ஆடுகளைத் தாக்கும் உதட்டு அம்மை நோயும், தடுக்கும் முறைகளும்

ஆடுகளைத் தாக்கும் உதட்டு அம்மை நோயும், தடுக்கும் முறைகளும்

ஆடு வளர்ப்பு என்பது கிராமப்புற மக்களிடையே குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடையே விருமபி மேற்கொள்ளப்படும் முக்கிய இலாபகரமான தொழிலாகும். ஆடுகள் கூட்டமாக அல்லது மந்தையாக வளர்க்கப்படுவதால் அவற்றை நோய்கள் பல தாக்க வாய்ப்புள்ளன. அதனால் ஆடுகளில் இறப்பு ஏற்படும் பொழுது ஆடு வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன் நோயுள்ள ஆடுகளின் பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். அவ்வாறு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் காணப்படும் முக்கியமான ஒரு நோய் உதட்டு அம்மை நோயாகும்.

இந்நோயானது இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பரவலாகக் காணப்படும் நோயாகும். ஆடுகளில் காணப்படும் இந்ந தொற்று நோய் “பாராபாக்ஸ்” எனப்படும் ஒருவகை அம்மை நச்சுயிரிகளால் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளைத் தொடுவதன் மூலம் மனிதர்களுக்கும் இந்நோயின் தாக்கம் ஏற்படலாம்.

இந்த நோயின் தாக்கம், மற்றும் இறப்பு விகிதம் இளம் குட்டிகளில் சற்று அதிகமாக காணப்படும். எனவே ஆடுகள் வளர்ப்போர் உதட்டு அம்மை நோயைப் பற்றி தெரிந்து வராமல் தடுக்கும் வழி முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயால் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்க முடியும்.

நோய் பரவும் முறை

உதட்டு அம்மை நோயானது பாதிக்கப்பட்ட ஆடுகளிலிருந்து மற்ற ஆடுகளுக்கு தொடுதல் மற்றும் படுதல் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகள் மற்ற ஆடுகளை முகர்ந்து பார்க்கும் பொழுது அல்லது மற்ற ஆடுகளை வாயினால் உரசி விளையாடும் பொழுதோ விரைவில் பரவுகிறது.

ஆடுகளின் தோல்கள் மற்றும் முகத்தில் ஏற்படும் சிராய்;ப்பு மூலம் இந்நோய்க் கிருமிகள் பரவுகின்றன.  ஆடுகள் கருவேல மர இலைகளை உட்கொள்ளும் பொழுது அம்மரத்தின் முட்கள் ஏற்படுத்தும் சிறுசிறு துவாரங்கள் மூலமாகவும் இந்நோய்க் கிருமிகள் தொற்றிக் கொள்ளும்.

இந்நோய்க் கிருமிகள் பட்ட தீவனப் பாத்திரங்கள் மற்றும் இதர உயிரற்ற பொருட்கள் ஆடுகளின் உடம்பில் படும் பொழுது இந்நோய் பரவுகிறது. நோயுற்ற ஆடுகளின் உலர்ந்த திசுக்களில் இருந்து வெளிப்படும் உதட்டு அம்மை தொற்றுநோய் நச்சுயிரி ஆட்டுக் கொட்டகையின் சுற்றுப் புறத்தில் நீண்ட நாட்களுக்கு வீரியம் மி;க்கவையாக காணப்படும். இவை பின்னாளில் நோய் உண்டாக்கும் காரணிகளாக செயல்படக்கூடும். நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டின் பாலை அருந்தும் ஆட்டுக்குட்டிகள் இந்நோயால் பாதிக்கப்படும்.

நோய் உண்டாகும் முறை

நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் ஆடுகளின் தோலின் எதிர்ப்புத் திறனால் உதட்டு அம்மை நச்சயிரியானது எளிதில் நுழைந்து நோயை உருவாக்க முடியாது. உதட்டின் மேல்பகுதி அல்லது கீழ்ப்பகுதி அல்லது மேலுதடும், கீழுதடும் இணையும் பகுதியில் ஏதாவது காரணங்களாலோ சிராய்ப்போ அல்லது வெட்டுக் காயங்களோ ஏற்பட்டால் நோய்க்கிருமியானது எளிதில் உள்ளே சென்று விடும். உள்ளே சென்ற நோய்க்கிருமிகள் நன்றாக வளர்ந்து முதலில் முகப்பரு போன்ற கட்டிகளை உருவாக்கும். பின் தோல் அழற்சி, சீழ்க்கட்டிகள், கொப்புளங்கள் உண்டாகும்.

பின்னர் அந்த இடமானது முற்றிலும் அழுகி தோல் பகுதி முழுவதும் காய்ந்துவிடும். அதே வேளையில் நச்சுக் கிருமி மூலம் உடலின் உட்பகுதியில் அணுக்கள் பெருகி நோய் எதிர்ப்புத் திறனையும் உருவாக்கும். இந்நோய் எதிர்ப்புத் திறன் மூலம் ஓரளவு நச்சுயிரியின் தாக்கமானது குறைக்கப்படுவதோடு நோயும் கட்டுக்குள் கொண்டுவரப்படும். நோய் எதிர்ப்புத் திறனானது 8 மாதங்கள் வரை உடலில் நீடிக்கும்.

நோயின் அறிகுறிகள்

நோயால் பாதிப்புற்ற ஆடுகளின் மேலுதடும், கீழுதடும் இணையும் பகுதியில் சிறுசிறு கொப்புளங்கள் தோன்றும். பின்னர் முகமுன்பகுதி, வாய்க்கட்டுப்பகுதி, மூக்குப்பகுதி என்று பரவிக் கடைசியில் வாயின் உள் சவ்வுப் பகுதியிலும் கொப்புளங்கள் உருவாகும். கொப்புளங்கள் பொதுவாக 0.5 செ.மீ விட்டமுடையதாகவும், உருண்டை வடிவமாகவும் மாறிவிடும்.

கொப்புளக் கட்டிகள் வாயின் சுற்றுப் புறங்களில் முழுவதுமாக இருப்பதால் ஆடுகளால் தீவனம் உண்ண முடியாது. ஆட்டுக் குட்டிகளால் பால் குடிக்க முடியாத தன்மை உருவாகி விடுகிறது. அதனால் உடல் இளைத்து மெலிந்து சோர்ந்து பாதிக்கப்பட்ட ஆடுகளில் எடை குறைகின்றது.

உதட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகள் பொதுவாக எளிதில் இறப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் 2முதல் 6 வாரங்களில் இந்நோய் தானாகவே குணமாகிவிடும். ஆனால் வேறு நுண்ணுயிரிக் கிருமிகளின் பாதிப்பு இணைந்து வரும்பொழுது ஆடுகள் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

பராமரிப்புமுறைகள்

தேர்ந்தெடுக்கப்பட்டஉணவு மற்றும் குறித்த நேரத்தில் வழங்கப்படும் தகுந்த சிகிச்சை முறைகளால் ஆடுகள் இந்நோயிலிருந்து விரைவாக குணமடைய வழிவகுக்கும். நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆரோக்கியமான ஆடுகளிலிருந்து பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவு வகைகளான அரிசி, கம்பு மற்றும் கேழ்வரகு கஞ்சிகளை கொடுக்க வேண்டும்.

மர இலைகளின் இளந்தளிர்களையும் உண்ணக் கொடுக்கலாம். சுனை அதிகமுள்ள இலை மற்றும் புற்களைத் தவிர்க்க வேண்டும். கால்நடைமருத்துவரின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்ட ஆடுகளில் ஏற்படும் புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவிவிட்டு கிருமிநாசினி களிம்புகளை புண்களில் தடவ வேண்டும். அல்லது வேப்ப இலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து வாயைச் சுற்றியுள்ள புண்களில் தினமும் ஒருமுறை தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

வாய்க்கு உள்ளே புண்கள் இருந்தால் தினமும் இருமுறை கிளிசரினைத் தடவவேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளை பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஊசி மூலம் செலுத்துவதன் மூலம் நுண்ணுயிரிகள் பாதிப்பினால் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்