ஆடுகளில் புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் முறை
prevention of ticks in goats

செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை பேன், தெள்ளுப்பூச்சி, உண்ணி மற்றும் சொறிப்பூச்சி முதலான ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. இப்புற ஒட்டுண்ணிகள் ஆடுகளின் இரத்தத்தை சிறிது சிறிதாக உறிஞ்சி இரத்தசோகையை ஏற்படுத்தி ஆடுகளை நலிவடையச் செய்வது மட்டுமல்லாமல் சில வகை நோய்க்கிருமிகளை ஆடுகளின் உடலுக்குள் செலுத்தி சில நோய்களை உண்டாக்குவதால் அதிக பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் உண்ணிகள் ஆடுகளின் தோல் பகுதியில் நமைச்சலை உண்டு பண்ணுவதால் ஆடுகள் சரிவர தீவனத்தை உண்ணாமல் உடல் இளைப்பதுடன் ஆடுகள் சுவற்றிலோ அல்லது மரத்திலோ உடம்பைத் தேய்த்துக் கொள்வதால் தோலில் காயங்கள் உண்டாகின்றன. பெரிய ஆடுகளில் ஒட்டுண்ணிகள் இறப்பை ஏற்படுத்தவில்லையெனினும் அவற்றின் உற்பத்தியை வெகுவாகப் பாதிக்கின்றன.
சரியான புற ஒட்டுண்ணி நீக்க முறைகளை மேற்கொள்ளாவிடில், இளம் வெள்ளாட்டுக் குட்டிகளில் புற ஒட்டுண்ணிகள் குறிப்பாகத் தெள்ளுப்பூச்சிகள், வளர்ச்சியைப் பாதித்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். ஆடுகளில் புற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆடுகளில் உற்பத்தியை அதிகரிப்பதுடன் இளம் குட்டிகளின் இறப்பையும் தவிர்க்கலாம்.
ஆடுகளில் உண்ணிகளை நீக்குவதற்கு மருந்துக்குளியல் முறை, மருந்து தெளித்தல் முறை, வாய் வழி மருந்து செலுத்துதல், ஊசி மூலம் மருந்தளித்தல் போன்ற பல முறைகள் இருந்தாலும் மருந்துக்குளியல் முறை மிகவும் எளிதான மற்றும் சிக்கனமான முறையாகும்.
மருந்துக் குளியல் முறை
இம்முறையில் ஒட்டுண்ணி நீக்க மருந்து கலக்கப்பட்ட தொட்டியில் ஆடுகளை நனைத்து எடுப்பதன் மூலமாகப் புற ஒட்டுண்ணிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மருந்துக் குளியல் அளிக்க 3 அடி நீளம் 2 அடி அகலம் 2.5 அடி உயரம் கொண்ட சிமெண்ட் தொட்டியைப் பயன்படுத்தலாம். பின் தொட்டியின் கொள்ளளவிற்கேற்ப மருந்துக் கலவை தயார் செய்ய வேண்டும்.
மருந்துக் குளியலுக்குத் தகுந்த உண்ணி நீக்கி மருந்துகளான அசன்டால், சுமித்தியான், மாலத்தியான், புயுடாக்ஸ், அமிட்ரஸ் மற்றும் ஃப்ளுமெத்ரின் போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கால்நடை மருத்துவரின்; ஆலோசனையின் படி குறிப்பிட்ட விழுக்காடு மருந்துக் குளியல் தொட்டியில் உள்ள நீரில் கலந்து மருந்துக் கலவை தயார் செய்ய வேண்டும்.
பின் ஆடுகளை குளியல் தொட்டியின் அருகில் கொண்டு சென்று அவற்றின் வால் பகுதியை தாழ்த்தியும், தலைப் பகுதியை மேலே உயர்த்தியும் பிடித்து குளிக்கச் செய்ய வேண்டும். மருந்துக் குளியல் தொட்டியில் ஆடுகளை முக்கும் பொழுது தலையைத் தவிர்த்து மற்ற உடல் பாகங்கள் மருந்துக் குளியல் தொட்டியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆடுகள் குறைந்தது ஒரு நிமிடமாவது தொட்டிக்குள் இருக்க வேண்டும். ஆடுகளைத் தூக்கும் பொழுது கழுத்துப் பகுதியில் ஒரு கையும், அவற்றின் தொடைப்பகுதியில் உள்ள தோலில் மற்றொரு கையையும் வைத்துத் தூக்க வேண்டும்.
ஆடுகளை அவற்றின் உரோமத்தைப் பிடித்துத் தூக்குதல் கூடாது. ஏதேனும் ஆடுகள் உடல் வலிமை குறைவாக இருந்தால் அவற்றை அதிகக் கவனத்தில் கையாள வேண்டும். கிடாக்களை முதலிலும், பின்பு பெட்டை ஆடுகளையும் குளிக்கச் செய்ய வேண்டும். குளியல் முடிந்த பின்னர் ஆடுகளை ஈரமில்லாமல் காய வைக்க வேண்டும்.
மருந்துக் குளியல் அளிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை
உண்ணி நீக்கி மருந்துகள் நச்சுத் தன்மை கொண்டவையாதலால் அவை உடற்புண் , தீவனம் மற்றும் நீரில் படாமலும் ஆடுகள் நக்காமலும் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். உபயோகிப்பவரும் தக்க முன்னெச்சரிக்கையாக கையுறை அணிந்து கொள்ள வேண்டும். நிறைமாத சினை ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அளிக்கக்கூடாது.
மருந்துக் குளியலுக்கு முன்பாக ஆடுகளுக்குத் தண்ணீர்; அளிக்க வேண்டும். இதனால் ஆடுகள் மருந்துக் கலவையை குடிப்பதைத் தவிர்க்கலாம். சூரியன் நன்றாகப் பிரகாசிக்கும் வெயில் நேரத்தில் மருந்துக் குளியல் செய்ய வேண்டும்.
அதனால் உடலில் ஈரமானது விரைவில் காய்ந்து விடும். தோலில் காயங்களுள்ள ஆடுகளுக்கும் நோய் வாய்ப்பட்ட ஆடுகளுக்கும் மருந்துக்குளியல் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பண்ணையாளர்கள் முதன் முறையாக மருந்துக் குளியலை மேற்கொள்ளும் பொழுது கால்நடை மருத்துவரின் ஆலோசனை மற்றும் அவரின் நேரடியான கண்காணிப்பில் செய்வது மிகவும் அவசியமாகும்.
ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அளிக்கும் அன்று இரு மடங்கு அடத்தியுள்ள உண்ணி நீக்க மருந்தை ஆடுகள்; அடைக்கும் கொட்டகைகளின் உட்புறம், சுவர் மற்றும் சுற்றுப்புறத்தின் தரைகளிலும்; தெளித்து அங்குள்ள உண்ணிகளை ஒழித்தால் தான் உண்ணிகளின் மறுதாக்குதலைத் தவிர்க்க முடியும்.
கொட்டகைகளில் தரை, உட்புறம், மேற்புறத்தில் ஓட்டைகள் இருந்தால் அவற்றை அடைத்து உண்ணிகள் அங்குத் தங்கிப் பெருக வாய்ப்;பில்லாமல் செய்வது உண்ணிகளை ஒழிக்கப் பெரிதும் உதவியாக இருக்கும். தேவைக்கேற்ப ஆடுகளுக்கு மருந்துக் குளியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அளிககும் பொழுது உண்ணித் தொல்லையை ஆட்டுப் பண்ணையில் அறவே ஒழிக்கலாம்.