ஆடுகளைத் தாக்கும் ஆட்டுக் கொல்லி நோயும் தடுப்பு முறைகளும்

ஆடுகளைத் தாக்கும் ஆட்டுக் கொல்லி நோயும் தடுப்பு முறைகளும்

தமிழகத்தில் ஆடு வளர்ப்புத் தொழிலானது ஒரு பழமையான தொழிலாகும். குறைந்த முதலீடும் அதிக வருமானமும் இத் தொழிலில் உள்ளதால் ஆடுகள் ஏழைகளின் பசுக்கள் என்றும், நடமாடும் பணவங்கிகள் என்றும் போற்றப்படுகின்றன. ஆனால் ஆடுகளை முறையான பராமரிப்பின்றி வளர்க்கும் பொழுது ஆடுகள் நோயினால் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் இறக்கும் பொழுது ஆடு வளர்ப்போருக்கு பெருத்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி விடும்.

அவ்வகையில் ஆட்டுக் கொல்லி நோய் எனப்படும் பி.பி.ஆர் நோயானது ஆடுகளில் அதிய அளவில் பொருளாதார இழப்பினை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்நோயானது ஆடுகளுக்கு மார்பிலி வைரஸ் எனப்படும் நச்சுயிரிக்கிருமியால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

நோய் அறிகுறிகள்

நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிக காய்ச்சல் 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். ஆடுகள் சோர்ந்து காணப்படும். சரியாக மேயாது. கண்கள் சிவந்திருக்கும். கண்களிலிருந்து நீர் ஒழுகும். மூக்கிலிருந்து சளி ஒழுகும். சில சமயம் இருமல் இருக்கும். முதல் இரண்டு தினங்கள் மலச் சிக்கல் இருக்கும். மூன்றாவது நாளிலிருந்து கழிச்சல் ஏற்படும்.

பிறகு சிறிய கொப்புளங்கள் வாயைச் சுற்றிலும் உண்டாகும். பெரும்;பாலும் இக் கொப்புளங்கள் உதடுகளில் காணப்படும். குறிப்பாக கீழ் உதடுகளில் காணப்படும். இவை பிறகு வெடித்து கொப்புளங்கள் இருந்த இடத்தில் சிறிய சவ்வுகள் ஒட்டிக் கொண்டு இருக்கும். இவை வாயில் தவிடு தூவப்பட்டது போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும்.

வாயில் கொப்புளங்கள் இருப்பதால் எச்சில் அதிகமாக சுரந்து வாயிலிருந்து ஒழுகும். சிறுநீர் மிகவும் மஞ்சளாக வெளியேறும். பிறகு உடல் இளைத்து படுத்த படுக்கையாகி சில தினங்களில் இறந்து விடும். இந்நோய் பண்ணையில் உள்ள எல்லா ஆடுகளையும் பாதிக்கும். நோயுற்ற ஆடுகளில் 50 முதல் 80 சதவிகித ஆடுகள் இறந்து விடும். எனவே நோய் கண்ட ஆடுகளைத் தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும்.

நோய் பரவும் முறைகள்

நோயுள்ள இடங்களிலிருந்து ஆடுகளை வாங்கி புதிதாக மந்தையில் சேர்த்தால் பிற ஆடுகளுக்கு இந்நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். நோய் கண்ட ஆடுகள் இருமும் போது வெளிப்படும் சளி மற்றும் உமிழ்நீர் ஆகியன காற்றில் கலந்து மற்ற ஆடுகளில் படும் போது நோய் தொற்றிக் கொள்கிறது. நோயுள்ள ஆடுகளின் கண் மற்றும் மூக்கிலிருந்து வடியும் நீர், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றால் நோய் பரவும். ஆட்டுக் கொட்டில்களில் இந்த நோயின் நச்சுயிரிக் கிருமிகள் 36 மணி நேரம் வரை உயிருடன் இருக்க வல்லது.

பராமரிப்பு முறைகள்

  1. நோய் கண்ட ஆடுகளை தனியே பிரித்து வாயில் உள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் கழுவி விட்டு போரிக் ஆசிட் பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து 3-4 தடவை தடவ வேண்டும்.
  2. வாயில் புண்கள் இருப்பதால் ஆடுகளால் இரை சாப்பிட முடியாது. அதனால் ஒரு வார காலத்திற்கு அரிசி அல்லது கேழ்வரகுக் கஞ்சியை உணவாகக் கொடுக்க வேண்டும்.
  3. கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்காமல் இருக்க மருந்துகள் தர வேண்டும்.
  4. கொட்டகையில் 40 கிராம் சலவை சோடாவை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து கழுவினால் நோய்க் கிருமிகள் அறவே அழிந்து விடும்.

நோய்த் தடுப்பு முறைகள்

  1. ஆட்டுக் கொட்டில்களையும், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்தல் வேண்டும்.

  2. புதிதாக வாங்கிய ஆடுகளை குறைந்தது இரு வாரங்கள் தனியே வைத்து நோய் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே மந்தையில் சேர்க்க வேண்டும்.
  3. இந்த நோய் வராமல் தடுக்க முதலில் குட்டிகளுக்கு மூன்றாவது மாதத்திலும் பிறகு வருடம் ஒரு முறையும் தடுப்பூசி போட வேண்டும்.
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்