப் பகுதிகளில் வீக்கம் காணப்படும். மேலும் நாக்கின் விளிம்புகள் மற்றும் மேற்பகுதிகளில் சிவந்த பகுதிகள் புண்களாக மாறி இப்பகுதிகளில் உள்ள திசுக்கள் இறந்து விடுவதால் நாக்கு நீல நிறமாக மாறி இந்நோயிற்கு ‘நீல நாக்கு நோய்’; என்ற பெயர் உண்டாகக் காரணமாகிறது.

வாயில் ஏற்படும் புண்களின் காரணமாகத் தீவனம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு ஆடுகள் மேய்ச்சலை வெறுக்கின்றன. இதனை அடுத்து கால்களின் குளம்பு, இடுக்கு மற்றும் மேற்பகுதிகள் சிவந்து வீங்கிப் பின் புண்ணாகி விடுவதால் ஆடுகள் நடக்க முடியாமல் நொண்டுவதைக் காணலாம். சில ஆடுகளில் கழிச்சலும் காணப்படலாம். உடலின் மேலுள்ள உரோமங்கள் உதிரும். சில ஆடுகளில் கழுத்து ஒரு பக்கமாக இழுத்தது போல் காணப்படும். இவ்வாறாக நோயுற்ற ஆடுகள் நடக்க இயலாமலும், தீவனம் தின்ன முடியாமலும் அவதியுற்று அறிகுறிகள் தென்பட்டு சுமார் ஒரு வார காலத்தில் இறக்க நேரிடுகின்றன.

நோயுற்ற ஆடுகளுக்கான சிகிச்சை முறை:
1. நீலநாக்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளான ஆடுகள் இரு முக்கியக் காரணங்களால் இறக்க நேரிடுகின்றன. முதலாவதாக நச்சுயிரியின் தாக்கத்தினால் உடல் ஆரோக்கிய நிலை கெட்டு அதன் பின் உண்டாகக் கூடிய தொற்று நோய்களினால் அதிக ஆடுகள் இறக்கின்றன. எனவே நோயுற்ற ஆடுகளை மற்ற ஆடுகளிலிருந்து பிரித்து நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை கால்நடை மருத்துவரின் உதவியுடன் காலை மற்றும் மாலை என்று இரு வேளையாகத் தொடர்ந்து 5 நாட்களுக்குக் கொடுப்பதன் மூலமாக இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்கலாம்.

2. இரண்டாவதாக, நோயுற்ற ஆடுகளில் நாக்கு, உதடு மற்றும் ஈறு போன்ற பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் வலியின் காரணமாக ஆடுகள் தீவனங்களை தின்ன முடியாமல், பட்டினியாகக் கிடந்து இறக்கின்றன. மேலும் கால் புண்களின் காரணமாக, நடக்க இயலாத நிலை ஏற்பட்டு மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் மேய இயலாமல் பட்டினியின் தன்மை அதிகரித்து அதிக அளவில் இறக்கின்றன. எனவே நோயுற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் ஆட்டுக் கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும்.

இது போன்ற ஆடுகளுக்குக் கெட்டியான தீவனங்களான இலைகள், புற்களைத் தவிர்த்து மென்மையான தீவனங்களான கேழ்வரகு, கம்பு, சோளம் போன்றவற்றைக் கஞ்சியாக்கி அற வைத்து வாயில் ஊற்ற வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த சுத்தமான நீரில் சிறிதளவு உப்பு போட்டு வாயில் உள்ள புண்கள் மற்றும் காலில் உள்ள புண்களை நன்கு கழுவி விட வேண்டும்.

மேலும் வாயில் உள்ள புண்களுக்கு 100 மி.லி. கிளிசரினில் 10 கிராம் போரிக் ஆசிட் மருந்தை நன்கு கலக்கி வாயில் புண்களின் மேல் தினமும் மூன்று வேளை தடவி விட வேண்டும்;. அல்லது போரிக் ஆசிட் மருந்தை தேங்காய் எண்ணெயில் கலந்தும் வாய்ப்புண்களின் மேல் தடவலாம். காலில் உள்ள புண்களில் போரிக் ஆசிட் மருந்தை வேப்பெண்ணையில் கலந்து தினமும் இரண்டு வேளை தடவ வேண்டும்.

நோய்த் தடுப்பு முறைகள்:
1. நீல நாக்கு நோயை கொசுக்கள் பரப்புவதனால் கூடுமான வரையில் இக் கொசுக்கள் உருவாவதனைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
2. ஆட்டுக் கொட்டகைகளிலும், கொட்டகையைச் சுற்றியுள்ள இடங்களிலும்; தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. வேப்பிலை கொண்டு ஆட்டுக் கொட்டகைகளிலும், சுற்றியுள்ள இடங்களிலும் ‘புகைமூட்டம்’ போட்டு அல்லது கொசு மருந்து தெளித்து கொசுத் தொல்லையை குறைக்க வேண்டும்.
4. புதர்கள், கொசுக்கள் தங்குவதற்கு நல்ல இடங்களாக அமைவதால், ஆட்டுக் கொட்டகையைச் சுற்றி உள்ள புதர்களை அவ்வப்போது நீக்கி விட வேண்டும்.
5. மழை மற்றும் பனிக் காலங்களில் ஆடுகள் தங்குவதற்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். இல்லையெனில் கொட்டகையினுள் ஈரப்பதம் அதிகரித்து, கொசுக்களின் வரவு அதிகரிப்பதுடன், நீல நாக்கு நோயின் தன்மையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.
6. நீலநாக்கு நோய்க் கிருமிகள் ஊசி மூலம் பரவும் தன்மை கொண்டிருப்பதால், ஊசி மூலம் மருந்து அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் நீல நாக்கு நோயினால் உண்டாகும் இறப்பைக் குறைத்து பொருளாதார இழப்பில்லாமல் ஆடு வளர்க்கும் விவசாயிகள் பயன் பெறலாம்.

 

 

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்